ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 19, 2021

தீமையான அணுக்கள் உருவான பின் அதை நீக்குவதற்குப் பதில் அதை உருவாகாதபடியே நாம் செய்ய முடியும்

 

தீமைகளைப் பிளந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் இங்கே உண்டு. அந்த மகரிஷிகளின் உணர்வை உங்களில் பதிவு செய்யும் போது நீங்கள் எப்போது எண்ணினாலும் அதைப் பெற முடியும்.

உங்களுக்குள் தீமையை விளைவிக்கும் உணர்வுகளைப் பிளந்து காற்றிலிருக்கும் அந்தத் தீமையைப் பிளக்கவும்... நல்ல உணர்வை நுகரவும்... அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் தீமை என்ற நிலைகளைப் பற்றற்றதாக மாற்றவும் முடியும்.

பற்றற்றது என்றால் வெறுப்பு வேதனை கோபம் பாசம் போன்ற உணர்வுகளைப் பற்றற்றதாக மாற்ற வேண்டும் அதாவது...
1.பாசத்தாலும் கூட வேதனையைத் தான் நாம் அதிகமாக நுகர்கின்றோம்.
2.பாசம் எவர் மேல் அதிகமாகிறதோ வேதனை என்ற அந்த நஞ்சு கூடவே வந்து நல்ல குணங்களைச் சாப்பிடும்.

எப்படி...?

நம் பையன் மீது பாசம் அதிகமாக வைக்கின்றோம். மற்ற நண்பர்களுடன் சேர்ந்து அவன் சரியாகப் படிக்கவில்லை என்றால் உடனே வேதனை என்ற விஷம் தனக்குள் கலந்து விடுகிறது.

இப்படி இருக்கின்றானே...! என்று அவனை எண்ணியே நமக்குள் வேதனையை எடுக்கும் போது நம் உடலே கிறங்கிப் போகிறது. விஷத்தைச் சாப்பிட்டால் எப்படியோ அந்த உணர்வு நோயாக மாறுகிறது. நோயின் தன்மை பேயாகவே மாறுகிறது.

இப்படிச் செய்கிறானே... இப்படிச் செய்கிறானே... என்ற இந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின் உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் பேயாகப் போய் அடுத்த உடலுக்குள் சென்று மீண்டும் நோயாகவே அங்கேயும் உருவாக்குகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்கு எந்த நிமிடமானாலும் நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா...! என்று உங்கள் உயிருடன் ஒன்றினால் போதும்.
1.அப்போது அந்தச் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
2.இதை விரயமில்லாது எந்த நிமிடத்திலும் எடுக்கலாம்.
3.அதற்குத்தான் ஆழமாக இதைப் பதிவு செய்கின்றோம் (ஞானகுரு)

இங்கே கொடுக்கக் கூடிய சக்தியை இந்த வாழ்க்கையிலேயே நீங்கள் பெற்று உங்களைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

1.உங்கள் பார்வை... உங்கள் சொல்... உங்கள் மூச்சு... அனைத்தும் புனிதம் பெற்று
2அந்த மூச்சலைகள் காற்றிலே பரவினாலும்
3.நீங்கள் யாரைப் பார்த்து அவர்கள் நன்மை பெற வேண்டும் என்று
4.இந்த எண்ணத்தை எண்ணினால் அதை அவர்களும் பெற முடியும்.

ஒரு செடிக்குப் பக்கம் களை இல்லாது இருந்தால் “தன் இனத்தின் சக்தி பெருகி” அந்தக் குவிந்த சக்தி கொண்டு அந்தச் செடி செழிப்பாக ஓங்கி வளரும். இது எல்லாத் தாவர இனங்களுக்கும் பொருந்தும்.

ஆனால் களைகள் முளைத்து விட்டால் அது வளர்வதில்லை.

இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் அந்தத் தீமை என்ற களைகள் முளைக்காது இருக்க வேண்டுமென்றால் நாம் யாரைப் பார்த்தாலும்...
1.அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் பொருள் காணும் நிலைகள் பெறவேண்டும்
3.அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
4.அவர்கள் தொழில் வளம் பெற வேண்டும்
5.அவர்கள் எதிர்காலம் சிறந்து இருக்க வேண்டும் என்று எண்ணி
6.அவர்களுக்கு இந்த உணர்வின் சக்தியைப் பாய்ச்ச வேண்டும்.

இதைத் தான் கீதையிலே நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது. அப்போது அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் எடுக்கும் அந்த உணர்வின் சக்தி நமக்குள்ளும் வருகின்றது.

ஆனால்... எல்லாம் நல்லதாகத்தான் நினைக்கின்றேன்... என்னை ஆண்டவன் சோதித்துக் கொண்டே இருக்கின்றான்...! என்ற இந்த பழைய பழக்கம் நம்மிடம் வந்து விடுகின்றது.

அதற்கு முக்கியத்துவம் இல்லாதபடி யாம் சொன்ன நிலைகளைச் செயல்படுத்த வேண்டும்.