ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 12, 2023

ஞானிகள் காட்டிய வழியில் நாம் உருவாக்க வேண்டியது

கண்ணன் துகிலை உறிந்தான்… யார்…? கிருஷ்ணன்…! குளிக்கும் பெண்களின் சேலைகளை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்தான் என்று காவியங்கள் சொல்கின்றது.

அதனின் உட்பொருள் என்ன…?

1.நம் கண்கள் ஒன்றை உற்றுப் பார்க்கின்றது… அந்த உணர்வைப் பதிவாக்குகின்றது
2.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ அந்த எண்ணத்தின் அலைகள் வரப்படும் பொழுது
3.தனக்குள் அந்த உணர்வுடன் மோதும் பொழுது (அங்கே என்ன நடக்கிறது என்பதை) அவர் திருட்டுத்தனம் செய்கின்றார்…? என்று
4.அதற்குள் அவர் உணர்வின் தன்மையை இழுக்கின்றது… அதாவது துகிலை உறிகின்றான்.
5.இந்த உணர்வின் தன்மை கொண்டு உள்ளே மறைத்த நிலைகள் செயல்படுவதை
6.உள் நின்று அந்த உணர்வை இழுத்துத் தனக்குள் அறிகின்றது - நம் கண்கள்.

இதைக் காட்டுவதற்குத் தான் உருவமாகக் காட்டி “கண்ணன் துகிலை உறிந்தான்…” என்று கருத்தினைப் பதிவு செய்கின்றார்கள்.

கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்றும் சொல்வார்கள். அதாவது ஒவ்வொரு உணர்வின் தன்மையையும் (அதற்குள் இருக்கும் வலிமையை) “தீமையை நீக்கும்” உள் இருக்கும் உணர்வை அறிகின்றது.

உதாரணமாக ஜாதகம் ஜோதிடம் பார்ப்பவரிடம் சென்று நல்லது கெட்டது பார்க்கப் போனால் தெரியும்... ஏனென்றால் அவர்கள் கண்களைத் தான் உற்றுப் பார்ப்பார்கள்.

நீங்கள் அவரைப் பார்க்காதபடி தலையை மட்டும் கொஞ்சம் குனிந்து கொண்டே இருந்தால் போதும். அவரால் ஒன்றும் சொல்ல முடியாது… பேச முடியாது.

அவர்கள் அதே எண்ணத்தில் (பழக்கத்தில்) இருக்கும் பொழுது
1.நம் கண்களை நேர் கொண்டு பார்த்த பின் உணர்வின் தன்மை மோதும் போது
2.இப்படி இருந்தது அல்லவா…! என்று நடந்ததைச் சொல்வான்.
3.அறியாமலே நாம் தலையாட்டத் தொடங்குவோம்
4.அதை பிடித்துக் கணக்கு போட்டுக் கொண்டே சொல்வான்.

அதற்குத் தகுந்த மாதிரி அவன் சொல்லச் சொல்ல… நாம் ஆமாம்… ஆமாம்… ஆமாம்…! என்று சொல்லிக் கொண்டே வருவோம் வரிசையில் அவன் சொல்லிக் கொண்டு போவான்.

ஜாதகம் ஜோதிடம் சொல்பவர் எல்லாம் இப்படித்தான் அவர்கள் வெளிப்படுத்துவார்கள் ஆனால் ஜோதிடமும் ஜாதகமும் மனிதனுக்கு இல்லை.

ஏனென்றால் அவன் தான் நமக்குள் அதைப் பதிவு செய்கின்றான். எப்படி…?

உங்கள் குழந்தை இந்த நேரத்திலே பிறந்திருக்கின்றது. இந்த நேரத்திலே இந்த நட்சத்திரத்திற்கு மிருகம் தான் பிறக்கும். ஆகையினால் அந்த குணத்தின் தன்மையாக உங்கள் குழந்தை இருப்பான்… அசுர செயல்களைச் செயல்படுத்துவான் என்று இவன் “கால்குலேஷன்” போடுவான்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஏழரை நாட்டுச் சனி பிடித்திருக்கின்றது… குடும்பத்திற்கு ஆகாது…! மிருகங்களை எப்படிக் கட்டுப்படுத்த முடியாதோ அது போல் குழந்தை அவன் உணர்ச்சிப்படியே செல்வான். அவன் பிறந்ததிலிருந்து “உங்கள் குடும்பத்திற்கு சனியன்” என்று வரிசையில் சொல்லிக் கொண்டு போவான்.

ஆனால் குழந்தை ஒன்றும் தவறு செய்யவில்லையே…!

குழந்தை பிறந்த ஜாதகத்தை… அந்தச் சட்டத்தை இவன் எழுதுகிறான். நீங்கள் நம்பிக்கையுடன் செல்லும் பொழுது இதை எடுத்து உருவாக்கி வைத்து விடுகின்றான்.

அடுத்து நாம் என்ன செய்கின்றோம்…?

இந்த உணர்வுடன் நாம் தொழில் செய்யும் இடங்களுக்குச் சென்றால் நம்மிடம் பொருளை வாங்கிச் சென்றவன் பணத்தைத் திரும்பக் கொடுப்பானா…! கொடுக்க மாட்டானா…? என்று எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்து விடுகின்றது.

