ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 8, 2019

நாம் விழித்திருக்க வேண்டும்..! என்று ஞானிகள் சொன்னதன் மூலக் கருத்து என்ன...?


உதாரணமாக நம்மிடம் ஒருவர் சண்டையிடுகிறார்... திட்டுகிறார்..! என்றால் அதற்குப் பின் நாம் தியானத்தில் அமர்ந்தால் “அந்த எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும்...!” அதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். அதைச் சுவாசியுங்கள்.

இந்த உணர்வுகளைச் சுவாசித்துக் கண்களை மூடுங்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்.

இப்பொழுது எவரால் நமக்குள் அந்தத் தீமையான உணர்வுகள் உந்தப்பட்டு நாம் தியானிக்க முடியாமல் இருக்கின்றதோ அவர்களுக்கும் அறியாத இருள் நீங்கி அவர்களும் பொருள் கண்டுணரும் சக்தி பெறவேண்டும் என்று எண்ணிவிடுங்கள்.

அப்பொழுது அவருடைய உணர்வுகள் நமக்குள் வருவது தணிந்து விடும். அதாவது எப்படிச் செடிகளுக்கு உரம் கொடுக்கின்றோமோ இதைப் போல நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கு இவ்வாறு சக்தி ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு மாற்றவில்லை என்றால்..
1.அவர்கள் உணர்வுகள் நமக்குள் விளைந்து..
2.அந்த அணுக்கள் - சண்டையிட்ட அவர் திட்டிய அந்த உணர்ச்சியை உந்தித் தனக்கு உணவாக எடுத்துக் கொள்கிறது.

மேலும் நீங்கள் தியானத்தில் அமர்ந்தாலே அவர்கள் அப்படிச் செய்கிறார்கள்... இப்படிச் செய்தார்கள்...! என்ற எண்ணங்கள் அதிகமாகி குறையாகப் பேசிய அணுக்கள் அதிகமாகி நம் நல்ல அணுக்களுடன் போர் செய்யத் தொடங்கும்.

1.அப்பொழுது நமக்குள் மனக் கலக்கம்... மன நோய்... போன்ற நிலைகள் எல்லாம் வரும்.
2.பின் உடல் நோய் அதிகரிக்கத் தொடங்கிவிடும்.
3.ஆக நமக்குள் மனிதன் என்ற ஆறாவது அறிவின் நிலைக்கே எட்டாதபடி நாம் ஐந்தாவது அறிவுக்கே திருப்பிக் கொண்டு போவோம்.

இதை எல்லாம் நாம் மாற்றியமைத்துப் பழக வேண்டும். நம் வாழ்க்கையே இப்படித் தியானமாக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு முதலில் ஒரு பத்து நிமிடம் உட்கார்ந்து பழகிய பின் அடுத்து மணிக்கணக்கில் உட்கார்ந்து தியானத்தில் நான் சக்தி பெறுவேன் என்றால் அடுத்த கணம் நாம் வாழ்க்கையில் செல்லும் பொழுது முதலில் சொன்ன மாதிரி வரும்.

ஏனென்றால் இன்றைய மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் அதிர்ச்சியான செய்திகளையோ பிறர்படும் கஷ்டங்களையோ இப்படி எத்தனையோ நாம் கேட்கிறோம். காணாததற்கு பத்திரிக்கையும் டி.வி.யும் பார்க்கின்றோம்.

அதைப் பார்க்கும் பொழுது அரசியலில் பற்று இருந்தால் இப்படிச் செய்கிறார்கள்..! என்று வெறுப்படைவோம்.

இதை எல்லாம் பேசிக் கலந்து உரையாடினாலும் அடுத்த கணம் இந்த உணர்வுகள் மாறாதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கிச் சுவாசியுங்கள்.

1.நாம் எதைக் கேட்டோமோ அதெல்லாம் நலம் பெறவேண்டும்...
2.நாடு நலம் பெறவேண்டும்...
3.அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும்...
4.தெளிந்த மனம் பெறவேண்டும்...! என்ற உணர்வுகளை நமக்குள் வளர்க்க வேண்டும்.

