ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 14, 2019

எந்தத் தீமையும் நமக்குள் ஒட்டாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்...?


இன்றைய மனிதனின் வாழ்க்கையில் ஆசை என்று வரும் பொழுது “ஒன்றைப் பெறவேண்டும்...! என்று எத்தனையோ வழிகளில் நாம் எப்படி எப்படியோ செல்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் தப்புவதற்காக குருநாதர் எனக்கு அனுபவரீதியில் தான் எல்லாமே கொடுத்தார்.

குருநாதர் காட்டிய வழியில் நான் (ஞானகுரு) காட்டுக்குள்ளும் மலைக்குள்ளும் சுற்றும் பொழுது எனக்கு ஒரு கஷ்டமும் தெரியவில்லை. அப்பொழுது ஒவ்வொரு நிமிடமும் குருநாதர் அந்தச் சக்தியைக் கொடுத்தார்.

ஆனால் இங்கே நாட்டுக்குள்ளும் நகருக்குள்ளும் வந்து நீங்கள் ஒவ்வொருவரும் இந்த அருள் சக்திகளைப் பெறவேண்டும் என்று நான் சொல்லும் பொழுது என்ன நடக்கின்றது...?

எல்லோரும் பெறவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். அப்பொழுது ஏற்றுக் கொள்ளாத நிலைகளில் அவர்கள் அந்தப் பண்பினைப் பெற முடியாத நிலை ஆகும் பொழுது “வருத்தமாகின்றது...!

தியானத்திற்கு வந்து எல்லாமும் பெற்றுக் கொண்டிருப்பார்கள்.
1.திடீரென்று அந்த உணர்வை மாற்றிக் கொண்ட பின்னாடி
2.அதைக் கேள்விப்பட்டவுடன் நமக்கு மனக் கஷ்டமாக இருக்கும்.
3.ஏனென்றால் அந்த உணர்வு நாம் எண்ணிய ஆசைகள்...
4.அங்கே அவர்களுக்குள் விளைந்த வேறு விதமான உணர்வு நம்மைத் தாக்கும் பொழுது நமக்கு இந்த நிலை மாறுகின்றது.

அதனால் தான் இதை எல்லாம்
1.சந்தர்ப்பத்திலே எப்படி வரும்...?
2.அதை நீ எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்...? என்று
3.குருநாதர் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு உணர்த்திக் கொண்டே இருப்பார்.
4.அவர்கள் எல்லோரும் அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று நீ எண்ணு.
5.அவர்களை அறியாது இயக்கும் அந்தத் தீமை உனக்குள் ஒட்டக் கூடாது என்பார்.

உதாரணமாக நாம் தோசை சுடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அடுப்பிலே தணல் அதிகமாகி விட்டால் என்ன ஆகின்றது...? ஒரு பக்கம் தோசை கருகிவிடுகின்றது.

கருகியவுடன் நாம் தோசையை எடுக்க வேண்டும் என்றாலும் கைக்கு வராது.
1.மறுபடியும் எண்ணையையும் தண்ணீரையும் போட்டு சமமாக்கிய பின்
2.அடுத்து மாவை ஊற்றினால் சட்டியில் தோசை ஒட்டாமல் சீராக வரும்.
3.இதை நாம் ஒரு முயற்சியாக எடுத்துச் செய்கின்றோம் அல்லவா...!

இதே மாதிரித் தான் பல தீமையின் உணர்வுகள் வந்தாலும் அது நம்மிடம் ஒட்டாமல் இருப்பதற்காக நமக்கு ஒரு பாதுகாப்பு வேண்டுமல்லவா...!

ஆகவே ஒவ்வொரு நிமிடமும் கஷ்டமோ நஷ்டமோ துன்பமோ துயரமோ வேதனையோ இதைப் போன்ற நிலைகளை நாம் பார்க்கப்படும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அந்த உணர்வினை வலுப் பெறச் செய்து கொள்ள வேண்டும்.

நம் பையனோ பிள்ளையோ சொன்னபடி கேட்கவில்லை என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர்கள் பெற வேண்டும். கல்வியில் ஞானமும் கருத்தறிந்து செயல்படும் அருள் ஆற்றலும் பெறவேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் ஒருவருக்கு நோய் வந்தாலும் அந்த அருள் சக்தியை எடுத்து நமக்குள் பெருக்கி அவர்களுக்குள் அந்தச் சக்தியைப் பாய்ச்ச வேண்டும். இப்படிப் பெருகி வந்தால் அந்த நோயோ வேதனையோ நமக்குள் வளராது.

இதை எல்லாம் நாம் பழகிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது...!