1.வாழ்க்கையுடன் இச்சரீரத்தைச் சொந்தப்படுத்தாதீர்கள்
2.ஆத்மாவிற்கு இந்தச் சரீரத்தைச் சொந்தப்படுத்துங்கள்.
மனித உணர்வின் எண்ணம் சுய கௌரவத்தைக் கொண்டு தன் ஆத்ம உடலையே அடகு வைத்துள்ள நிலைதான் வாழ்க்கையின் நிலை.
உற்றார் உறவினர் எதிரி நண்பன் தன் சொந்தத்தின் ஈர்ப்புப் பிடிப்பு என்ற தொடரில் எல்லாம்
1.தன் ஆத்ம உணர்வின் எண்ணத்தை அடகு வைக்கும் வாழ்க்கையிலிருந்து
2.இச்சரீரத்தை ஆத்மாவிற்குச் சொந்தமாக்கும்
3.பிறவா நிலை பெறும் ஒளி சக்தியைப் பெறல் வேண்டும்.
கௌரவத்தின் சுயநிலை என்பது எப்படி இருந்தாலும் இந்த உடலுடன் மறையக்கூடிய நிலை தான். ஆனால் இந்த உடலுடன் எடுக்கும் தன் ஞானத்தின் மெய்ஞானம் என்றுமே வளரும் நிலை பெற்றது.
வாழ்க்கையின் நிலையே நிலையில்லா நிலைதான்...! ஆனாலும் இந்த வாழ்க்கை என்ற நிலையிலிருந்துதான் நிலைபெறும் நிலையாக இச்சரீரத்தைக் கொண்டே சகல நிலையையும் நாம் பெற முடியும்.
உணவு உண்ணும் பொழுது உண்ணக்கூடிய உணவு காரமெடுத்தவுடன் நீரைக் குடித்துச் சமப்படுத்துகின்றோம். அதிகமான இனிப்பை உட்கொள்ளும் பொழுதும் திகட்டல் எடுத்தவுடன் நீரைக் குடித்துத்தான் சமப்படுத்துகின்றோம். கடினமான பொருளை உட்கொள்ளும் பொழுது விக்கல் ஏற்பட்டவுடனும் நீரைக் குடித்துத்தான் சமப்படுத்திக் கொள்கின்றோம்.
அதைப் போன்று...
1.இச்சரீர உணர்வில் மோதும் உணர்வின் எதிர் அலைகள் தாக்கக்கூடிய ஒவ்வொரு தருணத்திலும்
2.உணர்வின் எண்ணத்திற்கு - ஞானிகளின் எண்ணமுடன்
3.சமமான சாந்தம் என்ற நல் நீரைச் செலுத்த வேண்டும்.
சரீர உணர்வில் எல்லா நிலைகளும் மோதத்தான் செய்யும். நாம் உணவு உட்கொள்ளும்பொழுது அறு சுவையையும் சமப்படுத்திச் சமைத்து உட்கொள்கின்றோம். அது போல் உணர்வில் மோதக்கூடிய எண்ணத்தை நாம் சமப்படுத்தி ஆத்மாவிற்குச் சத்தாக்க வேண்டும்.
1.உணவின் சத்தெடுத்து உடல் வாழ்கின்றது
2.உணர்வின் சத்தெடுத்து ஆத்மா வாழ்கின்றது
1.ஆத்மாவின் வாழ்க்கை தான் அழிவில்லா வாழ்க்கை
2.உடலின் வாழ்க்கை நிஜமற்ற வாழ்க்கை...!
சூரியனும் மற்றக் கோள்களும் அது அது எடுக்கும் தொடர்பு கொண்டு ஓடும் கதியில் சூரியன் எப்படி ஆறு வண்ணத்தின் வளர்ச்சியில் ஏழாம் நிலையான ஒளி நிலை பெறுகின்றதோ அதைப் போன்று
1.நாம் எடுக்கும் தியான சக்தியின் மூலம்
2.இச்சரீர உணர்வில் மோதக்கூடிய குணங்களை
3.குணத்திற்கொத்த வீரிய நிலையை “நம் உயிராத்மா சமைக்க வேண்டும்...!”