கேள்வி:
சாமிகள் உபதேசத்தைக் கேட்கும் போதெல்லாம் சிலருக்குக் கிறக்க நிலைகள் ஏற்படுகிறது. தூக்கம் வருகிறது. அந்த நேரத்தில் சாமிகள் கூறும் உபதேசக் கருத்துகள் அவர்களுக்குள் பதிவாகிறதா என்பது பற்றிய விளக்கம் வேண்டும்.
ஞானகுருவின் பதில்:
உதாரணமாக நல்லதாக நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். நல்லதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்கள். அந்த நேரத்தில் ஒருவர் வந்து வேதனைப்படும் சொல்லைச் சொன்னவுடனே என்ன ஆகிறது...?
நல்ல அணுக்கள் சோர்வடைகிறது அல்லவா...!
இதே மாதிரித் தான்
1.அந்த வேதனையை நீக்கிய ஞானிகளின் உணர்வை நுகரப்படும் போது
2.உண்மையிலே அதைப் பெற வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் போது வசிஷ்டர்... (கவர்ந்து கொண்ட சக்தி) உள்ளுக்குள் போகிறது.
3.இதற்கு முன்னாடி எத்தனையோ கஷ்டங்கள் சங்கடங்கள் எது எல்லாம் இருந்ததோ அதை அடக்கி இந்த உணர்வுகள் மேலோங்கும்.
நன்றாக இருக்கின்றீர்கள்.. ஒருவர் வந்து திடீரென்று வேதனையாகச் சொல்லப்படும் போது என்ன ஆகிறது...? நல்ல மனது எல்லாம் ஒடுங்கி விடுகிறது.
அந்த நல்ல மனதை “வேதனை” என்ற உணர்வு ஒடுங்கச் செய்கிறது. வேதனை நீக்கிய ஞானிகளின் உணர்வைக் கேட்கும் போது என்ன ஆகிறது...?
1.இந்த உணர்வு ஆன பின் உடல் ஆசை எல்லாம் மாற்றிவிடுகிறது.
2.ஒரே நினைவுடன் உங்களைத் துருவ நட்சத்திரத்திற்கு அழைத்துச் செல்கிறது.
3.அந்த உணர்வு உங்களுக்குத் தூங்குகிற மாதிரித் தெரியும்.
ஏனென்றால் மற்ற தீமைகளை எண்ணாதபடி ஒரே நினைவாக உங்கள் உடலில் உள்ள அணுக்கள் எல்லாம் அந்த உயர்ந்த சக்திகளைப் பெறுகிறது.
அப்படிப் பெருகிய நிலையில் உங்கள் எண்ணத்தை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்தப் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று சொன்னால் அங்கே கொண்டு போகிறது.
உங்களை மேலே தூக்குகிற மாதிரி இருக்கும்...!
இங்கே உபதேசம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது இந்தப் புவியின் கனம் இருக்காது. துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் போது உடல் எடை இல்லாது இருக்கும். சங்கடம் சலிப்பு என்ற நிலைகள் இருக்காது.
தூங்காமல் தூங்கும் காலம் எக்காலம்...? என்று சொல்வார்கள். ஆக தீமை என்ற உணர்வு வராதபடி... அந்த அருள் உணர்வுடன் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.
1.தூக்கம் வருகிறது... மயக்கம் வருகிறது... சாமி சொல்வதைக் கேட்க முடியவில்லை.
2.சாமி சொல்கிறார்... பெரியவர் என்னமோ சொல்கிறார்... என்ற எண்ணத்தில் இருக்கக்கூடாது.
இதை எல்லாம் கேள்வியாகச் சாமியிடம் கேட்கலாமா...? என்று இருக்கக்கூடாது. கேட்டால் தான் தெளிவு வரும். மற்றவர்களுக்கும் தெளிவு வரும்.
ஏனென்றால் நாளைக்கு அந்த மெய் உலகம் வர வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வு ஆதியிலே தோன்றிய அகஸ்தியன் எப்படி ஒளியாக ஆனானோ அந்த உணர்வுகள் பெருகும் காலம் வரும்.
காரணம்...
1.என்றைக்குமே ஒரு துன்பத்தின் நிலை அது எல்லை கடந்து வரப்படும் போது தான்
2.அதிலிருந்து மீண்டிடும் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெருக்க முடிகின்றது... வளர்க்கவும் முடிகின்றது.
இப்போழுது நான் சொல்வது உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியும்.
1.பின்னாடி போகப் போகப் போகத் தான்
2.இந்த அருள் உணர்வுகள் உலகம் முழுவதற்குமே தெரியக்கூடிய தன்மை வரும்.
ஏதோ நான்கு பேர்... பத்துப் பேர் வருகிறீர்கள்... நூறு பேர் வருகிறீர்கள் என்று லேசாக நினைக்கலாம். அந்த நூறு பேரால் இந்த உலகம் முழுவதற்குமே அருள் ஞானமாக மாற்றும் சக்திக்கு வரும்.
நீங்கள் அனைவருமே எதிர்காலத்தில் உலகை வெல்லக் கூடிய சக்தி பெற வேண்டும் என்பது தான் என்னுடைய (ஞானகுரு) பிரார்த்தனை எல்லாம்.