ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 5, 2022

“எல்லாமே…” நம் எண்ணத்தில் இருந்து வருவது தான்…!

பல சாமியார்களைக் கண்டிருப்பாய். விரக்தியில் சாமியாராகி தான் ஆண்டவனைக் காணப் போகின்றேன் என்று பல நாட்கள் அமர்ந்து பல பல ஜெபங்களை ஓதி ஓதும்போது ஜெப மணியை எண்ணுகின்றான்.

ஆண்டவனை ஜெபிக்க ஜெப மணியை எண்ணித்தான் லட்சார்ச்சனை கோடியார்ச்சனை என்றெல்லாம் பெயர் சூட்டி கோடி தடவை லட்சம் தடவை ஆண்டவனின் நாமத்தை உச்சரிக்கின்றார்கள்.

ஜெப மணியில் எண்ணிக் கொண்டே எண்ணினால்தான் அவ்வாண்டவன் வந்து ஆசிர்வதிப்பாரா...?

அவன் லட்சார்ச்சனை... கோடியார்ச்சனை... என்று ஜெபமிருக்கும் நிலையில் சிறு தடங்கல் வந்திட்டால் அவன் நிலையில் கோபம் வருகிறது.
1.அப்பொழுது அவன் விடும் சுவாச நிலையே மாறுபடுகிறது.
2.அந்நிலையில் எப்படியப்பா அவன் ஆண்டவன் அருளைப் பெற்றிட முடிந்திடும்...?

அவனுள்ளே இருக்கும் ஆண்டவனையே மறந்துவிட்டு ஜெபம்...ஜெபம்...ஜெபம் என்று செய்கின்றான் ஜெபங்களாக...!

ஆண்டவன் எங்கப்பா உள்ளான்…? அவன் ஜெப நிலைக்கு எப்படியப்பா அவன் வந்திடுவான்..?
1.தனக்குள்ளே இருக்கும் ஈசனின் சக்தியை மறந்துவிட்டு
2.தன்னையே தான் மறந்து தன் செயலையும் தன் காலத்தையும் சிதற விட்டு
3.சாமியார் என்ற நிலையில் ஜெபம் ஜெபித்துக் காலத்தையே வீணடித்து விடுகிறார்கள் பல சாமியார்கள்.

நான் ஆண்டவனைக் காணப் போகின்றேன்... ஆண்டவன் என்பது யார் என்பதை அறிந்திடவே பூரண அருளையும் தானே பெற்றிடலாம்.. பெற்று மக்களுக்கு அளித்திடலாம் என்றும் பல சாமியார்கள் ஜெபம் செய்கிறார்கள். காலத்தையே கடத்துகிறார்கள்.

அவ் ஈஸ்வரன் இவனுக்கு மட்டும்தான் தெரிவானா...? மற்றவருக்குத் தெரிய மாட்டானா...? அம்மகேசனின் சக்தி... அம் மகா சக்தி என்ன...? என்பது யாரப்பா அறிய முடியும்...?

1.உன்னையே நீ வணங்கிவிட்டால்...
2.உன் நிலையை மாற்றிடாமல்... உன் எண்ணத்தின் எண்ணமெல்லாம் ஒரு நிலை எய்தும்பொழுது
3.உன் சுவாச நிலையின் தன்மையால் “உன்னுள்ளே உள்ள ஈசனின் சக்தியை நீ கண்டிடலாம்...!”

“ஆண்டியும் அரசனாகலாம்.... அரசனும் ஆண்டியாகலாம்...!” என்பதன் பொருளும் இதுவே. ஆண்டவனின் நிலை எங்கெங்கு உள்ளது என்று அறிந்திட்டாயா...?

“எல்லாமே எண்ணத்தில் இருந்து வருவதுதான்...!”