ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 28, 2022

செல்வம் தேடக் கோடிக்கணக்கான சிந்தனைகளைச் செலுத்தினாலும் தனக்குள் வரும் பகைமைகளை நிர்வகிக்கும் திறன் இருக்கின்றதா...?

வாழ்க்கை என்ற நிலைகளில் செயல்படும் போது “ஒரு எஞ்சினியர்” அவர் கண்டுபிடித்த கருவியை உருவாக்குவதில் கால தாமதமானால் வேதனை என்ற உணர்வு அவருக்குள் அதிகமாகிறது.

இப்படி வேதனையை உருவாக்கி விட்டால் பின் அதனுடைய நிலைகள் ஆன பின் அந்த இயந்திரத்தைச் சீராகப் பயன்படுத்த முடியாது.

காரணம்... வேதனை என்று வரப்படும் பொழுது சிந்திக்கும் தன்மை இழந்தால் அருகில் இருக்கும் தன்னுடைய சிஷ்யனை (தன்னிடம் வேலை செய்பவனை) கோபித்துப் பேசுவான்.

அவன் சொன்னபடி சரிவர செய்யவில்லை என்றால்... சரியான பதில் சொல்லவில்லை என்றால் “போடா அறிவு கெட்டவனே... ஏன்டா இப்படிச் செய்கின்றாய்...?” என்று சீறிப்பாயும் தன்மை தான் வரும்.

ஏனென்றால்...
1.மனிதன் தான் நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள் - உயிருடன் ஒன்றி உணர்வின் பொறிகள் இயக்கி
2.அந்த உணர்வு எப்படி இயக்குகின்றது...? என்பதனை நமது குருநாதர் தெளிவாக எடுத்து என்னிடம் கூறினார்.

மனிதனின் வாழ்க்கையில் ஆசையுடன் தான் வாழ்கின்றோம். அந்த ஆசை நிராசையாக எப்படி மாறுகின்றது...? நிராசையாக மாறும் பொழுது மனித உணர்வுகள் எப்படி மாறுகின்றது...?

வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது நோய் என்ற நிலைகள் வருகின்றது. பல துறைகளைக் கற்றுணர்ந்த டாக்டர்களும் இந்த உடலை விட்டு அதனால் தான் மடிகின்றார்கள். வேதனை என்ற உணர்வு கொண்டு மீண்டும் மனிதன் அல்லாத நிலையைத் தான் பெறுகின்றார்கள்.

1.செல்வத்தைத் தேடக் கோடிக்கணக்கான சிந்தனைகளைச் செலுத்தி நிர்வாகத்தை நடத்தும் திறன் வந்தாலும்
2.இந்த உடலுக்குள் இருக்கும் பகைமையான உணர்வுகளை நிர்வகிக்கும் தன்மை எவருக்கும் இல்லை.

அப்படி நிர்வகிக்கும் அந்தத் திறனைப் பெற
1.அனைத்தையும் ஒளியின் உணர்வாக மாற்றிடும் அந்த மெய் ஞானியின் உணர்வை
2.எவர் ஒருவர் இங்கே தேடிக் கொள்கின்றனரோ அவரே அதனைப் பெற முடியும்.

ஆகவே... அந்த அருள் ஞானத்தின் உணர்வின் தன்மையை நாம் நமக்குள் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

விஞ்ஞானத்தின் அறிவு வந்தால் அது இந்த உடலின் இச்சைக்கே வருகின்றது. ஆனால் மெய் ஞானத்தினுடைய அறிவால் ஒவ்வொரு அணுவின் இயக்கங்களையும் அறிய முடிகின்றது.

அருள் உணர்வின் தன்மை கொண்டு மெய் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் உருவாக்கி விட்டால் தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக நமக்குள் வருகின்றது.

உதாரணமாக குறும்புத்தனம் செய்வோரை உற்றுப் பார்த்த பின் அந்த குறும்புத்தனத்தை உருவாக்கும் அணுவாக நம் உடலில் விளைய ஆரம்பிக்கிறது.
1.அவனை நினைக்கும் போதெல்லாம் இந்த உணர்ச்சிகள் தூண்டும்
2.நம்மை அறியாமலே அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு நாமும் குறும்புத்தனம் செய்வோம்... பார்க்கலாம்...!

அது நமக்குள் உருப் பெறாதபடி தடுக்க வேண்டுமல்லவா...!

ஏனென்றால் தவறு செய்கின்றான் என்று தெரிந்து கொள்ள முடிகின்றது. அது கார்த்திகேயா. கார்த்திகேயா என்றால் ஆறாவது அறிவு... நம்மைக் காத்திடும் சேனாதிபதி.

ஆகவே... தீமையான உணர்வு நமக்குள் வராதபடி தடுக்க வேண்டும் என்றால் சேனாதிபதிக்கு வலு எப்படி கொடுக்க வேண்டும்...?

நஞ்சினை வென்ற அகஸ்தியன் துருவனாகி... துருவ மகரிஷியாக உள்ளான்.
1.அவனின் உணர்வை அடுத்த கணமே இணைத்து நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்குதல் வேண்டும்.
2.அந்தத் தீமைகள் உள்புகாதபடி நம் வழிக்கு அது வசப்படும்படி செய்தல் வேண்டும்.

நாம் எடுக்கும் ஞானத்தின் வழிகளில் அருள் ஒளியின் உணர்வைத் தன்னுடன் இணைத்து தீமைகளை அடங்கச் செய்ய வேண்டும். அது தான் அங்குசபாசவா...!

தீமையான உணர்வை நாம் நுகர்ந்தாலும் அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து... இதை வைத்து அதை அடக்கி நமக்குள் செயலாற்றும் தன்மை பெற வேண்டும் என்பதற்காக
1.சிறு கல்லைக் காட்டி (ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள தெய்வச் சிலை)
2.அடுத்து உன் வாழ்க்கையை நீ எப்படி அமைக்க வேண்டும்...?
3.இந்த உடலை விட்டுச் சென்றால் நீ என்ன ஆவாய்...? என்ற நிலையைத் தெளிவாகக் கூறியுள்ளான் அருள் ஞானி.

இயற்கையின் உண்மை நிலைகள் எப்படி மாறுகின்றது...? என்பதை உணர்ந்த மெய் ஞானிகள்... உருவாக்கும் திறன் பெற்ற ஆறாவது அறிவால் நாம் எப்படிச் சீராகச் செயல்பட வேண்டும் என்று காட்டியுள்ளார்கள்.

சொல்வது நன்றாக அர்த்தம் ஆகிறது அல்லவா.