ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 15, 2022

வாழ்ந்த பயனையெல்லாம் கல்கியில் கண்டிடலாம்

ஜீவன் பிறந்து அந்த ஜீவன் வளர்வதற்கு அந்த ஜீவனுக்கு ஆகாரம் தேவை. எல்லா ஜீவராசிகளுக்குமே ஆகாரம் தேவை. மற்ற ஜீவராசிகள் எண்ணமெல்லாம் தன் ஆகாரத்தை எந்த நிலையில் பெறுவது என்ற ஒரே குறிதான். ஜீவன் எடுத்து முடியும் வரை அதன் எண்ணமெல்லாம் அதன் ஆகாரத்தை எடுத்துப் புசித்து உண்டு வாழ்ந்து மடிவதுவே.

ஆறறிவு படைத்த ஜீவனுள்ள மனிதனுக்கு அவ்வாகாரத்தை அடைவதற்குத் தன் அடுத்த அறிவைப் பயன்படுத்துகின்றான் என்கிறார்கள். அடுத்த அறிவு என்பது ஜீவராசிகளுக்கு உள்ள அறிவைவிட மனித அறிவு உயர்ந்தது ஐந்தறிவு ஆறறிவு என்று சொல்கின்றார்கள்.

எறும்பிற்கும் ஐந்து அறிவுதானா...? யானைக்கும் ஐந்து அறிவு தானா...? இவர்கள் சொல்வது போல் ஜந்துக்களுக்கு ஐந்து அறிவும் அல்ல.. மனிதனுக்கு ஆறு அறிவுமல்ல...!

அவனவன் செய்த பாவ புண்ணியங்களில் எடுத்திட்ட பிறப்பிற்கு இவன் மனிதனாகின்றான். அது செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப மிருகமாகின்றது மற்ற ஜீவராசியாகிறது. மனித உடலில் உள்ள எல்லோருமே அவர்களுக்கு அளித்த ஆறு அறிவைப் பயன்படுத்துகிறார்களா...?

ஆறறிவு படைத்த மனிதன் என்பதெல்லாம் மனிதனில் இருந்து மாறுபடும் ஜீவராசிகளுக்கு மனிதனின் நிலை மாறுபடுகின்றதல்லவா...? மற்ற ஜீவனுக்கும் மனிதனுக்கும் உள்ள நிலை பிரித்துக் காட்டிடப் பகிர்ந்திட்டேன் இவையெல்லாம்.

மனிதன் ஜீவிப்பதற்கு அவனுடைய ஜீவாதாரம் மிக முக்கியம். மனித நிலையும் மிருகத்தின் நிலையும் மாறுபடுகின்றது என்றேன். மனிதனின் நிலையில் இருந்து அவன் வாழ்வதற்கு ஜீவனுள்ள ஜீவாதாரத்திற்குப் பொருள் முக்கியம். இன்றுள்ள மனிதர்களுக்கு பொருள் முக்கியம்.

ஆதியில் மனிதன் அன்னம் புசித்திடவில்லை. தன் இனத்தை தன்னைத்தானே அடித்தும் உண்டிட்டான். இராமாவதாரத்திற்கு முன்பு மனிதர்களெல்லாம் மிருக நிலையில் இருந்தவர்கள்தான். ஒன்றை ஒன்று அடித்துத் தன் பசியைப் போக்கிக் கொண்டவர்கள் பிறகு ஒரு நிலையில் தன் இனத்தைத் தவிர மற்ற இனத்தை அடித்துப் புசித்திட்டார்கள்.

அதற்கு அடுத்த நிலையில் வந்தவர்கள் தன்னிச்சையில் வளர்ந்த காய்கறிகள் இலைளைப் பறித்துப் புசித்திட்டார்கள். அந்நிலையில் ஒரு உலகம் சுழன்று கொண்டிருந்தது. அவ்வுலக நிலை மாறித்தான் அந்நிலையில் இருந்து மீண்டவர்கள் இராமாவதாரத்தில் வந்து தேவர்கள் என்ற பெயருடன் புதிய உலகம் கண்டார்கள்.

இராமாவதாரத்தின் சுழற்சியில் வந்த கடைசிக் கலி இது. இக்கலியின் தன்மை மாறி கல்கி சுழலப் போகின்றது. இராமாவதாரத்தில் இருந்துதான் இந்த ஜீவாதாரத்திற்குப் பொருள் தேடி தன் வழியில் அப்பொருளைத் தேடிப் பக்குவம் செய்து புசித்திட்டான்.

