ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 9, 2021

தூங்காமல் தூங்கும் (ஒளி) நிலை பெற வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

எண்ணம் தான் செயல்.. எண்ணம் தான் கடவுள்...! என்ற நிலையை பல இடங்களில் திரும்பத் திரும்பச் சொல்லியுள்ளேன்.

தாவரங்கள் எல்லாம் ஒரே நிலையில் அதற்குகந்த ஒரே அமில குணத்தை ஈர்த்து வளர்ந்து வாழ்கின்றது. வெங்காயம் அதன் அமில குணமான அதிகப்படியான ஈர்ப்பு அமில இரசத்தை உறிஞ்சி ஒரு வகையான காரத்தை வளர்க்கின்றது. அதன் ஆவி பட்டவுடன் நம் கண்ணீர் சுரக்கிறது.

மிளகாயின் நெடி எரிச்சலையும் இன்னும் சில வகை காய்களினால் நமைச்சலும் நாம் பயிராக்கி வளர்க்கும் தாவரம் அல்லாமல் இயற்கையுடன் வளரும் பல கோடி இன வளர்ச்சியும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு குண நிலை ஒத்த அமில சக்தி ஈர்ப்பில் வாழ்கின்றது.

ஒரு நிலையில் ஈர்த்து வளரும் தாவரங்களுக்கு மனிதனை ஒத்த செயல் உணவு முறைகள் வேண்டி இருப்பபதில்லை. ஆக.. உண்டு கழித்து உறங்கி வாழும் நிலை மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது...?

ஒன்றிலிருந்து மாறுபட்ட அமிலப் படைப்பில் பிம்பம் கொண்ட ஜீவராசிகளின் நிலையே ஒன்றுடன் ஒன்று கூடிக் கூடி வளர்ச்சி நிலை முற்றி... கனம் கொண்ட பிம்ப ஜீவ நிலை எற்பட்ட பிறகு ஒவ்வொன்றிலிருந்தும் சேமிக்கப்பட்ட குண நிலைகளுக்கொப்ப ஈர்ப்பு நிலை அமையப் பெறுகிறது.

அப்படிப் பெற்றதனால்... ஜீவ பிம்ப உடல் பெற்ற பிறகு
1.எண்ணத்தின் செயலினால் தன் தேவையை உணரும் நிலையும்
2.தன் தேவைக்குகந்த செயலாற்றும் திறமையும்
3.ஒன்றின் பலவாகக் கூட்டிக் கொண்ட பல அமிலங்களின் ஈர்ப்பு சக்தி கொண்ட ஜீவன்களுக்கு
4.தன் உணர்வின் எண்ண செயலுக்கெல்லாம் அதன் தேவையின் அடிப்படை உணவு தேவைப்படுகின்றது.

இதிலுள்ள உள் அர்த்தம் என்ன..?

1.இது நாள் வரை “எண்ணத்தின் செயல்” என்று உணர்த்தி வந்தேன்
2.இப்பொழுது “உணர்வின் எண்ணத் தேவை...” என்று உணர்த்துகின்றேன்.

நம் உடலுக்கு நீர் தேவைப்படும் பொழுது வாய் வறண்டு விட்ட பிறகு நீர் அருந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.
1.உணர்வின் தேவையினால் எண்ணத்தைச் செலுத்தி
2.எண்ணத்தின் செயலால் நீரை அருந்துகின்றோம்.

அதே போன்று நம்மை அறியாமலே நாம் எந்தச் செயலில் இருந்தாலும்... அல்லது அதன் பால் எண்ணத்தைச் செலுத்தா விட்டாலும் நம்மை அறியாமல் நம் உடலில் உள்ள இவ்வெண்ணத்தின் மோதலின் செயல் நிலையினால்
1.நாள் முழுவதும் நம் செயல் இருக்கும் பொழுது
2.இந்த உடலின் உஷ்ண அலைகள் ஆவியாக கொட்டாவி வெளிப்பட்டு
3.உடல் உறுப்புகளுக்கு அமைதிப்படுத்தும் நிலையான உறக்கம் கொள்ள வேண்டியுள்ளது.

இப்படிப் “பல எண்ணத்தை எடுத்து... பல அமிலங்களின் செயல் தொடர்பில்...” வாழும் பிம்ப உடல்களுக்கு உணர்வின் எண்ண அலையும் வருகின்றது.

ஒரே நிலை கொண்ட தாவரங்களுக்கும்... மற்ற ஜீவன்களான ஜீவ சக்தி கொண்ட எல்லாக் கனிவளங்களுக்கும்... நம் பூமிக்கும்... மற்ற எல்லாவித மண்டலங்களுக்கும் ஜீவன் உள்ள பொழுது... தன் தேவை அறியும் உணர்வும்... உறங்கும் நிலையும் இல்லை...? ஏன்...?

ஜீவன்கள் உறங்கி விடுகின்றன. பூமியும் மற்ற கோளங்களும் தாவரங்களும் உறங்குவதில்லை.
1.ஒரு நிலை கொண்ட அமிலப் படைப்புகள்
2.இவ்வெண்ண சக்தியின் பலவற்றை மோதுண்டு வாழும் ஜீவன்களைப் போல உறங்குவதில்லை.

அவை உறங்கிவிட்டால் உறங்கும் ஜீவன்களுக்கு ஜீவத் துடிப்பு எங்கிருந்து வரும்...?

இயற்கையின் ஜீவப் படைப்பில் சுகம் கண்டு வாழும் நிலை பெற்ற ஜீவன்கள் தனக்குக் கிடைத்த இந்த அபரிதமான உண்மைச் சக்தியை
1.உண்டு... கழித்து... உறங்கி... மங்கச் செய்யும் வாழ்க்கையிலிருந்து
2.இதே அடிப்படை எண்ண குணத்தில் செல்லாமல்
3.ஒரு நிலை கொண்ட எண்ணச் சக்தி கொண்டு தான் ஞானத்தின் வளர்ச்சி பெறல் வேண்டும்
4.தூங்காமல் தூங்கும் நிலை...!