பிறருடைய உணர்வுகள் இப்படி வந்தாலும் நமக்குள் அது வளராது மாற்றியமைத்து இப்படி நல்ல அணுக்களை நாம் பெருக்கலாம்.

அந்த அருளைப் பெறவேண்டும் என்ற எண்ணங்கள் வரும் பொழுது இது சிறுத்து விடுகிறது... துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் பெருகி விடுகிறது...! அப்பொழுது அது நமக்குள் அடங்கி வந்து விடுகிறது.

அதே போல் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் நாம் தவறு செய்யாமலேயே சில தவறுகள் வந்துவிடும். ஒரு விபத்து நடந்து விட்டது...! என்று ஓடி வந்து ஒருவர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உடனே ஆ...! என்று கேட்டுக் கொண்டே இருப்போம்.

1.இந்த உணர்வுகள் நமக்குள் பட்ட பின்
2.அவர் எந்த வகையில் விபத்தில் சிக்கினார்...! என்று சொன்னாரோ அதே உணர்வுகள் நமக்குள் தூண்டப்பட்டு
3.நாம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தால் ஓரத்தில் போகவிடாமல்
4.நம்மை அறியாமலே நடு ரோட்டுக்கு அழைத்துச் செல்லும்.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வு நம்மை அறியாமலே இவ்வாறு அழைத்துச் செல்லும். ஆகவே இந்த மாதிரி “விபத்து மற்ற அதிர்ச்சியான விஷயங்களைக் கேள்விப்பட்டால்...” அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தை எண்ணி ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்,

அவர்கள் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் அவர்கள் உடல் நலம் பெறும் சக்தியும் அது பெறவேண்டும் என்ற எண்ணங்களை நாம் நமக்குள் அதை உருவாக்கிப் பழக வேண்டும்.

ஏனென்றால் அதை எல்லாம் நாம் நல்ல குணங்களுடன் பார்க்கும் பொழுது... பிறருடைய தீமைகளை நாம் நுகர்ந்து நுகர்ந்து அந்த அணுக்கள் நமக்குள் பெருகிப் பெருகி... நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

மனக் கவலையும் மனக் குழப்பமும் ஆகி... எப்படி வாழ்வது...? என்ற நம் நிலையாகிப் பல திசைகளுக்கும் ஆளாக்கி விடுகின்றது.

ஆனால் யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்து அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு அதன் ஈர்ப்பிலேயே இருக்க வேண்டும். அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றுகின்றோம்.

இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் நாம் பற்றற்றதாக மாற்றுகின்றோம். இது ஒரு பழக்கத்திற்கு வந்து... அந்த அணுக்கள் நமக்குள் பெருகி விட்டது என்றால் நம்மை அறியாமலே அந்த நல்ல சொல்கள் வந்துவிடும்.

ஒரு பாடலைப் பாடுகிறோம் என்றால் அது பதிவாகி விட்டது என்றால் அந்தப் பாடல் சீராக வரிசையாக வரும்.

ஆனால் பாடல் முழுவதுமாகப் பாடுகின்றார்கள் என்றாலும் இடைமறித்து ஒரு வரியை மட்டும் தனித்துச் சொல்ல வேண்டும் என்றால் இரண்டாவது தரம் அந்தப் பாடல் நமக்கு நினைவுக்கு வராது. மறுபடியும் முதலிலிருந்து பாடிக் கொண்டே வர வேண்டும்.
1.அந்த வரிசைப்படுத்தி வரப்படும் பொழுது நமக்குள் அதனின் தொடர் வரிசை வருகின்றது.
2.இடையிலே சிக்கி விட்டால் நமக்கு அந்த நினைவு வராது.
3.ஏனென்றால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் இயங்கி அதன் அடுத்தடுத்து அடுக்குகளில் வருகின்றது.

இதனால் தான் நமது வாழ்க்கையில் எப்பொழுதுமே விழித்திருத்தல் வேண்டும்... தீமைகள் புகாதபடி விழித்திருந்து பழக வேண்டும்...! என்று சொல்வது.

சிவன் இராத்திரி அன்று விழித்திரு...! என்று ஞானிகள் சொன்னதன் மூலக் கருத்தே இது தான்.