இராமாவதாரத்தில் இருந்த நிலை பெரும் நிலையப்பா. காலப் போக்கில் கிருஷ்ணாவதாரத்தில் வந்ததப்பா பெரும் கஷ்டங்கள் எல்லாம். ஆதியில் மனிதன் மனிதனையே அடித்துப் புசித்திட்டான். இராமாவதாரத்தில் இருந்த உலகத்தில் தப்பி வந்தவன் தான் கிருஷ்ணாவதாரத்தில் உதித்திட்டான்.

அந்நிலையில் ஜென்மங்கள் மாறி கிருஷ்ணாவதாரத்தில் வந்தவர்கள் எல்லாரும் ஒருவனை ஒருவன் வஞ்சனையாலும் பெரும் சூழ்ச்சியினானும் சிக்க வைத்துப் பொருளைச் சம்பாதித்து மகிழ்ந்தான்.

கிருஷ்ணாவதாரத்தில் வந்தவர்கள் எல்லாரும் தன் நிலையை உயர்த்திட...
1.உயர்த்திட என்பது அவர்கள் வழியில் பொருளைச் சேர்த்து வைத்திட
2.பெரும் புதையல் பொக்கிஷம் புதைத்து வைக்கும் நிலையை உண்டு பண்ணினார்கள்.
3.அந்நிலையில் இருந்து வந்த இக்கலி மனிதர்கள்தான் செயற்கை யுகத்தைக் கலந்திட்டார்கள்.
4.காலப்போக்கில் அச்செயற்கையின் தன்மைக்குப் பொருளைத் தேட மிக முக்கியமான ஜீவாதாரத்தின் வழியையே மாற்றிவிட்டார்கள்.

ஜீவன் தோன்றி வளர்வதற்கு அப்பொருள் முக்கியமப்பா. தன் ஜீவனை வளர்த்திடத் தன் வாழ்க்கைக்கு வேண்டியதை எண்ணுவதில்லை இம் மனிதர்கள். பெரும் செயற்கையின் காலத்தில் தள்ளுகிறார்கள் இம் மனிதர்கள்.

இச்செயற்கை ஆசையின் உந்தலினால்தான் ஜீவாதாரத்தின் தன்மையையே மாற்றித் தான் மகிழ என்ற நிலையையும் எடுக்கின்றார்கள்.

ஜீவாதாரத்தை மறந்து மதம் மதம் என்று செயற்கையுடன் கலக்கி விட்டார்கள்.
1.தான் பிழைக்கும் வழிக்குத்தான் எல்லாமே...! என்கின்றார்கள்.
2.தான் பிழைக்கும் வழிக்குப் பெரும் சொத்தைச் சேர்க்கின்றார்கள்.
3.பிழைக்கும் வழிக்குச் சொத்து எதற்கப்பா...?

சொத்து என்று சேர்ப்பது என்னப்பா...?

அவர்கள் வழியில்... பணம் காசு தான் “சொத்து...!” என்கின்றார்கள். பெரும் சொத்து... அதுவல்லப்பா...!

தான் பிறந்து வளரும் நிலையில் தன் ஜீவாதாரத்தில் “போதும்...!” என்ற நிலையில் பெற்ற பயனை எடுத்து
1.மறற மக்களுக்கு நல்லறிவைப் புகட்டி தர்ம நியாயம் அளிப்பவனும்
2.தான் பெற்ற மக்களை நல்லுணர்வுடன் வளர்ப்பவனும்
3.தான் என்றால் யார்...! என்று புரிந்து நடப்பவனும் அடைந்த சொத்துத்தானப்பா பெரும் சொத்து.

இக்கலியில் அந்நிலையில் வாழ்வது பெரும் அரிது. அரிதப்பா அரிது. இக்கலியில் இருந்து தப்புவது அரிது. கலியில் உள்ள மனநிலையெல்லாம் மற்றவனைப் பார்த்துத்தான் தன் நிலையில் வாழ்கின்றான். இது புரிந்ததா...?

மற்றவர்களைப் பார்த்து அவன் அந்நிலையில் வாழ்கின்றானே... தன் நிலை அப்படி இல்லையே...! தானும் அவனைப் போல் வாழ்ந்திட முடியவில்லை என்கிற பொழுது அவனைப் பார்த்துத் துவேஷ எண்ணமும் தன் நிலையில் பெரும் சோர்வும் அடைகின்றான்.