இந்த உணர்வுகள் வந்த பின் சந்தேக உணர்வு அவனுக்குள் ஆனபின் அவன் கொடுக்கவே மாட்டான். இங்கே எண்ணிய எண்ணம் அங்கே செயலாகிறது.

1.ஆக… அந்த ஜாதகக் குறிப்புப் பிரகாரம் அவன் சொன்னது நமக்குள் பதிவாகி அது கடவுளாக இயங்க ஆரம்பித்து விடுகிறது.
2.அவன் தான் (ஜோதிடம் சொல்பவன்) சிருஷ்டிக்கின்றான்… எண்ணத்தால் நமக்குள் இப்படி உருவாகிவிடுகிறது.

ஆனால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குழந்தை பெற்று “அவன் இப்படித்தான் இருக்க வேண்டும்… நற்பண்புகள் நற்குணங்களுடன் வாழ வேண்டும்…” என்று கருவில் இருந்தே இப்படி வளர்த்துப் பாருங்கள்.

குடும்பத்தில் எவ்வளவு தரித்திரம் இருந்தாலும் அது நீங்கிவிடும். அத்தகைய சக்தி பெற்ற வல்லமை பெற்றவனாக அவன் மாறுவான். நீங்கள் இதைத்தான் உருவாக்க வேண்டும்.

ஆனால் இன்று வழக்கத்தில் நாம் எப்படி இருக்கின்றோம்…?

குடும்பத்தில் கர்ப்பம் என்று இருந்தாலும் கூட ஆயிரம் சண்டைகள் போடுவோம்.
1.இதெல்லாம் கர்ப்பிணிப் பெண்ணுக்குள் பதிவான பின் குழந்தை உருவாகிப் பிறந்த பின்
2.அவன் அதே குணத்துடன் எல்லோருடன் சண்டை இழுத்துக் கொண்டிருப்பான்.
3.ஊரில் இல்லாத வம்பை எல்லாம் இழுத்துக் கொண்டு வருவான்.

காரணம்… சண்டையிட்ட உணர்வுகள் தாய்க்கு ஊழ்வினையாகப் பதிவானது. கருவிலே விளையும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகின்றது.

குழந்தை உருவாகும் பொழுதே மகரிஷிகள் சக்தி என் குழந்தை பெற வேண்டும். அந்த அருள் ஞானம் பெற வேண்டும்… உலக ஞானம் பெற வேண்டும்… தீமைகளை அகற்றிடும் அந்தச் சக்தி பெற வேண்டும்… நஞ்சை வென்றிடும் உணர்வுகள் பெற வேண்டும்… என்று தாயும் சரி குடும்பத்தில் உள்ள அனைவரும் சரி இப்படிச் சொல்லிப் பாருங்கள்.
1.ஞானிகளுடைய உணர்வுகளை எடுத்து
2.அருள் ஞானக் குழந்தைகளை வளர்த்துப் பாருங்கள்

அக்கால அரசர்கள் வல்லமை பெற்ற குழந்தைகளை இப்படித் தான் உருவாக்கினார்கள்… ஆனால் மக்கள் யாரும் செய்யவில்லை.

அரச குடும்பத்தில் கர்ப்பம் ஆகிவிட்டார்கள் என்று தெரிந்தாலே கர்ப்பிணித் தாய்க்கு பலவிதமான விஷங்களையும் பலவிதமான போதனைகளையும் கொடுத்து… அந்தக் கருவிலேயே விஷமான உணர்வுகளை ஏற்றி… எந்த விஷமும் பாதிக்காத அளவிற்குத் தன் நாட்டினுடைய பெருமைகளைச் சொல்லி சக்தி வாய்ந்த குழந்தைகளை அன்று உருவாக்கினார்கள்.

விஷத்தின் ஆற்றலால் தான் (எல்லாமே) வலிமை பெற்றது. அந்த உணர்வைக் கொடுத்துக் கொடுத்து அந்த விஷத்தை ஏற்றி வைத்துத் தாயினுடைய இரத்தத்தின் வழி குழந்தைக்கு அது போய்ச் சேரும்படி செய்தார்கள். மிருகத்துக்கு ஒத்த வலு அந்தக் குழந்தைக்கு வருகின்றது

அதே சமயத்தில் பல போதனைகளையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.

நாட்டினுடைய நன்மை பெருமைகள்… எதிரிகளைப் பற்றிய உண்மைகள்… எதிரிகளை எப்படி வீழ்த்த வேண்டும்…? இராஜதந்திரங்களை எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்று கதையைச் சொல்லிக் கொண்டே வருவார்கள்.

இந்த கர்ப்பிணி அதை கேட்டுக் கொண்டே இருக்கும். அரச குழந்தைகளை இப்படித்தான் அன்று உருவாக்கினார்கள். ஆனால் மக்களிடம் சொன்னால் யார் கேட்கின்றார்கள்…?

அன்று அரசர்கள் எப்படி உருவாக்கினார்களோ அது போன்று
1.அந்த ஞானிகள் காட்டிய வழியில் மெய் ஞானிகளை
2.உலகைக் காத்திடும் சக்திகளை நாம் உருவாக்க வேண்டும்… உருவாக்க முடியும்