ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 2, 2021

நேரம் காலத்திற்குத் தான் அடிமையாக உள்ளோம்... நம் எண்ணத்தால் எதையுமே நல்லதாக்க முடியும் என்று எண்ணுகிறோமா...!

 

நல்ல நேரம் பார்த்துத் தான் நாம் செயல்பட வேண்டும் என்று ஜாதகரீதியாக நம்மைக் கட்டுப்படச் செய்து விட்டார்கள். அதன்படித்தான் இன்று பெரும்பகுதியானவர்கள் வாழ்கிறார்கள்.

ஜாதகங்களை நாம் பார்க்கப்படும் போது
1.அதிலே நல்லது எதுவுமே நடக்காது
2.ஆனால் அவர்கள் சொல்லும் கெட்டது அனைத்துமே நடக்கும்.

உதாரணமாக... பால் சத்தானதாக இருந்தாலும் அதிலே விஷம் பட்டுவிட்டால் அந்த விஷத்தின் தன்மை குடிப்போரை உடனடியாக மாய்த்துவிடும்.

ஜாதகத்தில் நல்லது இருந்தாலும்... எவ்வளவு சக்தி வாய்ந்த நிலைகள் கொண்டவராக நாம் இருந்தாலும்...
1.ஒரு வேதனை வந்துவிட்டால் நல்லதைச் சிந்திக்கும் செயல் இழந்துவிடுகிறோம்...
2.அந்த வேதனையே நம்மை ஆட்கொண்டு விடுகிறது.

அது போல் தான்... ஜாதகத்தில் சில நிலைகள் கெடுதலைப் பற்றிச் சொல்லும் போது இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் வந்து கொண்டே இருக்கும். அந்த நல்லதும் கெட்டதும் கலந்து கொண்டே இருக்கும்.

நல்லதை அவர்கள் அதிகமாகச் சொல்லியிருந்தாலும்
1.ஒரு வக்கிரம் (புத்தி – திசை) வந்து உங்கள் நல்லதைச் செயல்படவிடாது தடுக்கின்றது
2.அது உங்களுக்குத் துன்பத்தை ஊட்டும் என்று சொல்வார்கள்.

இது மனதில் ஆழமாகப் பதிந்து விடும்.

எல்லாமே சரியாக இருக்கிறது. ஆனால் “ஏழரை நாட்டான் சனியன்” வந்து உங்களுக்குள் எல்லாவற்றையும் மடக்கிக் கொண்டிருக்கின்றான் என்று ஜாதகக்காரன் சொன்னால் போதும். “இந்தச் சனியனை” நாம் நன்றாகப் பதியச் செய்து கொள்கிறோம்.

அடுத்து எந்த நல்ல குணம் நமக்குள் வந்தாலும் அதற்குள் இந்த உணர்வை மீண்டும் மீண்டும் சேர்த்து... நாம் பேசும் போதெல்லாம் ஜாதகக்காரன் பதிவு செய்த உணர்வு... இந்த விஷத்தின் தன்மை கொண்டு இது முன்னணியிலே வந்துவிடும்.

அந்தச் சனியிலிருந்து மீட்டுவதற்காக வேண்டி இந்த ஆலயத்திற்குப் போ... அந்த ஆலயத்திற்குப் போ...! இவ்வளவு பணத்தை நீ செலவழி... யாகத்தை வளர்த்து மந்திரத்தை ஜெபித்தால் நல்லதாக இருக்கும்... என்று சொல்வார்கள்.

அதன் படி நாம் செய்வோம். அந்த எண்ணத்தைச் சிறிதளவு கட்டுப்படுத்தும்.

ஏனென்றால் ஏழரை நாட்டான் பிடித்துவிட்டான் என்று காதிலே கேட்டோம். அதைக் கட்டுப்படுத்துவதற்காக ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். அதனால் கொஞ்சம் குறைக்க முடிந்தது.

இது அல்லாதபடி இன்னொன்றும் சொல்வார்கள்...! உங்கள் இரண்டாவது பிள்ளைக்கு “ஒரு கண்டம் இருக்கிறது...! அவனைக் கொஞ்சம் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்...” என்று சொல்லி வைத்துவிடுவார்கள்.

இரண்டாவது பிள்ளைக்கு நான்காவது வயது வரப்படும் போது பஸ்ஸிலேயோ வாகனத்திலேயோ விபத்து இருக்கிறது என்று பதிவு செய்து விடுவார்கள். குழந்தை பிறந்த பிற்பாடு ஏழரை நாட்டான் சனியன் பிடித்ததனால் இப்படிச் சொல்வார்கள்.

அதற்கப்புறம் பார்த்தால் வியாபாரமோ தொழிலோ மற்ற காரியங்களோ எல்லாமே மந்தமாகிவிடும். பஸ்ஸிலே விபத்து வரும் என்ற நினைவு மனதிலே டுக்... டுக்... டுக்.. என்று ஓடிக் கொண்டே இருக்கும்.

பிள்ளை ரோட்டிலே விளையாடப் போனால் போதும்.
1.ஜோசியக்காரன் சொல்லியிருக்கின்றானே... என்ன ஆகுமோ...?
2.அவன் சொன்னது எப்பொழுது நடக்குமோ...? என்று பிள்ளைப் பாசத்தால் தாய் பதறும்.
3.துடுக்.. துடுக்... என்ற பயத்தால் தாயிடமிருந்து இந்த அலைகள் போனவுடனே அவனை ஞாபகமறதியாகச் செல்லச் செய்யும்.

ரோட்டிலே பஸ் போய்க் கொண்டிருக்கும்.
1.தாயின் எண்ணம் பாய்ந்து கவனம் இல்லாது அவன் ரோட்டைக் கடப்பான்... அடிபடுவான்.
2.நான் நினைத்தேன்... கரெக்டாக நடக்கிறது...! என்பார்கள்.

ஏழரை நாட்டான் சனி பிடித்தால் இப்படி நடக்கும் என்று சொன்னான் அல்லவா...! என்று அந்தக் கெட்டது இப்படித் தான் நடக்கும்.

இதுகள் எல்லாம் எங்கிருந்து உற்பத்தி ஆகிறது...? என்று நீங்கள் கவனித்துப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்ல...! எல்லாம் வக்கிரத்தில் இருக்கிறது அதனால் “உனக்குக் குழந்தை இல்லை...” என்று விஷத்தை ஊட்டிவிடுவார்கள். அதற்கு இன்னென்ன சாஸ்திரம் செய்தால் சரியாகும்...! என்பார்கள்.
1.”குழந்தை இல்லை” என்று இந்த உணர்வை ஊட்டிய பின்
2.அதையே எண்ணத்தில் வளர்த்தால்... பிறகு எங்கே போவது...?

அதை நிவர்த்தி செய்ய இந்தக் கோவிலுக்குப் போ... அங்கே போ... அதைச் செய்... இதைச் செய்... என்று எதை எதையோ சொல்லி அதைச் செய்தால் சரியாகும்...! என்று அவர்கள் சொன்னபடி சுற்றிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

காரணம் நம் எண்ணத்திற்குள் எதைப் பதிவு செய்கிறோமோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் வளர்த்து விடுகிறோம். அது தான் நம்மை இயக்குகிறது.

மனிதனுக்கு ஜாதகம் இல்லை.. நேரமும் இல்லை... காலமும் இல்லை...! இதை உணர்ந்து கொள்ளுங்கள்...!