ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 21, 2021

மனித வாழ்க்கையில் காணும் இன்பம் அனைத்துமே சிற்றின்பம் தான் - ஈஸ்வரபட்டர்

 

சப்தரிஷிகள் தான் பூமியின் வளர்ச்சியில் மனிதக் கரு தோன்றி மனித ஞானம் பெற வழி வகுத்தனரே…!
1.இக்கலி மாறி கல்கியில் மனிதக் கரு வளரவும் மனித ஞானம் வளரவும்
2.சப்தரிஷிகளே ஏன் மீண்டும் அவர்களின் செயலைச் செயலாக்கிடக் கூடாது..? என்ற வினா எழும்பலாம்.

செடி சிறிதாக உள்ள பொழுது அதற்குகந்த ஆகாரத்தைச் செலுத்தினால் போதும். வளர வளர வளர்ச்சிக்குகந்த ஆகாரம் தேவைப்படுகிறது. வளர்ந்து முதிர்ந்த மரமாக ஆன பிறகு தன் உணவைத் தானாகவே எடுத்துக் கொள்ளும் வளர்ச்சியில் மரமுள்ளது.

சிறிய பயிர்களுக்கு நீர் ஊற்றித் தான் வளர்க்க வேண்டும். முற்றிய மரத்திற்கு அதன் உணவை அதுவே எடுத்துக் கொள்ளும்

அதைப் போன்று சப்தரிஷிகள் அவர்களின் சக்தியைப் பூமியின் கரு வளர்த்துச் செயல்படுத்த ஆரம்ப வளர்ச்சிக்கு ஆரம்ப நிலைக்குகந்த உணவு படைத்தால் போதும்.

வளர்ச்சியின் பெருக்கம் கொண்ட பிறகு வளர்ச்சிக்குகந்த உணர்வலைகளை அவர்கள் செலுத்த வேண்டியுள்ளது.

இன்று பலவாகப் பெருகியுள்ள மனித எண்ணங்களின் ஈர்ப்பு நிலைக்கும் கிருஷ்ணாவதாரம் இராமாவதாரம் காலங்களின் (3000 – 4000 ஆண்டுகளுக்குள்) எண்ண ஈர்ப்பிற்கும் பல மாற்றங்கள் உண்டு.
1.பெருகியுள்ள இன வளர்ச்சியின் அழிவு நிலை நெருங்கிவிட்டது.
2.மனித ஆத்மாக்களுக்குத் தன் உணர்வைத் தான் அறியும் பக்குவ முறைகள் எல்லாம் மாறிவிட்டது
3.உலகப் பொது எண்ணச் சுழற்சி ஈர்ப்பே நாகரீகம் என்ற உணர்வின் பேராசைப் பிடிப்பில் செயல்பட்டு விட்டது
4.ஆகவே அவ்வாறு பெருகிய மனித இனக்கரு இக்கலி மாற்றத்தில் மாறப் போகின்றது.

இந்த மாற்றக் காலத்திற்குள் சப்தரிஷிகளினால் இவ்வளவு காலங்களும் அங்கங்கு செடியாக உள்ள பயிருக்குகந்த உணவளித்த நிலையில்… அந்தப் பயிரே மரமாகித் தன் உணவை எடுத்துக் கொள்ளக்கூடிய ஞான நெறி முறைக்கு ஈர்த்துச் செல்கின்றனரப்பா…!

பஞ்சாக உள்ள எண்ணங்களை… பஞ்சைப் பக்குவப்படுத்தி பதம் பிரித்து அதனதன் குணத்திற்கொப்ப நூற்பு நிலை ஏற்படுத்தி இந்தப் பஞ்சுடன் கலக்கும் அமில வண்ணத்தை ஏற்றி ஆடை நெய்கின்றோம் அல்லவா…!

அதைப் போன்று பஞ்சாக உள்ள பக்தி நெறி முறை உணர்த்தி அந்தந்தக் கால நிலைகளுக்கு ஒப்ப சப்தரிஷிகளின் உணர்வலையால் அவர்களின் உணர்வுக்குகந்த பக்குவ முறைகளை ஏற்றித் தன் ஈர்ப்பின் ஞானச் சுழற்சியுடன் சுழல விட்டுக் கொள்கின்றனர்.

