ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 29, 2021

இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்.. அதற்குத் தான் எமது உபதேசம்

 

குருநாதர் காட்டிய வழியில் பல அதிசயங்களைச் செயல்படுத்தலாம். எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இது எல்லாம் எதற்கு உதவும்...?

1.இந்த உடலுக்குப்பின் என்ன...? என்பதை இங்கே உடைத்துச் சொல்கின்றேன் (ஞானகுரு).
2.பிறவியில்லா நிலை அடையும் அதற்குண்டான சக்தியை நாம் பெற வேண்டும். அது தான் முக்கியம்.

உடலை விட்டுப் பிரிந்தால் நாம் கொண்டு போவது என்ன இருக்கின்றது...? அந்த அருள் ஒளியின் தன்மையை நீங்கள் பெற வேண்டும். நீங்கள் தயாராக வேண்டும்... அதன் வழி தான் எல்லோரும் தயாராக முடியும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நீங்கள் வலுவாக்கிக் கொண்டே வர வேண்டும். அதை நீங்கள் வலுவாகப் பெற்றால்தான் மற்றவர்களுக்கும் அதைப் பாய்ச்ச முடியும்.

அவர்கள் இந்த உணர்வைப் பெற... ஒன்றன் பின் ஒன்றாக அவர்கள் மூலமாக... மற்ற எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய முடியும்.

ஒரு நோயாளியைப் பார்த்தபின் அவருடைய நோயைக் கேட்டறிகின்றோம். அதை விசாரித்த பின் அதே நோய் எப்படி வருகின்றதோ இதைப்போல
1.அருள் உணர்வைக் கேட்டபின்
2.அருள் உணர்வைப் பெற செய்யக் கூடிய தகுதி
3.நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

எல்லோரும் மகிழ வேண்டும் என்ற உணர்வை நான் எண்ணும் பொழுது அந்த மகிழ்ந்த உணர்வுகள் எனக்குள் விளைகின்றது. அதே போன்று நீங்களும் செயல்படுத்தி அந்த மகிழ்ச்சியான உணர்வுகள் உங்களுக்குள்ளும் தோற்றுவிக்க வேண்டும்.

யாரும் எதையும் கொண்டு போக முடியாது. இந்த அருள் ஒளியை... அந்த மகிழ்ச்சியைத்தான் கொண்டு போக முடியும்.

அந்த அரும் பெரும் சக்தியைக் காடுகளில் தவமிருந்து பல அருள் ஞானிகள் பெற்ற அந்தப் பேரின்பத்தை நீங்களும் பெற வேண்டும். இதை நீங்கள் எளிதில் பெற முடியும்.

ஆகவே எது பதிவோ அது மீண்டும் நினைவுக்கு வரும். அதன் வழி இந்த அருள் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கி மீண்டும் நினைவு கொண்டால் இதை நீங்கள் வளர்க்க முடியும்.

உதாரணமாக ஒரு வித்தை உருவாக்குகின்றனர். எந்த வித்தை உருவாக்குகின்றார்களோ அதன் ஊன்றப்படும் போது அது விளைச்சலாகி பல வித்துகளாக வரும்.

அதைப் போன்று தான் இந்த ஞான வித்தை உங்களுக்குள் உருவாக்குகின்றேன். அதை நீங்கள் பெற வேண்டும்... வளர்க்க வேண்டும்.

ஆனால் தொழிலுக்கும் குடும்பத்திற்கும் இதைச் செய்தேன்... கஷ்டம் நஷ்டம்...! என்று சொல்வதை விடுத்து விட்டு
1.நாங்கள் அந்த அருள் சக்திகளைப் பெறுகிறோம்
2.அதை வைத்துச் சீர்டுத்துவோம் என்று இந்த உணர்வை வலுப் பெறுங்கள்.
3.இந்த வாழ்க்கையை உங்களால் செம்மைப்படுத்த முடியும்.

ஆசை ஒரு பக்கம்... எண்ணம் ஒரு பக்கமாகச் சென்றால் நிறைவேறுவது கஷ்டமாகி விடுகிறது.

அதே சமயத்தில் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பதிலும் ஒரு சிலர் குறை காணுவதிலேயே இருப்பார்கள். குறையை ஊன்றும் தன்மை தான் அவர்களுக்கு வருகின்றது.

குறையிலிருந்து மீட்க வேண்டும் என்ற உணர்வு வருவதில்லை அப்போது அந்த வளர்ச்சியும் குன்றுகின்றது.

இதைப் போன்ற நிலையெல்லாம் மாற்றி அருள் வழியில் நாம் வளர்த்துக் காட்டும் தன்மைக்கு வரவேண்டும். இருளைப் போக்கும் அருள் சக்திகளைப் பெற வேண்டும். அருள் வழியில் நாம் வாழ வேண்டும்.

இந்த உணர்வை நாம் வளர்த்தால் நிச்சயம் அந்த ஆற்றலைப் பெறுகின்றோம்.

1.குறை கூறுவது எளிது
2.குறையை நிவர்த்தி செய்வது மிக மிகக் கடினம்
3.அது நம்மை அடிமையாக்கக் கூடாது... அதை அடிமையாக்கி அந்த அருள் உணர்வைப் பெருக்குதல் வேண்டும்.