ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 28, 2023

உயிர் நமக்குக் கொடுக்கும் தீர்ப்பு

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் பல உண்மைகளை உங்களுக்கு உபதேசத்தின் வாயிலாக உணர்த்தி உள்ளோம்

ஆக… எந்த நிலையிலும் உயிர் உடலை விட்டுத் தான் வெளியே செல்கின்றது ஆனால் உடலை விட்டுச் செல்லும் பொழுது
1.வாழும் காலத்தில் நாம் எதைச் சேர்த்துக் கொண்டமோ அதற்குத் தக்க தான்
2.அடுத்து மாற்று உடலை உயிர் உருவாக்குகின்றது… உணர்வுக்கொப்ப உடலை மாற்றுகின்றது

கோடிச் செல்வங்கள் வைத்திருப்பவரும் யாரும் நிம்மதியாக இருப்பதில்லை அவர்களும் வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் சங்கடம் இவைகளை எடுக்கத் தான் செய்கிறார்கள்.

அவர்கள் உடலில் கடுமையான நோய்களாக அது விளைந்து விடுகிறது. செல்வத்தால் அவர்கள் வாங்கிய பொருள்களை அனுபவிக்க முடியாத நிலை தான் வருகின்றது… அதைப் பயன்படுத்த முடியாத நிலையும் வருகின்றது.

ஆகவே எப்படி இருந்தாலும்
1.இந்த உடலில் சிறிது காலம் தான் வாழ முடியும்.
2.வாழும் காலத்தில் ஒவ்வொரு நொடிப் பொழுதையும் யாம் சொல்லும் தியானத்தை அதிலே நெறிப்படுத்திக் கொள்ளுங்கள்.

சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ விரோதமோ அவைகளை நுகர நேர்ந்தால் அது இயங்கிடாது தடைப்படுத்திக் கொள்ளுங்கள் அதற்குத்தான் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யும்படி உங்களிடம் சொல்கின்றோம் (ஞானகுரு).

ஆத்ம சுத்தி உங்களைச் செய்யும்படி சொல்லி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்கள் உடல் உறுப்புகள் அனைத்திலும் பரவும்படி செய்து
2.அந்தச் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று நான் தியானித்து
3.உங்கள் உடலில் உள்ள அந்த அணுக்கள்… நீங்கள் எண்ணியதை ஈர்த்து அது வளரும் பருவம் பெறுவதற்கு
4.வளர்ச்சி பெறும் பருவத்தைச் செயல்படுத்துவதுதான் என்னுடைய (குருவின்) வேலை.

ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் புனிதம் பெற வேண்டும்… பரிசுத்தப்பட வேண்டும்… அசுத்தங்கள் அகற்றப்பட வேண்டும்… அருள் பெருக வேண்டும்… இருள் புகாத நிலைகள் வேண்டும்… என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்கள் உடலைக் கோவிலாக மதித்து உயிரை ஈசனாக மதித்து அந்தச் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று யாம் தியானித்துக் கொண்டிருக்கின்றோம்.

உங்கள் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்த வேண்டும். உயிர் எல்லாவற்றையும் உணர்த்தினாலும் எல்லாவற்றையும் உணர்த்தும் அறிவு இந்த ஆறாவாது அறிவுக்கு உண்டு.

உயிரைப் போன்றே உணர்வை ஒளியாக மாற்றிப் பிறவி இல்லாத நிலை அடையச் செய்வது தான் நமது குரு காட்டிய அருள் வழி.

நாம் எண்ணிய உணர்வுகள் உயிரால் இயக்கப்பட்டு அந்த உணர்வின் செயல்தான் நம்மை வழி நடத்துகிறது.
1.“மனிதனுடைய எண்ணம் தான் இதற்கு மூலமாகின்றது…”
2.எண்ணியதைத் தான் உயிர் இயக்குகின்றது… அந்த உணர்வை அணுவாக மாற்றுகின்றது
3.அதன் வழியே செயலும் நடந்து கொண்டிருக்கின்றது.

தனித்து… கடவுள் என்று ஒருவன் இல்லை…!

ஆகவே நாம் எண்ணும் உணர்வுகளில்
1.எந்தெந்தத் தீமைகளைச் செய்கிறோம் என்று அந்தக் கணக்கை உயிர் போட்டுக் கொண்டே இருக்கும்
2.அதே சமயத்தில் தீமைகள் எதையெல்லாம் நீக்கினோம்…? என்று அந்தக் கணக்கையும் உயிர் போட்டுக் கொண்டே இருக்கும்.

நமக்கு ஜட்ஜ்மெண்ட்…! தீர்ப்பு கூறுவது நமது உயிர்தான்

எதன் கணக்காக வருகின்றதோ…
1.நீ இவ்வளவு செய்தாய்… அதற்குண்டான உடலை இனி நீ பெறுவாய்
2.அதை நீ அனுபவித்துப் பார்…! என்று உயிர் தீர்ப்பு கூறி அதன் வழி அடுத்த வாழ்க்கை (ண்ஹம் வாழ்க்கை) தொடர்கின்றது.

ஆகவே உயிரை நாம் மதித்து பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் இயக்குகின்றது அதைத்தான் உடலாக்குகின்றது அதைத்தான் ஆளுகின்றது அதை எண்ணும் பொழுது அதன் வழி வருகிறது

உடலான மணமே நமக்குள் எண்ணமாகி… அந்த எண்ணத்தின் உணர்ச்சியே வாழ்க்கையின் செயலாக மாறிக் கொண்டே இருக்கின்றது.

தீமைகளை நீக்கிடும் அருள் உணர்வை ஏங்கிப் பெற்று அதை வளர்த்துக் கொண்டால் இன்றைய உலகில் படர்ந்து கொண்டிருக்கும் விஷத்தன்மைகள் நமக்குள் கவராது தடுக்க முடியும்.

எந்தச் செயலைப் பார்த்தாலும் கேட்டாலும் நுகர்ந்தாலும் பிறரின் குறைகளை அறிய நேர்ந்தாலும் அந்தத் தீமைகள் தனக்குள் வளராதபடி மனத்தூய்மையாக்க ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஆத்ம சக்தி செய்து கொண்டே வர வேண்டும்.

வாழ்க்கையில் இந்தக் கணக்கு நமக்குள் கூடினால் நம் உயிர் அதற்குண்டான தீர்ப்பாக… நம்மைப் பிறவியில்லா நிலை அடையும்படி செய்யும்.

அதிலே சிறிது தவறினால் எந்த விஷத்தின் தன்மை கூடி… எதன் அடிப்படையாக நமக்குள் அது வளர்ந்ததோ… அதன் தீர்ப்பாக உயிர் மீண்டும் நம்மைப் பிறவிக்குக் கொண்டு வந்துவிடும்.

ஆனால் இன்றைய விஞ்ஞான உலகில் நாம் மீண்டும் மனிதனாக வருவதற்கு பல்லாயிரக் கணக்கான வருடங்கள் ஆகும். இதையெல்லாம் சிந்தனையில் வைத்துக் கொள்ள வேண்டும்

நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தையும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெறச் செய்து
2.இந்தப் பிறவியில் வரக்கூடிய இருளை அகற்றி உயிருடன் ஒன்றி ஒளி உடலைப் பெறுவோம்.