இந்நிலையில் உள்ளவனின் நிலைதான் இக்கலியில் உள்ளவர்கள் நிலையெல்லாம். ஜீவாதாரத்திற்கு ஆசை வேண்டுமப்பா. ஆனால் பெரும் பேராசைக்காரன் அப்பா இக்கலியின் மனிதன்.

இவன் விட்ட சுவாசத்தினால் இக்காற்று மண்டலமே பெரும் கரியாகிவிட்டதப்பா...! இந்நிலையில் வளரும் பயிர்களை உண்டவன் அவன் எப்படி அப்பா இருப்பான்...?

இவன் விட்டிடும் நஞ்சுக் காற்றுடன் சுற்றிடும் உலகம் வேறு எப்படியப்பா இருந்திடும்? ஜீவாதாரத்தையே மாற்றி விட்டான்...! ஜீவனுக்கே பெயர் வைத்துவிட்டான்... ஆறறிவு ஐந்தறிவு என்று...! பாட நிலை புரிந்ததா...!

கல்கி அவதாரத்தில் ஆரம்பித்துக் கலிக்கு வரும் உலகம் காலம் மாறி மீண்டும் இதே சுற்று நிலை வரும். கல்கியில் வந்த உலகம் சுற்றும் நிலையில் கல்கிக்கே வருகின்றது. இந்நிலையில் வடிகட்டி வந்தவர்கள்தான் கல்கியில் அவதரிக்கின்றார்கள். இந்நிலையில் கல்கியில் அவர்கள் நிலையை வைத்துத்தான் பிறகொரு உலகம் வந்திடுமப்பா.

அந்நிலையில் மண்டலங்களின் தன்மை மாறுபடுகின்றன. உலகத்தன்மையில் உணர்வெல்லாம் இவ்வுலகத்திற்கும் கல்கியில் வரும் உலகத்திற்கும் மாறுபடுகின்றது.

மனிதனின் எண்ணமும் செயலும் மாறுபடுகின்றன. அந்நிலையில் வாழ்பவர்கள் உயர்ந்த எண்ணத்தில் அந்நிலையை எய்திடத்தான் இப்பாடங்கள் எல்லாம் கல்கியில் வரும் அவதாரங்கள்தான்.

இந்த வாழ்க்கையில் வரும் அற்ப ஆசைகளை மறந்துவிட்டு பெரு நிலையை எய்திடப்பார்...! அந்நிலையில் பெருநிலையை எண்ணிவிட்டால் பெற்றிடுவான் இந்நிலையில் பெருநிலையை...!
1.நான் வாழ்ந்தென்ன பயன்... நான் வாழ்ந்தென்ன பயன் என்கின்றார்கள்...!
2.வாழ்ந்த பயனையெல்லாம் கல்கியில் கண்டிடலாம்.

பெருநிலையை எய்திடவே என்பது இவ்வுலக வாழ்க்கையில் சுற்றி வந்தவர்களெல்லாரும் பெரு நிலை எய்திக் கல்கிக்கு வருபவர்களே. எல்லாச் சித்தர்களும் ஞானிகளும் காலகாலமாகத் தவமிருந்த தவசிகளும் பெருநிலையை எண்ணித்தான் கல்கிக்கு வருகின்றார்கள். அவர்களுடன் கலந்திடலாம்.

இக்கலியில் இப்பொழுது வாழும் மனிதர்களில் முதல் ஜென்மத்தில் விட்ட குறையை இந்த ஜென்மத்தில் எய்திவிட்டால் அப்பெருநிலையான கல்கியில் நாமும் கலந்திடலாம் பலகோடித் தேவாதி தேவர்களுடனும். பாட நிலை புரிந்ததா...?

விடிய விடியக் கேட்டுவிட்டு விக்கல் நிற்க என்ன மருந்து…? என்று கேட்டால் நினைவின் எண்ணத்தில் வருவதுதான் அவ்விக்கல். அவ்விக்கலுக்கே மருந்து தேடினால் விக்கலுக்கு ஏதப்பா மருந்து...?

1.விக்கலுக்கு மருந்து இல்லை
2.எண்ணும் எண்ணத்திற்கும் மருந்தில்லை.
3.விடியும் விடிவிற்கும் மாற்றில்லை.
4.ஈசனின் சக்தியில் உதித்ததப்பா உனக்குள்ளே அவ்வெண்ணம்.
5.புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனுடன் ஒன்றிய நிலையில் ஜெப நிலையில் மனநிலையைக் கலந்திடப்பா.
6.உன் நிலைக்கே புரிந்துவிடும் உன் நிலை என்ன என்று...?