கடிகாரத்தை (MECHANICAL WATCH) நாம் சாவி கொடுக்கும் பொழுது எந்த அளவிற்குச் சுற்றுகின்றோமோ... அதற்கொத்த அமைப்பு முறை கொண்டு அதனுடைய ஓட்ட முறை செயல்பாடு உள்ளது. செயல்படுத்தும் பொருள் நிலை செயலாக்கப்பட்ட நிலை கடிகாரத்தின் நிலை.
அதைப் போன்றே மனித வாழ்க்கையில் நாம் எடுக்கும் எண்ண உணர்வின் செயல்...
1.காலையிலிருந்து இரவு வரை நம்முடைய செயல்பாடு அனைத்தும் நம் புலனடங்கி உறங்கும் வரை
2.நம் எண்ணத்தில் எடுத்த உணர்வலைகள் யாவும் வினையாகச் சரீர உணர்வில் செயல்படுகின்றது
3.செயலடங்கிப் புலன் அமைதியுற்று உறங்கும் பொழுது நம் ஊனுடன் பதிவாகி விடுகின்றது.
இதே தொடரின் அலையை ஒன்றின் தொடரில் ஆவேச உணர்வில் எந்த அலையின் வீரியத்தைச் செலுத்துகின்றோமோ... பயத்துடனோ கோபத்துடனோ அச்சத்துடனோ குரோதம் வஞ்சனை என்ற எவ்வுணர்வின் வேகத்தையாவது அதிகமாக எடுத்தால்
1.அதே உணர்வின் அலையை திரும்பத் திரும்ப எண்ணி எடுக்கும் வேகத்தால் அதுவே வினையாகி
2.வினையின் பயன் எலும்புக்குள் இருக்கும் ஊனில் பதிவாகி
3.அதன் தொடர் அலையைச் சில காலங்கள் எண்ணி எடுக்கும் தொடரில்
4.நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் “விதியாகி” விடுகின்றது.
அவ்வாறு உருவாகும் விதியின் தொடரை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்று “தெரியாத செயலுடன் தான் நாம் வாழுகின்றோம்…”
ஏனென்றால் வாழ்நாளில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் உணர்வின் வேகம் பல ரூபத்தில் நமக்கு நடந்து கொண்டுதான் இருக்கும். அத்தொடரின் ஈர்ப்புகளை எல்லாம் வினையாக (விதியாக) நமக்குள் பதிவு செய்து கொள்ளாமல் நம் உயிரின் வலுவின் ஆத்ம ஒளியைக் கூட்ட வேண்டும்.
உயிரான நெருப்பில் நாம் அதில் செலுத்தும் எண்ணத்தின் உணர்வின் வாசனையைத் தான் அது சமைக்கும். அதுவாகத் தான் நம்மை மாற்றும்.
நம் பூமியின் சுவைத் தன்மை எப்படி ஆறு குணங்களைக் கொண்டு ஆறு சுவைகளை வளர்த்துக் கொண்டதோ அதைப் போன்றுதான்
1.உணர்வில் சலிப்பை வளர்க்கும் பொழுது புளிப்பும்
2,உணர்வில் கோபத்தை வளர்க்கும் பொழுது காரமும்
3.உணர்வில் இனிமையை வளர்க்கும்பொழுது இனிப்பும்
4.உணர்வில் விரக்தியை வளர்க்கும் பொழுது துவர்ப்பும்
5.உணர்வில் வெறுப்பை வளர்க்கும் பொழுது கசப்பும்
5.இப்படியாக குணத்திற்கொப்பச் சுவையில் நம்முடைய உயிர் காந்த ஜீவ சரீரம் பதிவு கொண்டு விடுகின்றது.
இத்தகைய வினையின் செயல் விதியாகும் வளர்ச்சியை நாம் மேல் நோக்கி எடுக்கக்கூடிய உணர்வின் தியானத்தால் நற்குண ஒலி கொண்டு உயர் மின் காந்த அலையை “அதிகாலையிலிருந்தே நாம் எடுக்கும் பக்குவ முறையினால்”
1.அந்தந்த வினையின் செயலுக்கு அடிமையாகாமல்
2.நற்குண ஒலியின் செயல்பாட்டில்
3.எண்ணத்தின் வேகத்தை எதிர்கொள்ளும் எதுவாகிலும் (தீய நிலைகள்) சுட்டுப் பொசுக்கும் ஆயுதமாக
4.நம் உயிராத்மாவின் சமைப்பில் உயர் ஞானிகளின் மகரிஷிகளின் மணங்களை எடுத்துத் தியானிக்க வேண்டும்.
இதன் வழி செய்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நமக்குள் விதைக்கும் வளர்ப்பாக உயிராத்மாவின் வீரிய ஒளித் தன்மையின் செயலை நாம் பெற முடியும்.
ஆகவே ஒளியான எண்ணத்தின் உணர்வை உயிராக்குங்கள்...!