நாம் அறியாமல் நுகரும் உணர்வுகள் நம்மை எப்படித்
தவறு செய்ய வைக்கின்றது என்பதைக் காட்டுவதற்குத் தான் துஷ்ட தெய்வங்களாகச் சிலையை வைத்துக்
காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
ஆகவே அந்தத் தவறை மாற்றுவதற்கு என்ன செய்ய
வேண்டும்..?
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும்
பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானித்து விட்டு
1.தவறு செய்யும் உணர்விலிருந்து நாங்கள்
மீள வேண்டும் என்று தீமை செய்யும் உணர்வை அடக்கி
2.அடுத்து நாம் செய்வதை எல்லாம் சிந்தித்துச்
செயல்படும் தன்மைக்குக் கொண்டு வர வேண்டும்.
இல்லை என்றால் பிறர் சொல்லும் உணர்வு வரும்
பொழுது நமக்குள் கோபம் வந்து உணர்ச்சிகளைத் தூண்டித் தாக்கும் உணர்வுகளே வரும்.
அந்தத் தாக்கும் உணர்ச்சிகள் நமக்குள் வந்தது
என்றால் என்ன நடக்கின்றது...? நம் நல்ல குணங்களுக்கும் இதற்கும் போர் நடக்கின்றது.
ஆக இந்தப் போர் நடக்கும் பொழுது நல்ல குணங்களை அது கொல்லத் தொடங்குகின்றது.
ஒருவனை எப்படிக் கொலை செய்யப் போகின்றோமோ
இதே போல் நம் நல்ல குணங்களை அது வீழ்ச்சி அடையச் செய்கின்றது.
ஆகையினால் இந்த உண்மையை நீங்கள் எல்லோரும்
அறிந்து கொண்ட நிலையில்
1.ஒவ்வொரு குடும்பமும் ஒரு தெய்வீகக் குடும்பமாக
நீங்கள் மாற வேண்டும்.
2.உங்கள் உடலில் தெய்வீகப் பண்புள்ள உணர்வுகளாக
மாற்றுதல் வேண்டும்.
3.உங்கள் சொல் பிறருடைய உணர்வுகளை நல் வழியில்
நடத்தக்கூடிய அந்த அருளாக மாற்ற வேண்டும்.
ஏனென்றால் நீங்கள் எப்படி இதை வழி நடத்த
வேண்டும் என்று அந்த உண்மைகளை நான் (ஞானகுரு) சொல்லிக் கொண்டே வருகிறேன். உங்கள் வழிகளில்
நீங்கள் தான் செயல்படுத்த வேண்டும்.
எல்லாவற்றையும் கேட்டபின்... “சாமி நன்றாகப்
பேசுகிறார்...!” என்று சொல்லி என்னைப் போற்றி விட்டு
1.இவ்வளவு பெரிய உண்மையைச் சொல்கிறேன்...!
எவனும் என் சொல்லைக் கேட்க மாட்டேன் என்கிறான் என்று
2.நீங்கள் இப்படிச் சொல்லி மற்றவர்களைக்
கோபித்துக் கொண்டால் என்ன ஆகும்...?
3.இந்த உணர்வை அவர்களால் ஏற்க முடியவில்லை....
நம்மால் நல்லதை வளர்க்க முடியவில்லை...! என்ற இந்த நிலை தான் வருகின்றது.
அதைப் போன்ற நிலை இல்லாதபடி குருநாதர் சொன்ன
அருள் வழிப்படி
1.அவர் கண்ட அகண்ட நிலையைப் போல்
2.நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞானிகளாக மாறியே
ஆக வேண்டும்.
3.இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையை
அடைதல் வேண்டும்.
சாமி சொன்னபடி தான் நான் எண்ணினேன்... என்
தொழில் இப்படி நஷ்டமாகிவிட்டது... என் பிள்ளை சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்...!
என்று இல்லாதபடி அந்த அருள் ஒளியை எடுத்தால் சிந்திக்கும் ஆற்றல் உங்களுக்கு நிச்சயம்
வரும்.
நஷ்டத்தை ஈடுகட்டும் உணர்வு வலு பெறும்.
அப்பொழுது சிந்தனையுடன் தொழில் செய்ய முடியும். குடும்பத்தில் சங்கடம் வந்தாலும் அதை
மாற்றிப் பண்புடன் அன்புடன் வாழும் பக்குவமும் வரும். இந்த உணர்வை வளர்த்திட வேண்டும்...!
ஞானத்தின் தன்மையைப் பதிவாக்கி அதனின் வழியில்
செயலாக்கப்படும் பொழுது பண்புள்ள குடும்பமாகவும் தெய்வீகக் குடும்பமாகவும் மாற முடியும்.
ஆகவே
1.கஷ்டத்தையும் நஷ்டத்தையும் விடுத்துவிடுங்கள்
2.அருளைப் பெறுவோம் பண்பைப் பெறுவோம் பரிவான
நிலைகளில் வாழ்வோம் என்ற மன உறுதி கொள்ளுங்கள்.
3.நீங்கள் ஒவ்வொருவரும் பிறருக்கு எடுத்துக்
காட்டாக வளர வேண்டும்.
ஞானிகள் வழியில் வாழ்க்கையை நடத்துவதற்கும்
இந்த உணர்வின் தன்மையைச் செயலாக்குவதற்கும் உங்களுக்கு எடுத்துச் சொல்லிவிட்டேன். இனிமேல்
இதை எடுத்து நீங்கள் வளர்த்துக் கொள்வதில் தான் இருக்கின்றது. நாளை வரும் விஞ்ஞான நஞ்சிலிருந்து
மீளலாம்.
நல்லதைப் பேசினேன்... எல்லாம் தெரிந்து கொண்டேன்...
என்ற நிலையில்
1.நாம் தெரிந்து கொண்டோம்... என்ற நிலையை
எடுத்தோம் என்றால் ஏமாந்து போவோம்.
2.ஒவ்வொரு நாளும் தெரிந்து கொண்டே தான் இருக்கின்றோமே
தவிர
3.”எல்லாம் தெரிந்தது...” என்ற அப்படிப்பட்ட
முழுமை எதுவும் இல்லை.
4.சொல்லில் உணர்வின் தன்மை அறிந்து கொண்டாலும்
முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமான
உணர்வுகள் இயக்கும். அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு அதைச் சீராகச் செயல்படுத்த வேண்டும்.
வெயில் அடிக்கும் பொழுது ஒரு நிலை... மழை
பெய்யும் பொழுது ஒரு உணர்வு... குளிர் அடிக்கும் பொழுது ஒரு உணர்வு... காற்றடிக்கும்
பொழுது ஒரு நிலை..! என்று இப்படி நமக்குள் கால நிலை மாறிக் கொண்டே தான் இருக்கும்.
1.எந்த நேரத்தில் எதைச் செயல்படுத்த வேண்டும்
என்ற உணர்வை அறிந்து
2.அந்த ஞானத்தின் வழியில் நாம் செயல்பட்டு
அருள் வாழ்க்கை வாழ்தல் வேண்டும்
3.அனைவரையும் அந்த வழியில் வாழ வைக்க நாம்
தவமிருப்போம்.
அருள் வழியில் செல்வோம். இந்த உடலுக்குப்
பின் முழுமையான ஒளியைப் பெறுவோம். எல்லா உணர்வையும் ஒளியின் சரீரமாகப் பெறுவோம்.
பத்தாவது நிலையான கல்கி...! என்ற ஒளி நிலையை
நாம் அனைவரும் அடைவோம்...!