ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 3, 2022

ஈஸ்வர சக்தியை தியானித்துக் கொண்டே பெரும் புனிதத்துடன் வாழ்ந்திட வேண்டும்

பல மகான்கள் தோன்றி சூட்சும நிலை கொண்டு சூட்சும நிலையில் வாழ்ந்து இவ்வுலகுடனே கலந்துள்ள மாபெரும் உலகமப்பா இவ்வுலகம். இவ்வுலகில் உள்ள நிலை மற்ற எந்த உலகத்திலும் இல்லையப்பா...!

ஒன்றுடன் ஒன்று பின்னிய நிலையில்தான் இவ்வுலகமே உருண்டு செயல்படுகின்றது. எல்லாமே ஒன்றுடன் ஒன்று பின்னிய நிலை கொண்டு தான் நடந்து செயல்படுகின்றது.

நமக்கு முதலில் தோன்றிய எல்லாப் பெரியவர்களும் (ஞானிகள்) நம்முடன் தொடர்புடைய பெரியாவர்கள்தான். நாம் பல ஜென்மங்கள் எடுத்து வாழ்ந்த நிலை கொண்டு நம்முடன் ஒவ்வொரு ஜென்மத்திலும் தொடர்புடையோர் எல்லா இடத்திலுமே உள்ளார்கள்.

சொந்தம் என்பது ஏதப்பா..? நமக்குச் சொந்தமாக எதையப்பா ஏற்றுக் கொள்வது...? எதை விடுவது...?
1.எல்லாமே நமக்குச் சொந்தம்தான். இவ்வுடலும் நமக்குச் சொந்தமான உடல் தான்.
2.பல நிலை கொண்டு பலர் சொல்வார்கள். இவ்வுடல் நமக்குச் சொந்தமில்லை என்று…!
3.”பயம்...! என்னும் பேயை அகற்றிவிட்டால்.......” இவ்வுடலில் இருந்தே எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் நம் உயிரினம் செயல்படலாம்.

இயற்கையின் சக்தியிலிருந்து சக்தியாக உயிர் பெற்று வாழும் எல்லா ஜீவஜெந்துக்களுமே அச்சக்தியின் சொந்தத்துடன் சகலத்தையும் ஒன்றாக எண்ணி வாழ்ந்திட்டாலே வாழ்ந்த வாழ்க்கையின் நிறைவைக் காணலாம்.

எதிலும் சலிப்பும் சங்கடமும் தோன்றும் நிலை கொண்டு எண்ணத்தைச் செலுத்திடாதீர்கள்.
1.சலிப்பும் சோர்வும் வருவதினால்தான் பல சங்கடங்கள் நம்மை அண்டி
2.அதனால் நம் உடல் நிலைக்கும் உயிர் நிலைக்கும் பெரும் கேடு விளைவித்து
3.உலக வாழ்க்கையில் பற்றற்றவராக நம்மை ஆக்கி
4.நம்மை ஒரு பகடைக்காய்போல் நம்மை நாமே ஆக்கிக் கொண்டு,
5.வாழ்ந்த நிலையில் திருப்தியும் திறனும் அற்றுப் பெரும் சங்கடத்துடன் நம் ஜீவாத்மா பிரிந்து செல்லும் நிலையில்
6.பெரும் சங்கடத்துடனே அவ்வாத்மா பல நூறு ஆண்டுகள் சலிப்புடன் சுற்றிக் கொண்டே பெரும் ஈனப் பிறவியாகப் பிறவி எடுக்கிறது.
7.அதிலிருந்து மாறி விடுபடும் நிலைக்கே அவ்வாத்மாவுக்குச் செயலும் திறனும் இல்லாமல் போகிறது.

அவ்வாத்மா முடிவில்லாமல் பல நிலை கொண்ட உயிரினங்களைப் (உடல்களை) பெற்று
1.அத்தகைய சங்கட நிலை கொண்ட நிலையில்
2.இந்த உலகில் எண்ணிலடங்காப் பல ஆத்மாக்கள் சுற்றிக் கொண்டே உள்ளது.

