ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 17, 2023

தியானத்தின் மூலம் நாம் பெறும் சக்தி “எல்லோருக்கும் பொதுவானது”

குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று பல அற்புதங்களையும் காட்டினார்.

1.என் கையை நீட்டியவுடன் ஒரு மரம் சட…சட… என்று முறிந்து விழுகிறது
2.கையை நீட்டியவுடன் மேலே பறந்து போகும் காகம் இறக்கை தன்னாலே ஒடிந்து விழுகிறது
3.ஒருவன் கெடுதல் செய்கிறான் என்றால்… இப்படி என்று ஒன்றைச் சொன்னால் போதும்… அவனை உருட்டிக் இங்கே கொண்டு வந்துவிடும்.
4.பெரிய பெரிய கல்களையும் பறக்கச் செய்து காட்டுகின்றார்.

இந்தச் சக்திகளைக் காட்டி விட்டு “இது எல்லாம் எதற்காக ஆகும்…?” என்று விளக்கத்தைக் கொடுக்கின்றனர்.

இப்படி எல்லாம் செய்தாய் என்றால் நீ அதுவாகத்தான் ஆவாய்…! மந்திர சக்திகளை எடுத்தால் இந்த நிலைக்குத்தான் ஆகும் என்றார்.

மிலிட்டரியில் இறந்தவர்கள் பழி தீர்க்கும் உணர்வோடுதான் இறக்கின்றார்கள். “அந்தக் கூலிப்படைகள் எவ்வாறு இருக்கின்றார்கள்…? என்பதை நீ பார்…!” என்று அதையும் காட்டுகின்றார்.

லெப்ட்…ரைட்… லெப்ட்…ரைட்… மார்ச்… அபௌட்…டர்ன்…! என்று என்னென்னமோ சொல்கின்றார். பார்த்தால் பூட்ஸ் அடி சத்தம் பயங்கரமாகக் கேட்கின்றது.

ஏனென்றால் “இந்த உணர்வின் ஒலி அலைகள்” அவர்கள் எடுத்துக் கொண்டது இங்கே அலைகளாகப் பரவி உள்ளது. குவித்து எடுத்து அந்த உணர்வின் ஒலியைப் பாய்ச்சினால் பெரிய கல்லையும் தூக்கி எறிகின்றது

என்றோ இறந்தவர்கள் என்று இருந்தாலும் அது மறைந்து விடவில்லை அவர்கள் உடலில் விளைந்தது யாருக்குள் சென்றாலும் இந்த உணர்வின் (பழி தீர்க்கும்) தன்மை தான் இயக்கும்.

ஆக அதை அதிகமாக நுகர்ந்தால் அடுத்தவர்களைக் கொலை செய்வதற்குக் கூலிப்படையாகப் போகலாம். இது எல்லாம் இயற்கை நிலைகள்.

ஆனால் மனிதனாக ஆனபின் நீ முழு முதல் கடவுளாக ஆகின்றாய் நான் சொன்ன முறைப்படி அருள் ஞானத்தை உனக்குள் (ஞானகுரு) உருவாக்குகின்றாய். அனைவருக்குள்ளும் அதை உருவாக்கு…!

1.இந்த உலகம் உனக்குச் சொந்தமில்லை
2.இந்த உடலான உலகமும் உனக்குச் சொந்தமில்லை
3.நீ எடுக்கும் அருள் ஞான உணர்வே உனக்குச் சொந்தமாகின்றது
4.அந்த அருள் ஒளியின் உணர்வையே சொந்தமாக்க முற்பட வேண்டும்

அனைவரும் அருள் ஞானம் பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் தான் நீ அதைப் பெறுகின்றாய்
1.”நான் பெற்றுவிட்டேன்” என்று நீ அகம் கொண்டால் அந்த விஷம் தான் உனக்குள் கூடும்
2.பெற்ற சக்திகளையும் உயர்ந்த உணர்வையும் அது அழித்துவிடும்… நீ போவது எங்கே…?
3.இருளுக்குள் தான் செல்ல வேண்டி இருக்குமே தவிர ஒளிக்குள் வர முடியாது என்று
4.இத்தனை உண்மைகளையும் காட்டிய பிற்பாடு நான் என்ன செய்ய முடியும்…!

