ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 25, 2019

மனிதன் இடும் சாப அலைகள் அவன் இறந்த பின் மற்றவர்களை எப்படிப் பாதிக்கிறது...?


குருநாதர் காட்டிய வழியில் யாம் (ஞானகுரு) சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு சமயம் ஒரு வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருக்கின்றார்கள்.

குருநாதர் சொன்னபடி அங்கே அந்த வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தக் குடும்பத்தில் உள்ள பெரியவர் ஒருவர் “எனக்கு இப்படிச் செய்கிறார்களே... இந்தப் பாவிகள்...!” என்று சொல்லிச் சாபமிட்டுக் கொண்டே இருந்தார்.

அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அந்த நோய் தாங்காதபடி அவர் சொல்கிறார். ஏனென்றால்
1.அவர் நினைக்கிறபடி அந்த வீட்டில் உள்ளவர்கள்
2.அவரைச் சரியாகக் கவனிக்கவில்லை...! என்று சாபமிட்டுக் கொண்டே இருக்கின்றார்.

ஆனால் அந்தக் குடும்பம் நல்ல செல்வாக்கான குடும்பம் தான்...! இவருடைய சாப அலைகள் இந்தக் குடும்பத்தில் சேர்ந்து பின் விளைவுகளுக்கு வந்து அவர் இறந்த பிற்பாடு... அந்தக் குடும்பமே அப்படியே மொத்தமாக நொறுங்கிப் போனது...!

அவர் உடலுடன் இருக்கும் வரை ஓரளவுக்கு ஒருவிதமாக இருந்தனர். ஆனால்
1.அவர் இறந்த பிற்பாடு என்ன ஆகிறது என்கிற வகையில்
2.அந்த உண்மைகளை எல்லாம் காண்பதற்காகத்தான் குருநாதர் அங்கே பார்க்கச் சொன்னார்.

பல அனுபவங்கள் பெறுவதற்காக வேண்டி குருநாதர் எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் செய்தார். அப்பொழுது எனக்குச் சரியான சாப்பாடு இல்லை.

வெறும் பேரீட்சம்பழம் தான் எனக்குச் சாப்பாடு. ஒரு நான்கு பழத்தைச் சாப்பிட வேண்டியது. தண்ணீரை வயிறு நிறையக் குடிக்க வேண்டியது.
1.குருநாதர் சொன்னபடி சில சுவாசங்களை எடுத்துக் கொள்வது.
2.வயிறு கம்...! என்று இருக்கும்... வேறு எண்ணமே வராது.
3.நான்கு பழத்தை உறித்துப் போட்டுத் தண்ணீரைக் குடித்தோம் என்றால் பொறுமிக் கொண்டு நன்றாக இருக்கும்... ஒன்றும் செய்யாது.

எனக்கு வேறு ஒரு உணவும் கிடையாது.

இதெல்லாம் குருநாதர் யாம் ஒவ்வொன்றையும் அனுபவரீதியாக அறிந்து கொள்வதற்காகப் பல இடங்களுக்கு என்னைச் சென்றுவரச் செய்தார்.

குருநாதர் இப்படிப் போகச் சொன்ன பக்கம் ஒரு இடத்திற்குப் போனால் அங்கே (ஏற்கனவே) யாரோ ஒருவரை அடித்துக் கொன்று போட்டிருக்கிறார்கள்.

அவரின் இரத்தங்கள் அங்கே மண்ணில் பதிவாகி இருக்கின்றது. அதே மண்ணில் அவருடைய உணர்வுகளும் பதிந்திருக்கின்றது.

ஆனால் குறித்த நேரம்...
1.அதாவது அவர் எந்த நேரம் கொல்லப்பட்டாரோ...
2.அந்தக் கொல்லும் பொழுது எந்த உணர்வலைகள் வெளிப்பட்டதோ..
3.அதே நேரத்தில் என்னைப் போகச் சொன்னார்,

யாம் போன சமயம் “அடப் பாவிகளா...! என்னைக் கொல்கின்றீர்களேயடா... என்னைக் கொல்கின்றீர்களேயடா...!” என்று சப்தம் போடுகிறது.

அங்கே போனவுடன் இறக்கும் பொழுது சொன்ன அதே உணர்வு வருகிறது.
1.அந்த ஒலி அலைகள் மண்ணில் பட்டவுடன் இந்த உணர்வுகள் எப்படி உராய்கின்றது...?
2.இது எந்தெந்த நிலையைச் செய்கின்றது...?
3.உடலில் விளைந்த உணர்வுகள் இறந்த பின் அங்கே எப்படிப் பதிவாகிறது..? என்று அதை எல்லாம் பார்க்கும்படிச் செய்தார் குருநாதர்.

அனைத்தையும் அனுபவரீதியாக அறிந்து கொள்ளும்படிச் செய்தார் குருநாதர்.

ஒரு மனிதரின் ஆவி இன்னொரு உடலிற்குள் எப்படிச் செல்கிறது...? சென்றபின்... புகுந்து கொண்ட உடலில் எப்படிப்பட்ட அணுக்கள் உருவாகின்றது...? இது போன்ற உணர்வுகள் என்னவாகும்...? என்பதையெல்லாம் குருநாதர் பல இடங்களுக்கு எம்மைச் சென்றுவரச் செய்து... பல இன்னல்களைச் சந்திக்கச் செய்து... அதிலிருந்து தெரிந்து கொள்ளும்படி செய்தார்.

அவ்வாறு பெற்ற அனுபவங்களை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை எல்லாம் சொல்கிறேன்.