ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 10, 2023

குருநாதர் காட்டிய வழியில் எத்தனையோ மகான்களை விண் செலுத்தினோம் - ஞானகுரு

போகருடைய தாயை ஒரு விஷம் கொண்ட பாம்பு தீண்டி விடுகின்றது. காளிங்கராயன் என்பவரை போகர் அப்போது அணுகுகின்றார்.

தன் தாயைக் காக்க வேண்டும் என்ற நிலையில் அவரிடம் பல பச்சிலை மூலிகைகளை அறிந்து அதை வைத்துத் தன் தாயை எழுப்புகின்றார். விஷத்தின் தன்மை எவ்வாறு ஒடுக்குவது…? என்று அவரிடம் பழகித் தெரிந்து கொள்கின்றார்.

விஷத்தை ஒடுக்கும் உணர்வினைத் தனக்குள் அதன் உணர்வின் அறிவாக தெளிந்த நிலையில் கொண்டு வருகின்றார். போகர். அதன் வரிசையில் தான் பல ஆற்றல்கள் அவருக்குள் பெருகத் தொடங்கியது.

1.நட்சத்திரங்கள் கோள்கள் இயக்கங்களையும் அறிகின்றான்… வான மண்டலத்தையும் அறியத் தொடங்குகின்றான்.
2.இதையெல்லாம் அறிந்த பின் அவன் இன்னொரு கூட்டிற்குள் (உடலுக்குள்) செல்லவில்லை
3.ஒளியின் தன்மையைப் பெருக்குகின்றான்…
4.ஒளியின் தன்மை ஆனாலும் உந்தித் தள்ளி விண்ணுக்கு அவனை அனுப்பும் வழி இல்லை.
5.ஏனென்றால் அதற்குண்டான முகப்பு வரவேண்டும்… இருந்தாலும் அந்த ஒளி அலைகள் வருகின்றது.

குருநாதர் போகரைப் பற்றிச் சொல்லும் பொழுது அவன் பெரிய திருடன்… வானத்தையே திருடி இருக்கின்றான்…! ஆனால் விண்ணுக்குப் போகும் வழியைத் திருடத் தெரியவில்லை…! நீயும் ஒரு திருடன் ஏன்று என்னிடம் (ஞானகுரு) சொல்கின்றார்.

அப்பொழுதுதான் இந்த உணர்வின் தன்மை எடுத்து
1.போகருக்கு நீ அந்த விண் செல்லும் பாதையின் உணர்வைச் செலுத்து
2.அந்த உயர்ந்த உணர்வுகளை… நினைவுகளை எடு
3.அவருடன் தொடர்பு கொள்… அந்த உணர்வின் துணை கொண்டு இந்த முகப்பைக் கூட்டு.
4.ஒளி நிலை பெற வேண்டும் என்று அந்த அருள் ஒளியை அவரிடம் இருந்து நீ பெறு
5.ஏனென்றால் உயர்ந்த சக்தி பெற்றவர்.. அந்த உணர்வின் துணை கொண்டு விண்ணுக்குச் செலுத்து என்றார் குருநாதர்..

இப்படித்தான் இராமலிங்க அடிகள்… காந்தியடிகள்… விவேகானந்தர் என்று இது போன்று ஏனைய எத்தனையோ மகான்களை விண் செலுத்தும்படி செய்தார் குருநாதர். “ஒன்று இரண்டு அல்ல…”

ஒவ்வொருவரும் தத்துவங்களைத் தனக்குள் வளர்த்துக் கொண்டாலும்
1.விண் செல்லும் பாதையை அந்த முகப்பின் தன்மை எவ்வாறு அவர்களுக்குச் சேர்க்க வேண்டும்
2.ஆன்மாக்களை எவ்வாறு விண் செலுத்த வேண்டும் என்று தெளிவாக கூறினார்.

இந்தப் பழக்கத்தை எல்லாம் ஏற்பபடுத்திய பின்பு தான் அவருக்கும் “தனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும்” என்று குருநாதர் இந்த வேலையைச் செய்தார்.

ஏனென்றால்
1.அவர் (ஈஸ்வரபட்டர்) எத்தனையோ உடல்களைத் தாவியவர் தான்
2.தகுந்த உடல்கள் பெறவில்லை… அதற்குத் தகுந்த உணர்வுகள் கிடைக்கவில்லை
3.அவரவர்கள் இச்சைக்குத் தான் செல்கின்றார்கள்.
4.(குரு தன்மை அடைவதற்கு இப்படி எத்தனையோ நிலைகள் இருக்கின்றது).

அண்டத்தின் சக்தி இந்தப் பிண்டத்திற்குள் எப்படி இருக்கின்றதோ அதைப் பெறக்கூடிய தகுதியாகத் தான் முருகன் சிலையை வைத்தான் போகன். அது யாருக்கும் தெரியாது.

போகன் சிலையை மாற்ற வேண்டும்… வைக்க வேண்டும்… என்று பல பேர் வந்து கேட்டார்கள். அந்த மாதிரிச் செய்ய முடியாது. ஏதாவது மீறித் தொட்டீர்கள் என்றால் குடும்பம் எல்லாம் நாஸ்தி ஆகிவிடும்… தொடும் குடும்பம் எல்லாம் நாஸ்தியாகிவிடும் என்று சொன்னேன்.

உயர்ந்த சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சிலையை வைத்தான் போகன்.

ஆனால் தனித்த நிலைகள் கொண்டு சுயநலத்திற்காக வியாபாரத்திற்காக அந்தச் சிலையைப் பயன்படுத்தினால் அவன் யாரும் உருப்பட மாட்டான்.

ஏமாற்றும் நிலைகள் கொண்ட எவனும் இங்கே உருப்படியாக மாட்டான். மற்ற கோவில்களில் செய்வது வேறு… அங்கிருக்கக்கூடிய சிலைகள் வேறு. பழனி முருகன் சிலை அப்படிக் கிடையாது. அத்தனை பெரிய அணையை போகன் இங்கே போட்டு வைத்திருக்கின்றார்.

தவறு செய்ய முடியாது… தவறு செய்தான் என்றால் நொறுங்கிப் போவான். உணர்வின் தன்மை விஷமாகிவிடும். விஷத்தை உட்கொண்டால் எப்படி நினைவிழக்கச் செய்யுமோ… புழுவாக பூச்சியாக பாம்பாகத் தான் அடுத்து பிறக்க நேரும்.