ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 12, 2021

உடலை விட்டு ஒருவர் பிரிந்தால் அவருக்குக் “காரியம் செய்கின்றோம்...” என்றால் ஞானிகள் செய்யச் சொன்ன காரியம் எது...?

 

உடலை விட்டு ஒருவர் பிரிந்தால் அங்கே சாங்கியப் பிரகாரம் தான் காரியங்கள் செய்ய வேண்டும் என்பார்கள்.

ஆனால் தியான வழியைக் கடைப்பிடிப்பவர்கள் சாமி (ஞானகுரு) என்ன சொன்னார்...? இவர்கள் இப்படிச் செய்கிறார்களே...! என்று எண்ணுவார்கள்.

சொந்தக்காரர்கள் அங்கிருந்து வருகிறார்கள். நீங்கள் அழுகக்கூடாது என்று சொன்னால்
1.அப்பா இறந்ததற்கு அழுக வேண்டாம் என்று சொல்கிறான் பார்...
2.இவன் எல்லாம் நரகலோகத்திற்குப் போவான் என்பார்கள்.
3.சொர்க்கலோகத்திற்கு அழுது அனுப்புபவர்கள் இப்படிச் சொல்வார்கள்.

அப்பொழுது என்ன செய்ய வேண்டும்...?

தாய் தந்தையரின் உணர்வு கொண்டு தான் இந்த உடலை நாம் பெற்றிருக்கின்றோம். அவர்கள் அழியா நிலை பெறுவதற்கு என்ன வழியோ அதை நாம் செய்ய வேண்டும்.

விநாயகர் தத்துவத்தில் காட்டியபடி விண்ணை நோக்கி ஏகி இந்த உண்மையை உணர்த்திய அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏகி அந்த உணர்வைச் சீராகப் பயன்படுத்திடல் வேண்டும்.

1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களான உயிரான்மாக்கள்
2.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளி பெறும் சரீரம் பெற வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.
3.ஞானிகள் சாஸ்திரப்படி காட்டிய நிலைகள் இது தான்.

அதாவது குடும்பத்தில் ஒருவர் இறந்தால் உடனே அவர்களைச் சார்ந்தவர்கள் உணர்வு வலுப் பெற்று
1.எங்களுடன் இவ்வளவு காலம் கஷ்டப்பட்டீர்கள்
2.இனி நீங்கள் என்றுமே இன்பமான வாழ்க்கை வாழ வேண்டும்
3.உடல் பெறும் உணர்வுகள் கரைந்து என்றும் ஒளி பெறும் சரீரமாக பேரானந்தப் பெரு நிலை பெற வேண்டும்
4.சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பெரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று
5.எல்லோரும் சேர்ந்து அந்த விண்ணுக்கு உந்தித் தள்ள வேண்டும்.

ஆனால் இங்கே வழக்கத்தில் என்ன செய்கிறோம்...? பாசத்தால் கீழே தான் இழுப்போம்...!
1.என்னைக் காப்பாற்றினாயே... என்னை விட்டுப் போய்விட்டாயே ஜர்...ர்ர்ர் என்று இழுப்போம்.
2.அவருடைய நண்பர்... எனக்கு இவ்வளவு தூரம் உதவி செய்தாயே போய்விட்டாயே...! என்று அவரும் இழுப்பார்
3.நாலா பக்கமும் இந்தப் பாசக் கயிறால் இங்கே இழுத்து விடுவோம்.

ஆக... நம்முடைய எண்ணங்கள் அங்கே எமனாக வந்து அவர்கள் உடலை விட்டுப் பிரிந்த நிலையில் நம்முடைய துயரத்திற்குத் தக்கவாறு தண்டனையைத் தான் கொடுக்கின்றோமே தவிர சொர்க்கத்திற்கு அனுப்புவதில்லை.

எமன் எங்கே இருக்கிறான்...?

நாம அனைவரும் அவர்கள் மீது பாசத்தால் எண்ணத்தை வைத்திருக்கும் போது அந்த எண்ணம் தான் புவியின் ஈர்ப்புக்குள் எமனாக வருகின்றது.

அதற்குத் தான் எருமையைப் போட்டுக் காண்பிக்கின்றான்...!

சிந்தனை இல்லாத நிலைகள் கொண்டு எதன் மேல் நாம் செயல்படுகின்றோமோ
1.அது அவருக்கும் எமனாகின்றது
2.நமக்கும் அந்த எண்ணமே எமனாகின்றது.

காரணம்... அவர் துயர்படும் உணர்வின் தன்மை எண்ணம் வலு கொண்டால் அந்த ஆன்மா நமக்குள்ளேயே வந்து விடுகின்றது.
1.அப்பொழுது அதற்கும் தண்டனை கொடுக்கின்றோம்
2.அதன் வழி நமக்குள் அந்த எமன் இங்கே வாட்டி வதைப்பான்.
3.எந்தெந்த நோயில் கடைசியில் அவஸ்தைப் பட்டாரோ அது எல்லாம் நமக்குள் வந்து வாட்டும்.

சற்று சிந்தித்துப் பாருங்கள் நம் சாஸ்திரங்கள் எதை வழி காட்டுகிறது நாம் எதை வழி நடத்திக் கொண்டிருக்கின்றோம் என்று...!

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை உந்தி விண்ணுக்குத் தள்ள வேண்டும். புவியின் ஈர்ப்புக்குள் கீழே இழுக்கக் கூடாது.