ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 3, 2021

எண்ணம் எப்படித் தோன்றுகிறது...?

 

விநாயகர் தத்துவத்தில் முழு முதல் கடவுள் என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள். அதனின் உட்பொருள் என்ன..?

இந்த மனித உடலை நாம் என்று பெற்றோமோ... மிருக நிலையிலிருந்து மனிதனாக வளர்ச்சி அடைந்த நிலையை...
1.வினை எல்லாம் தீர்ப்பவனே விநாயகனே என்று
2.இந்த மனித உடலைக் காட்டினார்கள்.

முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக இந்த மனித உடலைப் பெற்ற நாம் தான் “முழு முதல் கடவுள்...” சிருஷ்டிக்கும் தன்மை பெற்றது நம்முடைய நிலைகள் என்ற இந்த நிலையை அன்று ஞானிகள் உணர்த்திச் சென்றார்கள்.

ஆகவே அதை நாம் பெறுவதற்கு நாம் என்னென்ன நிலைகள் செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு நொடிக்கும் நம் எண்ணத்தை நல்வழியில் நல்ல வினைகளைச் சேர்ப்பதாகச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

எண்ணம் எங்கிருந்து தோன்றுகிறது..?

1.நாம் கண் கொண்டு பார்க்கப்படும் போது
2.ஒரு உணர்வை ஈர்த்து நமக்குள் செலுத்தப்படும் போது தான் அந்த எண்ணங்கள் தோன்றுகிறது.
3.அந்த எண்ணத்தின் உணர்வின் தன்மை நமக்குள் இயக்கப்படுகிறது... அதை மீண்டும் நுகர்கின்றோம்.

பின் எதை நாம் கூர்ந்து கவனித்தோமோ அது நமக்குள் பதிவாகிறது, மீண்டும் நினைவாகும் போது “அதே அலைகள்” எடுக்கின்றது. எண்ணமே இல்லாத நிலைகளில் அந்த எண்ணத்தை உருவாக்குகின்றது.

பள்ளியில் படிக்கச் செல்கிறோம். முதலில் அதைப் பற்றிய எண்ணமே அற்றவர்கள் தான். அங்கே சென்ற பின் பாட நூல்களைப் படிக்கின்றோம். படிப்பின் கவனைத்தைச் செலுத்தப்படும் போது அந்த எண்ணங்கள் உருவாகின்றது... தோன்றுகிறது

அந்த எண்ணத்தை மீண்டும் நாம் எண்ணும் போது அது வலிமை வருகின்றது. ஆனால் பாடத்தைப் படிக்கும் போது...
1.பாட நிலைகளிலே நினைவுகள் (சிந்தனை) வேறு விதமாக இருந்தால்
2.பதிவாகவில்லை என்றால் நமக்கு ஞாபக சக்தி இல்லை என்று பொருள்.

அடுத்து அதனின் ஞாபகம் வருவதில்லை. தானாகவும் வருவதில்லை... மீண்டும் எண்ணினாலும் நமக்குள் வருவதில்லை.

எதை நம் எண்ணத்தில் “கருத்தில் கொண்டு...” அதை நாம் எடுக்கின்றோமோ அது பதிவான பின்
1.மீண்டும் அந்த நினைவுகளை எடுக்கும் போது
2.அந்த அலைகளை நாம் சுவாசித்து
3.அந்த உணர்வின் தன்மையை அறியச் செய்யும்.

ஆனால் நாம் படித்துக் கொண்டிருக்கும் போது அங்கே பதிவாகவில்லை என்றால்... அந்த எண்ணம்... அதை நாம் திருப்பி எண்ணினாலும் வராது.

பள்ளியில் படிப்பவர்கள் சிலர் எனக்கு ஞாபக சக்தியே வரமாட்டேன் என்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள் அல்லவா...!

இதே மாதிரித் தான் நாம் இந்த வாழ்க்கையில் நாம் நேரடியாகப் பார்க்கப்படும் போது
1.ஒருவரைப் பார்க்கின்றோம்... அவர்கள் செயலைப் பார்க்கின்றோம். அந்த உருவத்தின் தன்மை படமாகின்றது.
2.அவர் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகள் அலைகளாக மாறுகின்றது.
3.நம் கண் படமெடுக்கின்றது... அந்த உணர்வின் அலைகளை நமக்குள் ஈர்க்கின்றது.
4.நாம் சுவாசித்த பின் நம் உடலுக்குள் அந்த நினைவு பதிவாகின்றது.
5.அந்த அலையின் தொடர்கள் அதனுடைய நிலைகள் வித்தாக (வினை) ஊன்றுகின்றது.
6.அந்த வித்தின் நிலைகள் மீண்டும் அதை எண்ணப்படும் போது அந்தச் செயலின் தன்மைக்கு மீண்டும் நாம் இயக்கப்படுகின்றோம்.
7.ஆகவே நமக்குள் எந்த எண்ணங்களைப் பதிவு செய்கின்றோமோ அந்த எண்ணங்கள் தான் மீண்டும் நம்மை அதன் வழிக்கு இயக்குகிறது.

இப்படித் தான் மதங்கள் ஏற்படுத்தப்பட்ட நிலைகள் அனைத்தும்
“அது ஒவ்வொன்றும் இன்னென்னது...” என்று நமக்குள் எண்ணங்களாகப் பதிவு செய்து வைத்திருக்கின்றோம்.

அந்தப் பதிவின் நிலைகளிலேயே தான் நாம் நடக்கின்றோம். அதன் வழியில் இது கெட்டது... இது நல்லது... என்று அறிந்து நாம் நடக்கின்றோம்.

குருநாதர் காட்டிய அருள் வழியிலே உங்களுக்கு ஞானிகள் கண்ட மெய் உணர்வுகளை எல்லாம் திரும்பத் திரும்பப் பதிவு செய்து கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

1.இதை நீங்கள் தொடர்ந்து பதிவு செய்து கொண்டே வந்தால்
2.உங்களை அந்த ஞானிகளின் எண்ணங்கள் இயக்கும்... ஞானியாகவும் ஆக்கச் செய்யும்.