ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 31, 2019

நமக்கு ஆகாதவர்கள் யார் என்று அறிந்து கொள்ளுங்கள்... அவர்கள் மறைமுகமாகச் செய்யும் வேலைகளைப் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்


ஒரு உடலை விட்டு ஒரு ஆன்மா பிரிந்தால் சடங்குகள் என்ற நிலையில் சாஸ்திரங்கள் செய்து அந்த உடலைச் சுட்டுச் சாம்பலை எடுத்துக் கங்கையில் கரைத்து விட்டால் பாவங்கள் போய்விடும்..! என்று செய்கின்றனர்.

அதே சமயத்தில் புதைத்து விட்டால் அதற்காக மாவில் ஒரு பொம்மையைச் செய்து அவர் இந்த நிலையில் இருந்தார் என்று அவர் பேரைச் சொல்லி மந்திரங்களைச் செய்து மாவைக் கரைத்தால் (பிண்டத்தை) அவருடைய பாவங்கள் போய்விடும் என்று சாங்கிய சாஸ்திரங்கள் கூறுகின்றது.

பத்தாவது நாள் அல்லது பதினாறாவது நாள் அந்த வீட்டிலே சொந்த பந்தம் எல்லாம் அனைவரும் வந்து அவர் என்னென்ன பிரியப்பட்டுச் சாப்பிட்டாரோ அந்தப் பலகாரங்களைச் செய்து கொடுத்து விட்டு
1.எங்களுடன் நீ வாழ்ந்தாயே.. நீ இப்படிப் போய்விட்டாயே…
2.எங்களுடன் நீ இல்லாமல் இப்படிப் போய்விட்டாயே… என்று சொல்லி
3.எல்லாரும் அழுது கொண்டிருப்பது தான் வேலை.
4.ஆக அந்தத் துயரத்தை அதிகமாகக் கூட்டி அவரை ஒளிச் சரீரம் பெற முடியாத நிலையாக்கத்தான் முடிகிறது.

பதிமூன்றாவது அல்லது பதினாறாவது நாள் இதெல்லாம் செய்த பிற்பாடு சாதத்தை ஆக்கிக் காக்காய்க்குக் கொண்டு போய்க் கொடுத்தால்
1.அந்தக் காகம் சாப்பிட்டுவிட்டால்…
2.பாவ விமோசனம் ஆகிவிடும் என்று சாங்கியங்களைச் செய்து கொண்டுள்ளோம்.

பின் எண்ணையைத் தேய்த்து தலை முழுகி விட்டுச் சொந்தபந்தங்கள் எல்லாம் புதுத் துணியைக் கொடுத்துக் கட்டச் செய்து எல்லாம் பெருமைப்படும்படி செய்வார்கள்.

அவர் போய்விட்டார்…! ஆனால் உங்களுக்கு நாங்கள் ஆதரவாகப் பாதுகாப்பாக இருக்கிறோம்… துணிமணிகளைப் போடுகிறோம்…! என்று இந்த மரியாதைகளை எல்லாம் செய்வார்கள்.

தலைமகனைக் கூப்பிட்டு மாவிளக்கு செய்து… நெய் தீபம் இட்டு… முக்காடிட்டு… அந்தத் தீபத்தை அணையாமல் கொண்டு போய் விநாயகர் கோவிலில் காட்டி அங்கே அர்ச்சனை அபிஷேகம் செய்தால் “மோட்ச தீபம்…” என்று இப்படி சாங்கிய சாஸ்திரங்கள் கொண்டாடுகின்றனர்.

அடுத்து வரும் அமாவாசை அன்றைக்கு என்ன செய்வார்கள்…?

அவர் உடுத்திய துணி… அவர் சாப்பிட்ட உணவு… எல்லாம் போட்டுப் படைத்து அவருக்குச் சாப்பாடு கொடுத்து
1.எங்களுடன் வாழ்ந்தாய்… சொத்தெல்லாம் சம்பாரித்துக் கொடுத்தாய்
2.உங்களுக்கு ஆக்கிக் கொடுத்து விட்டு நாங்கள் சாப்பிடுகிறோம் என்று
3.சாப்பாட்டை வைத்துக் கும்பிடுவது தான் இன்றைய வழக்கில் உள்ளது.

