ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 20, 2023

கண்ணின் கருமணிகளைத் தூய்மைப்படுத்த வேண்டியதன் அவசியம்

பிறர் நம்மைக் குறை கூறுவதோ குற்றம் சொல்வதோ அவரவர் உணர்வுக்குத் தக்க பேசுவார்கள். உடனே நாம் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களில் ஏங்கித் தியானிக்க வேண்டும்
1.ஏனென்றால் குறை உணர்வுகளைக் கண்ணின் கருமணி தான் அதைக் கவர்கிறது.
2.அதன் வழியாகத் தான் உடலில் உள்ள நரம்பு மண்டலங்களுக்குச் (செய்தியாக) செல்கின்றது… உடல் உறுப்புகளுக்கெல்லாம் இணைக்கிறது
3.குறை உணர்வை இழுத்து நம் முன்னாடி பரப்பப்படும் பொழுது அந்த உணர்வுகளே வலுப்பெறுகின்றது
4.அதன் இயக்கத்திற்கு நம்முடைய நிலைகள் சென்று விடுகின்றது… அது நம்மை இயக்க ஆரம்பிக்கின்றது.
5.அவர் செய்யும் தவறை நமக்குள் ஏற்று அவர் வழியிலேயே நடக்கும் நிலை வருகின்றது.

ஏனென்றால் வாலி அது வலிமையானது.. அதன் வழியே நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது நம் நல்ல குணங்களை இயக்க முடியாது தடைபடுத்தி விடுகின்றது.

ஆகவே ஒருவர் குறை கூறுகிறார் என்றால் அவர் உணர்வு நம்மை இயக்கக் கூடாது. அடுத்த நிமிடமே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பெற வேண்டும் என்று
1.கண்ணின் கருமணியில் இணைக்கப்படும் போது
2.நம்மை அவர் குறை கூறிய உணர்வு அதிலே இல்லாதபடி துடைக்கின்றது… சுத்தப்படுத்துகிறது.

ஏனென்றால் கண்களால் தான் அவருடைய செயலை நாம் பார்த்தோம். கருமணிகளில் அது பட்டு அந்த உணர்ச்சிகளை உள்ளே அனுப்புகிறது. அப்போது கருமணியில் அந்த அழுக்கின் தன்மை படுகிறது.

அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கருமணிகளைச் சுத்தப்படுத்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் இந்த வலுவைச் சேர்க்க வேண்டும்.

இந்த வலுவைச் சேர்த்து விட்டால்
1.கண்களால் பார்த்த இந்த உணர்வுகள் உடல் உறுப்புகளை இயக்குவதற்கு மாறாக
2.துருவ நட்சத்திரத்தின் வலுவைச் சேர்த்து குறையை இழுக்காதபடி முதலில் தடைப்படுத்துகின்றோம்

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

இத்தகைய வலுவான உணர்வுகள் வரப்படும் பொழுது நமக்குள் அவர் முதலிலே பேசிய அந்தக் குறையான உணர்வுகளை இது தள்ளி விட்டு விடுகின்றது. நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்கிறோம்.

பின்… அவரை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்; அவர் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்; பிறருக்கு நன்மை செய்யும் உணர்வுகள் அவரிடத்தில் தோன்ற வேண்டும்; பண்பும் பரிவும் பெறக்கூடிய அந்த அருள் உணர்வு அவர் பெற வேண்டும் என்று நாம் எண்ணி விட்டால் இதன் உணர்வு நமக்குள் நல்லதை இயக்கும் சக்தியாக மாறுகின்றது.

எப்படித் தான் இருந்தாலும் பிறர் குறை கூறாமல் இருக்க மாட்டார்கள் எவ்வளவு நல்லது செய்தாலும் காசை வாங்கிக் கொண்டு செய்கின்றார் சும்மாவா கொடுப்பார்…
1.தர்மம் செய்தால் அவர் அதைச் சும்மாவா கொடுக்கின்றார்…
2.ஏமாற்றுவதற்காகக் கொடுக்கின்றார்…! என்றெல்லாம் சொல்வார்கள்.

இதைப் போன்ற மற்றவரின் உணர்வை நாம் எடுத்தால்
1.அவர்கள் மீது நமக்கு வெறுப்பும்
2.நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் மீது வெறுப்பும் ஏற்பட்டு விடுகின்றது… “நமக்குள்ளேயே…!”

இதைப் போன்ற நிலைகளை நாம் ஒவ்வொரு நொடியிலும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் பல கொடுமைகளில் இருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வின் வலுவைச் சேர்த்து தான் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியிலும் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம்.

இருந்தாலும் மனிதன் ஆன பின் இதைப் போன்ற குறைகளை நுகர்ந்தால் அதனால் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்கள் கொடுமைப்படும் நிலையை வருகின்றது.

அந்த நல்ல அணுக்கள் பலவீனம் அடையாதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்த்துச் சேர்த்து வலிமை பெறச் செய்து உயிருடன் ஒன்றி என்றும் அழியாத… பேரின்ப நிலையான… அருள் பெற வேண்டும்.

அதைத்தான் ஏகாதசி விரதம் என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.

1.கண் விழித்தவுடனே காலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
2.எந்தப் பகைமையும் நமக்குள் வளராதபடி அருள் உணர்வுகளை எடுத்து
3.பத்தாவது நிலையான கல்கியை அடைய வேண்டும்.

இந்த உபதேசத்தின் நோக்கமே அதற்குத் தான்…!