பல பேர் எனக்குத் தொல்லை கொடுக்கின்றார்கள்… நான் அதைப்பற்றி எண்ணுவதில்லை “எனக்குத் தொல்லை கொடுக்கின்றார்கள்… என்று நான் (ஞானகுரு) எண்ணினால் தானே…!”

ஏனென்றால் இன்று இருக்கக்கூடிய பல பெரியவர்களும் சாமியார்களும் நூற்றுக்கு 90% அறியாமல் தவறுகள் செய்தே வாழ்கின்றார்கள். ஆண்டவனையே நாங்கள் கைக்குள் வைத்திருக்கிறோம் என்று மக்களை ஏமாற்றப் பழகி வைத்திருக்கிறார்கள்.

அது அவர்களுடைய உணர்வு…! இருந்தாலும் எங்கே செல்கிறோம் என்று அவர்களுக்கே தெரியாது

அந்த உணர்வை வைத்து எம்மை உற்றுப் பார்க்கப்படும் பொழுது அதே எண்ணம் என்னையும் திருடனாகத்தான் அவர்களுக்குத் தெரிய வரும் அவர்கள் அப்படித்தான் எண்ணுவார்கள்.

ஆனால்
1.என்னைப் பார்ப்போர் அனைவருக்கும் ஞானிகளின் அருள் கிடைக்க வேண்டும் என்று
2.நான் பிரார்த்தனை செய்கிறேனே தவிர யாரையும் குற்றவாளியாக எண்ணுவதில்லை.

காரணம் குற்றம் என்று பார்க்கப்படும் பொழுது அந்தக் குற்றத்தின் உணர்வுகள் தான் விளையும்… குற்றவாளியாக நம்மையும் மாற்றிவிடும்.

நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று கீதையிலே சொன்னது போன்று
1.அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணினால் நான் அதுவாகின்றேன்
2.தவறு செய்கின்றார்கள் என்று எண்ணினால் நான் எதைச் செய்தாலும் அது தவறாகத்தான் வந்து சேரும்.
3.ஏமாற்றுகின்றான்… ஏமாற்றுகின்றான்… என்று தான் வரும்… அது அவருடைய குற்றம் அல்ல.

ஆனால் அதே சமயத்தில் தவறு செய்கின்றார்கள் என்று கோபப்பட்டுக் கடுமையான ஆயுதத்தை வைத்து அவர்களை நான் வீழ்த்த எண்ணினால் அவர்கள் உடலைத் தான் வீழ்த்த முடியும். இந்த உணர்வின் தன்மை விஷத்தன்மையாக எனக்குள் விளைந்து விடும்.

அதனால் தான் யார் எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும்
1.“என்னிடம் சக்தி இருக்கிறது…” என்று அந்த வகையிலே அடக்கியாளும் உணர்வைச் செயல்படுத்துவதில்லை.
2.“ரோசப்பட்டு நான் அவ்வாறு செய்ய முடியாது…!”

அவர்களை உருட்ட வேண்டும் என்றால் உருட்டி விட்டுப் போகலாம்…! அத்தகைய அகம் வந்தால் நான் போகும் பாதையை அது தடையாக்கி விடும்.

இந்த உடலில் எத்தனை நாள் நாம் இருக்கப் போகின்றோம்…? இந்தப் புகழ் எவ்வளவு நாள் இருக்கும்…?

மற்றொருவரைக் கொன்று வீழ்த்தி… என்னைப் பார்த்தாலே அனைவரையும் அஞ்சும்படி செய்யலாம். ஆனால் எனக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் எல்லாம் அழிந்து விடுமே…! நல்ல குணங்கள் வீழ்த்த பின் நான் எங்கே செல்வது…?

ஆகையினால் மற்றவரின் போற்றுதலுக்காக யாம் எதையும் செயல்படுத்துவதில்லை

அந்த அருள் ஒளி நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்… ஒவ்வொரு உயிரும் ஒளியாக வேண்டும் என்று எண்ணுவது தான் என்னுடைய வேலை…!

நீங்களும் அதே வழிகளில் செயல்படும் பொழுது இருளை அகற்றலாம் உயிருடன் ஒன்றி ஒளியாகவும் முடியும். ஆகவே…
1.எல்லோரும் அருள் ஞானம் பெற வேண்டும் என்ற அந்தப் பக்குவத்திற்கு நீங்கள் வரவேண்டும்
2.இதை எல்லாம் நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும்.