ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 10, 2021

மனிதன் ஆண்டவனாக வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

திடப்பொருளைக் கரையச் செய்வதும் இந்தக் காற்று தான். ஆவி அமிலத்தைத் திடமாக்குவதும் இந்தக் காற்று தான். இந்தக் காற்றின் மோதலில் வரும் “ஒளியும்... நீரும் தான்...” நம் பூமியின் ஜீவன்.

காற்றடைத்த பந்தில் சிறு துவாரம் ஏற்பட்டு விட்டால் அதன் செயலில்லை. அதே போல்
1.இக்காற்றின் அமில ஈர்ப்பு பிம்ப ஜீவனில் ஆவி பிரிந்து விட்டால்
2.இந்த உடல் என்ற பிம்பத்திற்கும் ஜீவனில்லை.
3.இக்காற்று குண அமிலத்தில் தான் இந்த உலக சக்தியே நிறைந்துள்ளது.

காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள பால்வெளி மண்டலத்தில் அமில குணங்கள் நிறைந்திருந்தாலும்... நம் பூமியின் காற்று மண்டல ஜீவ அமில குண நிலை அங்கு இல்லை.

நம் பூமியின் சுழற்சி ஓட்டத்தினால் பூமியே தான் சுழற்சி ஓட்டத்தின் வேகத்தினால் காற்றையும்... ஒளியையும்... நீரையும் வளர்த்து... தனக்கு உணவாக எடுத்து மீண்டும் கழித்து... மீண்டும் மீண்டும் இதே வளர்ச்சி கதியில் ஒரு நிலை சுழற்சி ஓட்ட நிலையினால் கோடி கோடி ஆண்டுகளாக வாழ்கிறது.

பூமியின் மாற்றக் காலம் ஏற்படுவது எப்பொழுது...?

பூமி ஈர்த்து வெளிப்படுத்திய அமில ஒளி ஜீவ சக்தியினால் வளர்க்கப்பட்ட “மனிதனாலே தான்” பூமியின் நிலை மாறப் போகின்றது.

பூமியின் எண்ணச் சுவாச வளர்ச்சி நிலையின் பெருக்கத்தினால் பூமியின் நிலையே இப்படி உள்ள பொழுது அப்பூமியிலேயே பிறந்து வளர்ந்து வாழும் மனிதனின் நிலையில் இவ்வெண்ண நிலை உயர்வதுவும் தாழ்வதுவும் அவரவர்கள் எடுக்கும் எண்ண நிலைக்கொப்பத்தான்...!

பூமியின் ஈர்ப்பில் பலவாக உள்ள சக்தி நிலையில் பலதரப்பட்ட பல கோடி அமிலங்கள் நிறைந்திருந்தாலும் நம் பூமியின் படைப்பிலுள்ள அமில குணங்களின் ஆவிக்காற்று நம் சுவாசத்திற்கு அப்படியே வந்து மோதுவதில்லை.

ஒவ்வொரு நொடிக்கும் எண்ணமில்லாத மனிதன் எவருமில்லை. எண்ணத்தில் எடுப்பது தான் இச்சுவாசம்.
1.இச்சுவாசத்தில் எடுக்கும் நிலை கொண்ட மனிதனுக்கு...
2.“மனிதனின் எண்ணத்துடன் நிறைந்துள்ள குண அமில சுவாசம் தான்” அவன் ஈர்ப்புக்கு வருகின்றது.

1.மனிதன் தன் எண்ணத்தை “ஒரு நிலைப்படுத்தி” எடுக்கும் சுவாசத்தினால்
2.எத்தனை காலங்கள் ஆனாலும் “குறைவின்றி நல்வழி பெற்று”
3.பலவாக நிறைந்துள்ள அமில குணத்தைத் “தன் எண்ண மேம்பாட்டினால்”
4.ஒன்றின்பால் “நல் ஞானத்திற்குகந்த” செயலாக்கும் அமிலத்தின் வளர்ச்சியின் குணத்தைக் கொண்ட சுவாசத்தை எடுத்து
5.எடுக்கக்கூடிய காந்த மின் அலையின் ஈர்ப்பை “நல்ல சக்தியுடன்” மோதச் செய்தோமானால்
6.அச்சக்தியின் ஒளி ஈர்ப்பை “நுண்ணிய காந்த ஈர்ப்புத் தொடரினால்” நம் உடல் முழுவதுக்கும் பரவச் செய்து
7.இந்த உடலுக்குள் ஏற்கனவே பலவாக நிறைந்துள்ள “பல குண நிலை கொண்ட அமிலங்களையும்”
8.இவ்ஈர்ப்பின் நுண்ணிய அலையினால் “ஒரு நிலையான குண அமிலத்தை” இந்த உடல் முழுமைக்குமே நாம் பரவ விட்டால்
9.மனித வாழ்க்கையில் மோதிடும் பல நிலை கொண்ட குண நிலைக்கொத்த செயல் எதுவும் “நம் நிலையை மாற்றிட முடியாது...!”

அதே சமயத்தில் பல எண்ணச் செயல்கள் மோதினாலும் நாம் எடுக்கும் சுவாசத்தால்... அதன் குண நல ஈர்ப்பில் நாம் சிக்கிடாமல்...
1.ஏற்கனவே இந்த உடலில் நாம் நிறைத்துக் கொண்டுள்ள
2.ஒரு நிலையான அமில குணத்தின் நுண்ணிய அலையின் ஈர்ப்பு வளர்ச்சியில் பெற்ற
3.ஒளிச் சக்தியின் செயலே நமக்குள் நிறைந்து நிற்கும்.

மனித ஆத்மாவின் இவ்வெண்ண சுவாச சக்தியில் பெறத்தக்க நிலையினால் வளர்க்கும் நிலை உண்டு. தாவரங்களுக்கு அந்த நிலையில்லை.

ஒரு நிலையான எண்ண ஈர்ப்பில் தாவரம் வளர்ந்து வாழ்ந்தாலும் அதன் பலன் வெளிப்பட்ட பிறகு ஒவ்வொன்றின் வளர்ச்சி நிலைக்கொத்த காலக்கெடுவில் தான் தாவரங்களின் நிலை உண்டு.

1.எண்ணத்தின் மேம்பாட்டின் வழி நிலை கொண்ட மனிதன் தான்
2.தன் எண்ணத்தில் பலவாகப் படைக்கவல்ல ஆண்டவனின் ஆண்டவனாக முடியும்.

ஆனால் இந்த எண்ண மேம்பாட்டின் உணர்வு அறியாத இன்றைய மனிதன் தான் உழன்று கொண்டே... உருவை மாற்றி... “உருச்சிதைந்து வாழ்கின்றான்....!”