ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 10, 2022

பக்தி எது…?

பக்தி என்பது நாம் சிலையை வணங்குவதும் அபிஷேகம் செய்வதும் தெய்வத்திற்குக் காசைக் கொடுப்பதும்… போன்ற நிலை உள்ளது. அங்கே அதன் வழியில் சாமியாராக உட்கார்ந்திருப்பவன்
1.நான் கடவுளையே கைவல்யப்படுத்தி வைத்திருக்கின்றேன்…! என்று மந்திரத்தைச் சொல்வான்.
2.பக்தியில் சென்ற ஆவியைத் தனக்குள் எடுத்து வைத்திருப்பான்.
3.நாம் அவனிடம் வந்தவுடனே நீங்கள் என்னென்ன எண்ணியிருக்கின்றீர்கள்…? என்பான்
4.இன்னென்ன மாதிரிச் செய்திருக்கிறீர்கள்…! என்று சொன்னவுடனே அவனே நமக்குக் கடவுளின் தூதுவனாகின்றான்.

அதன் நிலைகள எடுத்துக் கொண்ட பின் இவன் மீண்டும் அசுரனாகின்றான். ஆசையின் நிலைகள் தனக்குள் வரப்படும் போது தவறு செய்யத் துணிகின்றான் (சாமியார்).

பக்தி என்ற நிலை இப்படி வரும் போது நம்மை அறியாமலே அவன் செய்யும் தவறான உணர்வை நமக்குள் நுகர்ந்து விடுகின்றோம்.

இப்படிப்பட்ட சாமியார்கள் உலகில் பக்தி கொண்டோரை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். நரகலோகத்திற்கு அனுப்பும் உணர்வைத் தான் வளர்க்கின்றனர். ஆக… நல்லதைப் பெறும் நிலைகளை இழந்து நம்மையே வாட்டிக் கொண்டிருக்கின்றோம்.

பக்தி கொண்ட நிலையில் நாம் கடவுளை வணங்குகின்றோம் என்றால் வணங்குவோருக்கு
1.பக்தி கொண்ட நிலையில் நமக்கு ஏன் தெய்வம் இதை உணர்த்தவில்லை…?
2.மற்றவர்கள் சிரமப்படுகின்றார்கள்… சிரமத்திலிருந்து மீட்ட வேண்டும் என்ற நிலைகள் ஏன் வரவில்லை
3.தவறு செய்வோருக்குத் தெய்வம் உடந்தையாக இருக்கின்றதா…?
4.அபிஷேகமும் ஆராதனையும் காணிக்கையும் கொடுத்துவிட்டால் அவர்களை மட்டும் அந்தத் தெய்வம் காக்கின்றதா…?
5.நமக்கு நல்ல உணர்வைத் தெய்வம் ஊட்டவில்லையா…? ஊட்டுகின்றதா…? என்ற எண்ணங்கள் ஓடுகிறது.

ஆனால் இந்தப் பூமியில் இந்தப் பரமாத்மாவைச் (காற்று மண்டலத்தை) சுத்தப்படுத்துவதற்காகத் தான் அன்று ஒவ்வொரு மாதங்களிலேயும் விழாக்களை வைத்தார்கள் ஞானிகள்.

விநாயகர் சதுர்த்தி அன்று மக்கள் அனைவரையும் ஏகோபித்த நிலைகள் கொண்டு தீய வினைகளைத் தடுத்து நிறுத்தும்படி செய்யச் சொன்னார்கள்.

களிமண்ணால் விநாயகரைச் செய்து அபிஷேகம் செய்து ஆராதனை செய்து அதைக் கொண்டு போய்க் கடலில் கரைத்துவிட்டால் அதற்காக நம்மை வணங்கினான் என்று மெச்சி நமக்கு எல்லாமே கொடுக்கின்றாரா…? என்றால் இல்லை.

ஆக நம் வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் வெறுப்பு வேதனை கோபம் பயம் என்ற உணர்வுகள் உடலிலே அதிகரித்திருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு அதை எல்லாம் வளராது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற முறைகளைத் தான் கடைப்பிடிக்கச் சொன்னார்கள்.

ஈஸ்வரா…! என்று தன் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் நாங்கள் பார்க்கும் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும் எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும் என்று இந்த உணர்வை நமக்குள் வளர்த்துவிட்டால் தீய வினைகள் உருவாகாதபடி தடுக்கப்படுகிறது.

குடும்பத்திலோ… கொடுக்கல் வாங்கலிலோ… தொழில் செய்யும் இடங்களிலோ… வெறுப்பு என்ற உணர்வை இங்கே உள்ளே புகவிடாது அது தடுக்கப்படுகின்றது.

அதிகாலை நான்கிலிருந்து காலை ஆறு மணிக்குள் ஏகோபித்த நிலைகள் கொண்டு
1.எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இந்த முறைப்படி செய்தால்
2.தீமையான அணுக்கள் நம் ஈர்ப்புக்குள் வராதபடி உடலுக்குள் வளராதபடி தடுக்கின்றது.

அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணங்கள் கூட்டமைப்பாக வெளிவரப்படும் போது பூமியிலிருக்கும் அந்தத் தீமை செய்யும் உணர்வுகளைக் காலை ஆறு மணிக்குச் சூரியன் மேலே எடுத்துக் கொண்டு செல்கிறது.

அங்கே சூனிய நிலைகளுக்குச் சென்ற பின் கடலுக்குள் சென்று கடல் அலைகளுக்குள் அமிழ்த்திக் கரைத்துவிடுகிறது. நம் பரமாத்மா சுத்தமடைகிறது… நம் ஆன்மாவும் தெளிவாகிறது.

அருள் ஒளி பெறும் அந்த உணர்வின் தன்மை நமக்குள் தெளிவாகிறது. நம்மை அறியாமல் வரும் நிலைகளை இப்படித் தான் கரைக்கும்படி அன்று ஞானிகள் சொன்னார்கள்.

ஆகவே நாம் எதைப் பக்தி கொள்ள வேண்டும்…?

1.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் எண்ண வேண்டும்.
2.நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டும்.
3.ஒவ்வொரு உயிரும் கடவுளே… அந்த உடலை உருவாக்கிய ஒவ்வொரு குணங்களும் தெய்வமே…!

அந்த வழிகளில் மனிதனின் செயலாக்கம் உரு பெற்றுக் கொண்டு வந்தது.

ஆகவே மற்றவர்கள் உயர வேண்டும் என்றால் அந்த உணர்வு எனக்குள் தெய்வமாகிறது. இந்தப் பண்பினை வளர்ப்பதற்குத் தான் இதைச் செய்தார்கள்.

யாராவது நாம் சற்று சிந்தித்துப் பார்க்கின்றோமா…? இல்லை…! இல்லை என்ற பதில் தான் வரும். இதிலிருந்து நாம் மீள வேண்டும். பக்தி எது என்பதை நாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.