ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 11, 2019

You tube சாமிகள் upadesam வீடியோ - 1

முன்னோர்களை விண் செலுத்தும் தியானப் பயிற்சியும் விளக்கமும்
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் சப்தரிஷி மண்டலத்தின் அருள் சக்தியையும் அதிகாலை துருவ தியானத்தில் வலுவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் நம் முன்னோர்கள் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும். அவர்கள் பிற மனித உடலில் இருந்தாலும் அங்கிருந்து வெளியே வந்தவுடன் முன்னோர்கள் விபத்தில் இறந்திருந்தாலும் தற்கொலை செய்திருந்தாலும் கூட அவர்களை விண் செலுத்த முடியும். குடும்பத்தில் வரும் பரம்பரை நோயை அறவே அகற்ற முடியும். “முழுமையான விளக்கம்…”
தியான வாசகங்களும் ஓம் ஈஸ்வரா குருதேவா… பாடலும்
தியானத்தில் சொல்லப்படும் வாசகங்களும் சாமிகள் பாடிய அன்னையும் பிதாவும்… ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா பாடலும்


இராமலிங்க அடிகள் சொன்ன தத்துவம்
அருள் பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை என்ற நிலையில் பிறரை இம்சிக்காத நிலை நான் பெறவேண்டும். தீமையை நான் பார்க்கக் கூடாது தீமைகள் எனக்குள் வரக்கூடாது என்பதே அவருடைய பிரார்த்தனை. வேகா நிலை பெற்றுப் போகாப்புனல்… அதாவது மீண்டும் இன்னொரு உடலுக்குள் சென்று பிறக்கக்கூடாது என்றார். அன்று ஓட்டல் கிடையாது. ஆகவே தர்மசாலையை அமைத்து மக்களுக்கு உணவைக் கொடுத்து ஞானத்தைப் போதிக்கும் நிலையை ஏற்படுத்தினார். அதற்காகத்தான் அன்னமிட்டாரே தவிர அன்னதானம் செய்தால் புண்ணியம் என்று சொல்லவில்லை. மக்களுக்கு மெய் ஞானத்தைக் கொடுப்பதே உண்மையான தர்மம் என்றார்.




யாம் கொடுக்கும் அருள் பிரசாதம்
குரு அருள் உங்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்கே இந்தப் பிரசாதத்தைக் கொடுக்கின்றேன். அருள் மணங்கள் கமழும். எல்லோரும் அந்த அருள் ஞானப் பிரசாதத்தைப் பெறவேண்டும் என்று நீங்கள் வேண்டுங்கள். கோவிலில் போனால் நாம் எப்படி வணங்க வேண்டும் என்பதையும் நாம் முறைப்படுத்திடல் வேண்டும். எல்லோருக்கும் நாம் வழிகாட்டியாக இருக்க வேண்டும். மற்றவரைத் தள்ளிவிட்டு நாம் மட்டும் அருளைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆசைப்படுங்கள். அதையே தியானியுங்கள்… தவமாக இருங்கள். அப்பொழுது நீங்கள் இருந்த இடத்திலிருந்தே எல்லா ஆற்றலையும் பெறும் தகுதி பெறுவீர்கள்.
எல்லோரும் நல்லவரே…!
இந்த உலக மக்கள் யாரும் தவறு செய்யவில்லை. அறியாத நிலைகளில்… சந்தர்ப்பத்தால் அவர்கள் உயர்ந்த பண்புகள் இழக்கப்பட்டு ஒளி நிலை பெறாதபடி ஆக்கி விடுகிறது. விஞ்ஞான நிலைகளும் இன்று இழி நிலைக்கே மனிதனை அழைத்துச் செல்கிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்று உணர்த்தினார் ஈஸ்வரபட்டர். அதைச் செயல்படுத்தும் முன் உன் தாய் தந்தையரின் ஆசியை நீ பெற்று வா என்றார் குரு. அவர்கள் அருளால் தான் நீ அந்த மெய் ஞானத்தின் சக்தியைப் பெற முடியும் என்றார்.
வியாசர், ஆதிசங்கரர் வெளிப்படுத்திய தத்துவங்கள் எப்படி மறைந்தது…?
யாரையும் குறை காண வேண்டாம். அருள் உணர்வைப் பெருக்கினாலே போதும். மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்பது தேவை இல்லை. அன்று வியாசர் வெளிப்படுத்திய கருத்துக்களை மந்திர ஒலிகளாக வேதங்களாக மாற்றி விட்டனர். ஆதிசங்கரர் கொடுத்த அத்வைதத் தத்துவத்தை ஏற்காத துவைதவாதிகள் அவருக்கு ஏவல் செய்தனர். ஆனால் அதிலிருந்து விடுபட்டார். இதே போல் தான் அப்பருக்கும் ஏவல் செய்தார்கள்.
இவர் மனிதரே இல்லை “ஒரு ரிஷிப் பிண்டம்”
ஒரு சமயம் ரிக் வேதம் கற்றுக் கொடுக்கும் வாத்தியார் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது அவர் குடுமியைப் பிடித்துத் தூக்கி அடிக்கத் தொடங்கினார் ஈஸ்வரபட்டர். ஏண்டா தப்புத் தப்பாக வேதத்தைச் சொல்கிறாய் என்று அவரை வாயில் வராத வார்த்தையைச் சொல்லித் திட்டினார். பின் ரிக் வேதத்தைச் சுருதி மாறாமல் மேலிருந்து கீழேயும் திருப்பிக் கீழிருந்து மேலேயும் அப்படியே பாடிக் காட்டினார் ஈஸ்வரபட்டர். மேலும் ஒவ்வொன்றும் எப்படி உருவாகிறது என்பதை ஆதியிலிருந்து விளக்கிக் கூறினார். அந்த வாத்தியார் அடியை வாங்கிக் கொண்டு பின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு சென்றார். மறு நாள் என்னிடம் (ஞானகுரு) வந்து “இவர் ஒரு ரிஷிப் பிண்டம்… குருநாதராக நீங்கள் பெற்றது உங்கள் பாக்கியம்..” என்றார்.
சொர்க்க வாசல் என்பது எது…?
பரமபதம் என்று ஒரு விளையாட்டை ஞானிகள் உருவாக்கி மனிதன் விண்ணுலகம் செல்லும் மார்க்கத்தைத் தான் அதிலே காட்டினார்கள். சொர்க்க வாசல் என்பது அது நம் புருவ மத்தி வழி தான். அதிகாலையில் அருள் உணர்வுகளை எடுத்து குடும்பத்தில் உள்ளோர் அனைவரையும் ஒற்றுமையுடன் இணைந்து வாழச் செய்யவே புள்ளிகளை இணைத்துக் கோலமிடும் பழக்கங்களாக ஏற்படுத்தினார்கள் ஞானிகள். விளக்கைக் காட்டியதும் இருள் விலகுவது போல் இந்த வாழ்க்கையில் இருள் சூழச் செய்யும் நிலைகளிலிருந்து விடுபட விளக்கு பூஜை என்று வைத்தார்கள் ஞானிகள்.