அடுத்து சடங்கின் பிரகாரம் மந்திரங்களைச் சொல்லிப் பாவத்தைக் கரைக்க வேண்டும் என்ற நிலையில் செருப்பு குடை காய்கறி அவர் உட்கொண்ட பதார்த்தங்கள் எல்லாம் தானமாகக் கொடுப்பார்கள். சில வசதி படைத்தவர்கள் பசு மாட்டையும் கொடுப்பார்கள்.

1.பசு மாட்டைக் கொடுத்து அதன் வழி கொண்டு பாவத்தைப் போக்கியதால்
2.அந்தப் பசு மாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு அப்படியே சொர்க்கத்துக்கே கொண்டு போய்விடுமாம்.
3.இப்படி எல்லாம் சொல்லி நம்மைச் சர்வ முட்டாளாக்கி வைத்திருக்கின்றார்கள் (அன்றைய அரசர்கள்)
4.அரசர்கள் கொடுத்த சாங்கிய சாஸ்திரங்களைத் தான் இன்று நாம் செய்து கொண்டு வருகின்றோம்.

ஏனென்றால் அந்தச் சாங்கிய சாஸ்திரங்களை அரசர்கள் ஏற்படுத்தினார்கள் அல்லவா..! அதற்கென்று ஒரு கூலி ஆளை வைத்திருப்பான். (அவர்கள் தான் இன்று குடுகுடுப்புக்காரராகவும் மந்திரவாதியாகவும் உள்ளார்கள்)

சாங்கியம் எல்லாம் செய்து தனித்துப் பிரித்து வைத்த பிற்பாடு முச்சந்தியில் இருக்கும் வீட்டு வாசல்படி மண்ணை எடுத்துக் கொள்வார்கள்.

இறந்த உடலை எங்கே கொண்டு புதைத்தார்கள்… அல்லது சுட்டார்கள்…? என்று அறிந்து கொள்வார்கள். அங்கே சென்று இறந்த ஆன்மா எந்தச் சாமி மேல் அவர் பக்தியாக இருந்தாரோ... எந்தெந்த வழிகளில் அதை வழிபட்டாரோ… அதை எல்லாம் வரிசைப்படுத்திச் சொல்லிக் கொண்டே வருவான்.

இன்ன தெய்வத்தின் மேல் பற்று கொண்டார் என்ற நிலை வரும் பொழுது இறந்தவருடைய வீட்டில் அமாவாசை அன்று அப்பாவை (இறந்தவரை) நினைத்துக் கூப்பிடுவார்கள்.
1.அவர்கள் பாத மண்ணை வைத்து இவன் மந்திரத்தைச் சொல்லி இறந்த ஆன்மாவைக் கைவல்யப்படுத்திக் கொள்வான்
2.பின் அந்த ஆன்மாவை வைத்துப் பல பல வேலைகளைச் செய்வான்.
3.குட்டிச் சாத்தானாக மாற்றுவான்… பில்லி சூனியத்திற்குப் பயன்படுத்துவான்..
4.மற்றவர்கள் நோய்களைப் போக்கவும் பயன்படுத்துவான்.

கர்ப்பமான ஒரு பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால் அதை எடுத்துக் கொள்வார்கள். அதே போல் ஆஸ்பத்திரிகளில் உடைநீர் என்று எடுத்துக் கொள்வான். இது எல்லாம் மந்திரவாதிகள் செய்யக்கூடிய வேலைகள்.