சப்தரிஷிகளின் நிலையை… சப்தரிஷி தான் ஆண்டவன் என்று உணர்த்துகின்றீரே…! அப்பொழுது இந்தப் பூமியின் சக்திகளை எல்லாம் தந்தது அவர்கள் தானா…? என்ற வினா எழும்பலாம்.

இவ்வினாவிற்கு விடை ஆம் என்பது ஒன்றே தான்.

சப்தரிஷியினால் ஏற்படுத்திக் கொண்ட மண்டலங்களின் நிலையினால் தான் ஒவ்வொரு மண்டலத்தின் தொடர்பைக் கொண்டு… அதனதன் ஈர்ப்பு சக்தியைக் கொண்டு… அது வெளிப்படுத்தும் உணர்வு குணத்தினால் தான் மணமும்… மணத்திற்குகந்த சுவையும் வண்ணங்களும் நம் பூமியில் தோன்றின.

பல சக்தி அலைகள் நிறையப் பெற்ற நம் பூமியில் மனித இன ஞானங்கள் வளர்ந்தோட வளர்த்தியதே “பல மண்டலங்களின் ஈர்ப்பு உணர்வினால் தான்…!”

1.ஒவ்வொரு ஞானியும் அவனவன் எடுத்த உணர்வின் குண அமிலத்தை வளர்த்த ஞானத்தால் மண்டல நிலை எய்தி
2.இம்மண்டல வளர்ச்சி ஞானத்தால் இன்றைய இந்நிலை உருப்பெற்றுள்ளது.

அத்தகைய ஞானத்தை வளர்த்துக் கொள்ளும் பல ஆத்மாக்கள் நிலை என்ன…?

இக்கலி மாறி கல்கி தோன்றி இச்சுழற்சி வட்டத்திலிருந்தே மாறி இம்மனிதக் கரு ஞான வளர்ச்சி கொண்ட மனிதன் பிறிதோரு மண்டல வளர்ச்சிக் கருவுடன் பிறப்பில் மனிதக் கரு வளரும் நிலையில்
1.மனிதனின் உருவ அழகுப் பொலிவு பெற்று
2.இன்று பூமியின் ஈர்ப்பில் நடக்கும் மனிதன்
3.நாளை “பறக்கும் நிலை” கொண்ட வளர்ச்சி ஞானம் பெறுகின்றான்.

சப்தரிஷியின் உணர்வின் வட்டத்திலுள்ள மனிதக் கருக்கள் எல்லாம் இந்நிலை பெறுகின்றன. இன்று சித்து நிலையில் சுழன்று ஓடும் பல ஆத்மாக்களும் இவ்வுணர்வின் கூட்டத்துடன் செல்கின்றன.

சப்தரிஷியின் உணர்வின் சுழற்சி ஈர்ப்பில் உள்ளவர்களுக்கே இந்நிலை என்றால்…!
1.சப்தரிஷியின் உணர்வுடனே சப்தரிஷியின் செயலாகச் சுழலப்பெறும் ஆத்மாக்கள்
2.இன்றெப்படி சப்தரிஷி மண்டலம் என்று உணர்த்துகின்றனரோ அந்நிலையின் ஒளி ஞானம் பெற்று
3.ஒவ்வொரு மண்டலத்துக்குமே தன் ஈர்ப்பின் உணர்வு சக்தியைப் பரப்பித் தன் உணர்வின் இன்பத்தை உணர முடியும்.

மனித வாழ்க்கையில் வாழும் இந்தக் குறுகிய காலத்தை “இவ்வாழ்க்கை என்ற… கூட்டுக் குடும்பப் பொருள் சேர்க்கையில் தான் அந்த இன்பம் உண்டு…!” என்பது மனிதனின் எண்ணம்.

1.இந்த மனித வாழ்க்கையில் காணும் இன்பம் சிற்றின்பம் தான்.
2.பேரானந்தப் பெரு நிலை என்னும் உணர்வு ஞான வளர்ச்சி இன்பம் தானப்பா அழியா இன்பம்.

ஆனாலும் எவ்வின்பம் பெறவும் இந்த மனித வாழ்க்கை நிலையின் சமமான உணர்வு எண்ணச் சுவாச நிலையில் தான் பெற முடியும்.