ஆகவே இதைப் படிக்கும் ஒவ்வொரு உயிராத்மாவும் அவரவரின் நிலை கொண்டு நம் உடலில் உள்ள உயிராத்மாவிற்கு நாம் என்றுமே தீங்கு செய்யலாகாது. இதை ஆழமாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாம் எடுக்கும் ஒவ்வொரு சுவாச நிலையும் கொண்டுதான் எண்ணங்கள் வருகிறது. இவ்வுயிர் ஆத்மாவிற்கு அந்தந்தத் தன்மைகளை அவ்வாத்மாவில் பதிய வைக்கிறது.

இந்தப் பூமியில் ஜெனித்த நாள் முதற் கொண்டு எடுத்த சுவாச அலையும்… எண்ண நிலையும்… சப்த அலைகளும்… நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ள நிலையில் நம் ஆத்மாவிற்கு எல்லா நிலைகளும் தெரிந்து கொண்டே தான் உள்ளது.

இவ்வுடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்றாலும் நம் ஆத்மா உடலுடன் இருக்கும் பொழுது நமக்கு நினைவில் நிற்காத சில செயல்களும் சிறு பிராய நினைவுகளும் அவ்வாத்மாவைச் சுற்றியேதான் நம் நினைவலையும் சப்த அலையும் சுற்றிக் கொண்டிருக்கும்.

வாழ்ந்த காலத்தில் பல நன்மை தீமைகள் எல்லாம் கலந்துதான் வாழ்ந்திருப்போம். எந்த நிலையிலும் நம் எண்ணமும் சப்த அலைகளும் நம் ஆத்மாவைச் சுற்றிக் கொண்டே உள்ள நிலையில்
1.நாம் இனி வாழும் - வாழ்ந்த நாட்களில் நாம் எடுத்த சுவாச அலையும் எண்ண அலைகளும் சப்த அலைகளும்
2.நாம் எல்லோருமே அச்சக்தியிலிருந்து தோன்றிய சொந்த பந்தங்கள்தான்.

ஆகவே ஒன்றுடன் ஒன்று பின்னிய வாழ்க்கை நிலையில்தான் வாழ்கின்றோம் என்ற உண்மை நிலையை ஒரு நிலைப்படுத்தி நாம் பிறவி எடுத்த நாள் முதற் கொண்டு நம்மைச் சுற்றியே வட்டமடித்துக் கொண்டுள்ள நினைவலைகளையும் சப்த அலைகளையும்
1.வாழ்ந்த வாழ் நாட்களில் நம்மை அறிந்தும் அறியாமலும் நாம் செய்த தவறென்னும் துவாரங்களை அடைத்திட
2.இனி வாழ்ந்திடும் வாழ் நாட்களில் நம்முள் உள்ள “ஈஸ்வர சக்தியை…” தியானித்துக் கொண்டே
3.வாழும் நாட்களை எல்லாம் பெரும் புனிதத்துடன் வாழ்ந்து புண்ணிய நிலை கொண்டு நாம் தவறி விட்ட அத்துவாரங்களைச் சீர் செய்து நல்ல நிலையில்
4.இனி நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ள நம்மைச் சுற்றப் போகும் சுவாச அலைகளையும் சப்த அலைகளையும் எண்ண அலைகளையும் பெரும் புனிதமாக்கி
5.இன்று சகலத்திலும் கலந்துள்ள சகல பாக்கியங்கள் பெற்ற பல மெய் ஞானிகளின் மகரிஷிகளின் சூட்சும நிலைகொண்ட வாழ்க்கையையே நாம் வாழ வேண்டும்.

இவ்வுலகம் வேறல்ல... அவ்வுலகம் வேறல்ல... சகலமும் ஒரே உலகம்தான்...! ஒன்றுடன் ஒன்று கலந்த சூட்சும நிலை கொண்ட உலகத்திற்குச் செல்லத்தான் என் அன்பான ஆசியை அருளுகின்றேன். வழிபெற்று வாழுங்கள்.