ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 12, 2021

“உள் உணர்வின்” உன்னத சக்திகளை அறிந்து கொள்ளுங்கள் - ஈஸ்வரபட்டர்

 

உணர்வின் வழித் தொடர் இச்சைக்கு நம் எண்ணம் செயல்பட்டு அவ்வுணர்வின் தன்மைக்கே எண்ணச் செயலை வழிப்படுத்தும் மனிதனால் எண்ண மேம்பாட்டிற்குண்டான வழிப்பாதையை அறிய முடியாது.

காட்சி:
அம்பெடுத்துக் குறி பார்த்து அம்பு விடுகின்றான் ஒரு மனிதன். அவன் உடலில் “ஒரு பெரிய கட்டெறும்பு” வந்து ஊர்ந்து கொண்டுள்ளது. அவன் எண்ணம் எல்லாம் அம்பின் குறி தவறாத ஒரே நிலையில் அம்பெய்தி தன் எண்ணத்தின் மேம்பாட்டைக் காண்கின்றான்.

அவ்வம்பு எய்தப்பட்ட பிறகு இந்த உடலில் ஓடும் “எறும்பின் குறு குறுப்பு உணர்வை அறிந்து...!” அதைத் தட்டி விடுகின்றான்.

இது எதனைக் குறிக்கின்றது…?

விளக்கம்:
உணர்வின் நிலையையே இவ்வெண்ணக் குறியினால் மாற்றியமைக்க முடியும்.
1.ஆனால் இவ்வுணர்வின் செயலே
2.நம் எண்ணத்தையும் விழிப்படையைச் செய்திடும்.

இவ்வுணர்வின் செயலே... எண்ணத்தை விழிப்படையைச் செய்யும் நிலை எப்பொழுது ஏற்படும்...?

இவ்வுணர்வின் எண்ணத்தை
1.எந்த ஒரு மனிதன் தன் எண்ணத்தின் வழித் தொடரில் பழக்கப்படுத்தி
2.அந்த உணர்வையே எண்ணத்தின் செயலில் செயல் புரிய வைக்கும் மனிதனுக்கு
3.இவ்வுணர்வின் அலையே எண்ணத்தின் ஈர்ப்பின் வளர்ச்சிக்கு
4.”அதி துணையாகச் செயல்படும்...!”

சில மிருகங்களுக்கு இவ்வுணர்வில் செயல் திறமை அதிகமாக உரு வளர்ச்சியிலேயே ஜீவன் கொண்டு வாழ்ந்து வருகின்றது.

நாம் உறங்கும் சில நேரங்களில் நம்மை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் நம் எண்ண அலை உறங்கிடும் தன்மையில் இவ்வுணர்வின் அலையின் விழிப்பினால் நம் உடலில் ஏறும் சில ஜெந்துக்களையும் அதே சமயம் நம் உடலில் உள்ள நரம்புப் பிடிப்புகளையும் நீக்க இவ்வுணர்வலைகள் செயல் புரிகின்றன.

இந்த உடலில் நாம் எடுக்கும் எண்ணச் சுவாச அலைக்கு உறக்கம் தந்தாலும் உடலில் உணர்வலை இயங்கிக் கொண்டே தான் உள்ளது. இந்த உணர்வலைகளிலேயே...
1.மனிதனின் எண்ண மேம்பாட்டைக் கொண்டு
2.அபரிதமான சக்தி அமில குணங்கள் வளர்ந்துள்ளன.

ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பொழுது சுற்றியுள்ள சப்த ஒலிகள் தனக்கு வேண்டப்படாத ஒலி அலையை இவ்வுணர்வலையும் எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் அதே சமயம் கைக் குழந்தை தன் சிறு சிறு அசைவு கொண்டு அழுதாலும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள தாயின் உணர்வறிந்து “விழிப்பு நிலை” ஏற்பட்டு விடுகின்றது.

சில கள்ளர்களின் கள்ளத்தனம் இல்லங்களுக்கு வந்து எடுத்துச் செல்லும் நோக்கமுடன் செயல்பட்டாலும்
1.இவ்வுணர்வின் அலை விழிப்படைந்து செயல்புரிந்து...
2.ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பொழுதும் விழிப்படையச் செய்துவிடும்.

இந்த உடலில் உள்ள பல கோடி அணுக்களும் “நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தி அலையை ஈர்க்கவல்ல தன்மை கொண்ட மனிதனின்...” உணர்வலை எண்ண அலை உறங்கிடும் நிலையிலும் இவற்றில் விழிப்பு நிலை உறங்குவதில்லை.

ஒவ்வொரு மனிதனும் தன் எண்ணத்தின் நிலை கொண்டு இவ்வுடலில் உள்ள உணர்வின் சக்தி அலையைத் தன் இச்சையிலிருந்து அதன் வழியில் ஓட விடாமல் ஒரு நிலைப்படுத்தும் சம நிலை வழித் தொடர்படுத்திடல் வேண்டும்.

அப்படிச் செய்து விட்டால் இவ்வுணர்வலையின் சக்தி மேம்பாட்டினால் இவ்வுடலில் உள்ள அனைத்து அணுக்கதிர்களும் தன் ஈர்ப்பில் நுண்ணிய காந்த அலையின் சக்தி அலையைக் கூட்டிக் கொள்ளும்.

பிறகு எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தால் உயரிய ஒளி அலையின் ஈர்ப்பிலிருந்து மிகச் சக்தி வாய்ந்த நுண்ணிய காந்த அலையின் ஈர்ப்பை இச்சுவாசம் முழுவதுமே ஒவ்வொரு தசை நார்களும் ஈர்க்கவல்ல சக்தி பெற்றிடலாம்.

1.அப்படிப்பட்ட மனிதனின் செயல் தான்
2.சப்தரிஷிகளின் செயல் வட்டத்துடன் சென்றடையும் ஈர்ப்பு பெற்ற ஜோதி காணும் நிலையே அன்றி
3.ஆறு கால ஜெபம் செய்து ஆண்டவன் நமக்கு அருள்வான் என்று ஏங்கி தவமிருப்பதால்
4.எந்தச் சக்தி அலையும் எந்த மனிதனாலும் பெற முடியாது.

உண்மைச் சக்தியை... காந்த ஈர்ப்பு மின் அலையை எடுக்கவல்ல மனித ஆத்மா நிச்சயம் ஒளி அலை பெறுவான்.

உணர்வலையை எண்ணத்தைக் கொண்டு ஒரு நிலைப்படுத்தும் மனிதனுக்கு
1.அந்த உணர்வலையின் திசை திருப்பலிலிருந்து
2.அதி சக்தி ஈர்ப்பைப் பெற முடியும்.