நாம் எதை எண்ணுகின்றோமோ அது உயிரிலே பட்டதும் ஜீவன் பெறுகிறது... அது பிராணாயாமம். அந்த உணர்வின் சக்தி எனக்குள் பட்டவுடனே ஜீவன் பெறுகின்றது. இதற்குப் பெயர் பிராணாயாமம்.
ஆனால் ஒரு பக்கம் மூக்கை அடைத்துக் காற்றை இழுத்து உள்ளுக்குள் கொண்டு போய்ச் சேர்த்து மீண்டும் வெளிவிட்டால் இது பிராணாயாமம் என்று இவர்கள் கொண்டு போகிறார்கள்.
அன்று கீதையில் ஞானிகள் சொன்னது வேறு. இவர்கள் சொல்லும் நிலைகள் வேறு.
குண்டலினியைத் தட்டி எழுப்புவது என்று முதுகுத் தண்டில் இருக்கிறது என்று மூலாதாரத்தைத் தட்டி எழுப்புகிறார்கள்.
1.மூலம் என்பது உயிர்
2.ஆதாரம் என்பது உணர்வு.
3.நமக்குள் இருக்கும் நல்ல உணர்வைத் தட்டி எழுப்பி
4.மெய் உணர்வைத் தனக்குள் சேர்க்க வேண்டும் என்று அன்று சொன்னார்கள்.
இவர்கள் சொன்ன மாதிரி முதுகுத் தண்டில் தட்டி எழுப்பினால்... எவன் சொன்னானோ அவன் எண்ணத்தைக் கொண்டு இந்த ஆதாரத்தைத் தட்டியெழுப்பினால்... அவனுக்குள் வசப்படுத்துவது தான் இந்த முறை. இப்படித் தான் இவர்கள் செய்கின்றனர்.
மூலம் என்பது தன் உயிர். ஆதாரம் என்பது தனக்குள் இருக்கும் உணர்வைத் தட்டி எழுப்புவது தான் அது.
அன்று ஞானிகள் சொன்னதை எல்லாம் விட்டுவிட்டு இவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒரு பெயரை வைத்துக் கொண்டு செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஏனென்றால் பிறரைக் குறை கூறுகிறேன் (ஞானகுரு) என்று யாரும் எண்ண வேண்டாம். புத்தகங்களில் ஒருவர் பிராணாயாமம் செய்வது எப்படி...? என்று எழுதி வைக்கிறார் என்றால் அதைக் காட்டிலும் நான் ஒன்றைச் சேர்த்து புதிதாகக் கண்டு பிடித்துச் சொல்கிறேன் என்று இப்படி நிறைய வந்து விட்டது.
அன்று ஞானிகளால் கொடுக்கப்பட்ட உயர்ந்த தத்துவங்கள் எல்லாம் மறைக்கப்பட்டு விட்டது. அந்த உணர்வுகள் அழிக்கப்பட்டது.
1.இருந்தாலும் இன்றைய கடைசித் தருணத்தில் இது வெளிப்படுகின்றது...!
2.நான் (ஞானகுரு) வெளிப்படுத்துகிறேன் என்று யாரும் தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள்.
3.எனக்கு ஒன்றும் தெரியாது...
மூன்றாம் வகுப்பு தான் படித்திருக்கிறேன்.
ஏனென்றால் உங்களை மாதிரி புத்தகத்தைப் படிக்க எனக்குத் தெரியாது. அந்தத் திறனும் இல்லை. அந்த விளக்கமும் எனக்குத் தெரியாது.
இதை எல்லாம் காட்டிய அந்த மெய் ஞானிகளின் அருள் வாக்குகள் தான் இங்கே செயல்படுகின்றது.
நீங்கள் எல்லாம் அந்த அருளைப் பெற வேண்டும் எண்ணி வரப்படும் போது
1.உங்கள் பாக்கியத்தில் நான் எண்ணி எண்ணி எடுக்கப்படும் போது
2.அந்த ஞானத்தின் சக்தி முதலில் எனக்குள் விளைகிறது.
இந்த உணர்வின் தன்மை இங்கே வெளி வரப்படும் போது யார் இதைக் கேட்கின்றனரோ அவருக்குள்ளும் விளைகிறது.
ஒரு செடியின் மணம் அடுத்தடுத்து வித்தை ஊன்றும் போது அதற்குள் ஈர்க்கப்பட்டு மீண்டும் அதே செடியாக விளைவது போல் தான் அதே மணத்தின் தன்மை இங்கே விளைகிறது.
ஆகவே “நான் பேசுகிறேன்...” என்று யாரும் எண்ண வேண்டாம்... எனக்கு இது தெரியவும் தெரியாது. குருநாதர் காட்டிய வழிகள் கொண்டு அதை நான் எண்ணப்படும் போது அந்த உணர்வின் ஆற்றல் வருகிறது.
1.நீங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.உங்களை அறியாத இருள் நீங்க வேண்டும்
3.மெய் ஒளி உங்களுக்குள் படர வேண்டும்
4.உங்கள் பேச்சும் மூச்சும் பிறரின் இருளை நீக்க வேண்டும்.
5.கேட்போர் உள்ளங்களை மகிழ்விக்க வேண்டும் என்று நான் எண்ணுகின்றேன்.
6.அந்த உணர்வின் தன்மை எனக்குள் படைக்கின்றது... என் குரு காட்டிய நெறிகள் கொண்டு.
அவர் சொன்ன வலு கொண்டு நான் அதைப் பெற முடிகின்றது. இந்த உணர்வின் வித்தை விளைவிக்கவும் முடிகிறது. அந்த வித்தை எல்லோருக்குள்ளும் படரச் செய்ய முடிகிறது. உங்கள் உள்ளத்திலே பதியச் செய்ய முடிகிறது.
இதையே நீங்கள் எண்ணும் போது அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள்ளும் விளைகிறது. அதன் மூலம் மற்றவருக்குள்ளும் அருள் ஞானத்தை விளையச் செய்ய முடியும். அருளானந்தம் பெற முடியும்.