ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 26, 2022

அன்பு கொண்டு நாம் வணங்கும் “அனைத்துமே ஆண்டவன் தான்...”

ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கு வேண்டிய ஒரே ஆசையான அன்பென்னும் ஆசையைத்தான் நாடி ஏங்கி வாழ்கிறது. எல்லா ஆன்மாக்களுமே அன்பை வேண்டித்தான் இந்த உடலுடன் வாழ்கின்றது.

அந்த அன்பிற்காகத்தான்... ...
1.அந்த அன்பு கிடைக்காத நிலையில் சோர்வாகி
2.மன நிறைவைப் பெற்றிடாமல் பல தவறுகளும் பல இன்னல்களும் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் வந்து
3.அந்த மனம் என்னும் அன்பு கொண்ட ஒரே லோகத்தைப் பல லோகங்களாக்கி வாழ்ந்திடுகிறார்கள் மனிதர்கள்.

பரலோகம்.. எமலோகம்... நரகலோகம்... பூலோகம்... சொர்க்கலோகம்... இப்படிப் பல லோகங்களைச் சொல்கிறார்கள்…! அல்லவா. இவைகள் எல்லாம் என்னப்பா…?

மனம் என்னும் அந்த அன்பு லோகத்தை அந்த அன்பையே ஏங்கி அன்புக்காக வாழும் அந்த ஆத்மலோகத்திற்காக நம்மைச் சுற்றியுள்ள பல லோகங்களைத்தான் நாம் அழிக்கின்றோம்.

அன்பு ஒன்றினால் மட்டுமே இந்த உலகை உன்னதமாக ஆக்கிட முடியுமப்பா. ஆகவே எந்த நிலை கொண்டும் இன்று இருக்கும் இந்த விஷமான விஞ்ஞான உலகில்
1.பல இன்னல்களுடன் வாழ்ந்திடும் இம்மனமென்னும் ஆத்மாவிற்கு
2.அன்பென்னும் பொக்கிஷத்தை அவ்வுயிர் ஆத்மாவிற்கு ஊட்டம் தந்தே வாழ்ந்திடுங்கள்.

ஏனென்றால் அன்பினால் தான் நம் உடலும் நம் மனதும் நம் ஆத்மாவும் புத்தொளிர் பெற்று வாழ்கிறது என்ற உண்மையை அறிந்து ஒவ்வொருவரும் அன்பு கொண்டு வாழ்ந்திடுங்கள்.

ஆண்டவனை வணங்கிடும் முறையை நமக்கு முன் வாழ்ந்த முன்னோர்கள் ஏன் உணர்த்தினார்கள்…? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

1.சஞ்சலக்கூடு நிறைந்த இந்த மனத்தை
2.அன்பு என்னும் நிலையில் தான் அவ்வாத்மாவை அமைதிப்படுத்த முடியும் என்ற நிலைக்காகத்தான்
3.ஆண்டவன் என்னும் ரூபத்தை ஏற்படுத்தினார்கள் முன்னோர்கள்.

மனமென்னும் நிலையைச் சஞ்சல நிலையிலிருந்து மீட்டிட அவ்வாண்டவனைப் பல ரூபத்தில் எண்ணி மகிழ்ந்து நம் ஆண்டவன் என்னும் அன்பு ரூபத்தை நாம் அன்பு கொண்டு வணங்கிட நம் முன்னோர்கள் வழி காட்டி வந்தார்கள்.

ஆண்டவன் என்னும் ரூபத்தில் நம் அன்பை ஒன்றில் மட்டும் செலுத்தி வணங்கிடுவதில்லை...!
1.அன்பு கொண்டு நாம் வணங்குவதெல்லாம் ஆண்டவன் தான்.
2.எல்லா உயிரினங்களிலுமே அந்த ஆண்டவன் உள்ளான்.

உன் அன்பை உயிரினங்களிடம் மட்டுமல்ல...! இந்த வானமும் பூமியும் மரம் செடி கொடி மழை காற்று சூரியன் சந்திரன் நட்சத்திர மண்டலங்கள்
1.இப்படி எந்நிலை கொண்டும்
2.உன் மனமென்னும் அன்பைச் செலுத்தி எண்ணி வணங்கிட்டாலே
3.எந்த ரூபத்திலும் (எல்லா வகையிலுமே) உன் உயிராத்மாவிற்கு நீ சேர்க்கும் உன்னதப் பொக்கிஷம் கிட்டுகின்றது.
4.ஆகவே அந்த அன்பினால் மட்டும் தான் அவ்வுயிராத்மாவிற்குக் குளிர்ந்த நிலையை (மகத்துவத்தை) அளிக்க முடியும்.

இந்த உடல் முழுவதுமே ஒரு நிலை கொண்ட வெப்பத்துடனே உள்ளது. ஆனால் இந்த உடலிலுள்ள நம் உயிரணு மட்டும் தான் குளிர்ந்த நிலையில் உள்ளது.

மனம் என்னும் நிலையை நாம் அமைதிப்படுத்தி அன்புடன் வாழும் பொழுது அவ்வுயிராத்மா ஒரே நிலை கொண்டு அமைதியுடன் அன்பு கொண்ட நிலையில் ஆனந்த நிலையில் உள்ளது.

இம்மனமென்னும் நிலையை
1.நாம் பல நிலை கொண்டு அலைய விடும் பொழுது (மன அழுத்தம் – TENSION, STRESS)
2.இவ்வுடல் நிலையில் ஏற்படும் அதி உஷ்ண நிலையினால்
3.அவ்வுயிராத்மாவிற்குப் பல தீங்குகளைத்தான் நம்மால் சேர்க்க முடிகின்றது.

நம்மில் பல பெரியோர் இந்த அன்பையே நமக்குப் பல வழிகளில் உணர்த்திட அன்றிலிருந்து இன்று வரை போதித்துச் சென்றார்கள்.
1.“அன்பிலார்க்கு இவ்வுலகமே இல்லை...!” என்ற உண்மையை உணர்த்திச் சென்றார்கள்,
2.அன்பே தான் கடவுள்...! என்றார்கள்.

ஆனால் இப்பொழுது வாழ்ந்திடும் மனிதர்களின் குறிக்கோள் எல்லாம் செல்வந்தனாகச் செழித்து வாழ்ந்திட வேண்டும் என்பது தான். அதற்காக “எதை வேண்டும் என்றாலும் செய்யலாம்...!” என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.

அந்த நிலைக்காகத் தன்னைத் தானே.. தன் இனத்தைத் துவேஷிக்கும் நிலையில்
1.தன்னைத்தானே ஏமாற்றி வாழ்கிறான்.
2.அன்பிற்கு மேல் துவேஷத்தினால் தான் இன்றைய உலகமே உள்ளது.
3.இந்த நிலையில் இவ்வுலகில் கலந்துள்ள இக்காற்று மண்டலமே விஷமுடன் உள்ளது.

ஆகவே இனி வாழ்ந்திடும் வாழ் நாள்களை வீண் விரயம் செய்திடாமல் அன்பு கொண்ட வாழ் நாள்களாக வாழ்ந்து அன்பென்னும் பொக்கிஷத்தை ஆண்டு வாழ்ந்திடுங்கள் அன்புடனே.

ஈஸ்வரபட்டனாகிய எனது ஆசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.