அதை எல்லாம் எடுத்து வைத்து அதற்கென்று மந்திரத்தைச் சொல்லி கரு சிதைந்ததோ உடைநீரோ அந்த ஆன்மாக்களை வைத்து
1.கரு வித்தைகளைச் செய்வதும்
2.ஜோதிடங்கள் பார்ப்பதும்
3.சில குடும்பங்களைக் கெடுப்பதும்
4.தனக்கு ஆகாதவரைக் கெடுப்பதும்
5.குட்டிச் சாத்தானை வைத்துச் செய்யும் வேலைகளை எல்லாம் செய்வார்கள்.

இத்தகைய சாங்கிய சாஸ்திரங்களில் சிக்கிய குடும்பங்கள் எல்லாம் பேயாகப் போய்… நோயாகப் போய்… அவர்கள் “சர்வ நாசமாகும் நிலைகளுக்கு…” அங்கே செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஒருவர் அந்த உடலை விட்டுப் போன பிற்பாடு சாங்கிய சாஸ்திரப் பிரகாரம் நாம் சாப்பாடு வைத்துக் கூப்பிடுகின்றோம். ஆனால் கடைசியில் அவர்கள் நிலை என்ன ஆகிறது…?

இன்னொரு உடலுக்குள் போய் அவஸ்தைப்பட்டுப் அந்த உடலை விட்டுப் போன பின் தேளாகவோ பாம்பாகவோ பூச்சியாகவோ தான் இந்த ஆன்மா பிறக்கும்.

வீட்டுப் பக்கம் குடுகுடுப்புக்காரன் வருவான். பெரும்பகுதி அவர்கள் வீட்டிலே புது துணி கொடுத்தாலும் வாங்க மாட்டான். “கொஞ்சம் பழைய துணி இருந்தால் கொடுங்கள்…!” என்று அதைத் தான் கேட்பான்.

1.ஏனென்றால் உடலில் இருக்கக்கூடிய மணம் அதிலே இருக்கும்.
2.மந்திரங்களை அவன் ஜெபித்தவுடனே என்னென்ன செய்திருக்கின்றீர்களோ அந்த மணம் பட்டு
3.உங்கள் வீட்டுக்குள் அடுக்குப் பானையில் இருக்கும் சங்கதி எல்லாம் கூடச் சொல்வான்.

நமக்கு ஆகாதவர்கள் யார்..? என்று தெரிந்து கொள்வான். அங்கே போய் ஏதாவது ஒன்றைச் செய்து விட்டு “அவர்கள் தான் இந்த மாதிரி எல்லாம் செய்கிறார்கள்…!” என்று நம்மிடம் சொல்வான்.

அடப்பாவிகளா..! என்று நாம் நினைப்போம்.

இதை எல்லாம் வெளியிலே சொல்லக் கூடாது ஏனென்றால் ஆபத்தான விஷயங்கள் இருக்கிறது என்று நம்மிடம் “சத்தியம்” வாங்கிக் கொள்வான். 

ஆகாதவர்களின் தலை முடி… துணி… ஏதாவது எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று சிநேகிதமாகப் பேசுவது போல் எல்லாம் கேட்டு வாங்கிக் கொள்வான்.

தலை முடி… துணி… அவன் வைத்திருக்கும் அந்தக் கருவையும் வைத்து சில மந்திரங்களைச் சொல்லி எடுத்து வைத்திருக்கும் பாத மணலில் போட்டு வீட்டில் தெளித்து விடுவான்.

1.மணல் பட்டதும் சில வீடுகளில் கை கால் வராமல் போகலாம்
2.பெண்கள் கருவுற்றிருந்தால் கரு சிதைந்து போகும்
3.இந்த மாதிரி எல்லாம் சில குடும்பங்களில் நிறைய நடக்கிறது… (சாங்கிய சாஸ்திரங்களில் சிக்கிய குடும்பங்களில்…!)

காசைக் கொடுத்து மோட்சத்திற்கு அனுப்பலாம் என்று செய்யலாம். ஆனால் அப்படிப் போக முடியாது…!

இதை எல்லாம் தெரிந்து அறியாமல் இயக்கும் மந்திர தந்திரங்களிலிருந்து நீங்கள் விடுபடுங்கள்..!