ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 28, 2019

மனமே இனியாகிலும் மயங்காதே… பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே…!


ஒருவரை நல்லவராக எண்ணுகின்றோம். அந்த உணர்வுகள் நமக்குள் விளைகிறது. அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் “நல்லவர்…” என்று தான் எண்ணுகின்றோம்.

அதே சமயத்தில் ஒரு சந்தர்ப்பம் பகைமையாகி விட்டால் மோசமானவன்… ஏமாற்றுகின்றான்…! நண்பனாகப் பழகினான்… கெட்டவனாகி விட்டானே…! என்கிற பொழுது அது நமக்குள் விளைகிறது.

ஆகவே நாம் எண்ணியது எதுவோ அதுவே உருவாகி மீண்டும் பகைமையையே உருவாக்குகிறது. ஏனென்றால் “உயிருடைய வேலை இது தான்…!”

ஏனென்றால் இதை எல்லாம் உணரும்படி குருநாதர் எல்லா இடங்களுக்கும் சுற்றிப் பார்த்துப் பல உண்மைகளை எனக்கு உணர்த்தி..
1.இதிலிருந்தெல்லாம் மனிதன் எப்படித் தெளிய வேண்டும்…?
2.எவ்வாறு வாழ வேண்டும்…? எவ்வழியில் வாழ வேண்டும்…? என்று காட்டினார்.

ஒரு சமயம் பனிப் பாறைகள் இருக்கும் இடமாக பத்ரிநாத்துக்குப் போகச் சொல்கிறார் குருநாதர். வெறும் கோவணத் துணியுடன் தான் அங்கே போகச் சொன்னார்.

1.அவர் சொன்ன ஒரு நட்சத்திரத்தின் உணர்வுகளை நான் எடுத்தால் தான்
2.அதைச் சுவாசித்தால் தான் என் உடல் சூடாகும்… அங்கிருக்கும் குளிர் பாதிக்காமல் இருக்கும்…!

நான் சொன்னதை எடுக்காமல் விட்டுவிட்டால் நீ இறந்து விடுவாய் என்பார். அவர் சொன்னபடியே எடுத்து நான் சென்று கொண்டிருக்கும் பொழுது பழனியில் இருக்கும் என் பையனைப் பற்றி நினைவு வந்தது.

அவனை அங்கே ஊரிலே விட்டு விட்டு வந்தேன்… இப்பொழுது அவன் அங்கே என்ன செய்கிறானோ…? என்ற எண்ணினேனோ இல்லையோ குருநாதர் சொன்னதை எடுக்க விட்டு விட்டேன்.

உடனே என்னுடைய இருதயம் என்ன செய்கிறது…? அப்படியே பட… பட… பட… என்று இரைய ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்தில் உயிரே போய்விடும் போல் இருக்கிறது.

ஆனால் அடுத்த நிமிடம் குருநாதர் வருகிறார்…! ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த மாதிரி வரும் பொழுதெல்லாம் எனக்குள் நினைவு படுத்துவார்.

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல் மறைவதைப் பாராய்…!

இப்பொழுது உன் உடல் இரைகிறது. நீ போய்விட்டால் யாரைப் போய் பார்க்கப் போகிறாய்..? காப்பாற்றப் போகிறாய்…! உன்னையே காப்பாற்ற முடியவில்லையே…!

நேற்றிருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா..?
என்று கேட்கிறார் குருநாதர்.

இந்த மனித உடலை நீ சதமாக எண்ணுகிறாய். உன்னிடம் சொன்னதன் நிலைகளை
1.நான் அந்த அருள் ஒளி பெற வேண்டும்
2.என் பையன் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வை நீ செலுத்தியிருந்தால்
3.இந்த நிலை வராதே…! என்று இதை அந்த இடத்தில் உணர்த்துகின்றார்.

ஒவ்வொரு நிமிடமும் இந்த வாழ்க்கையில் உயர்ந்த எண்ணங்களுடன் நாம் இருப்பினும்… நம்மை அறியாமலே நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நம்மை எப்படிப் பாதுகாப்பற்றதாக மாற்றுகிறது என்ற நிலையை அங்கே நிதர்சனமாக உணர்த்துகின்றார்..

உங்களை யாம் இப்பொழுது தியானமிருக்கச் சொல்கிறோம். உங்கள் குழந்தை மீது நீங்கள் மிகவும் பிரியமாக இருக்கின்றீர்கள். அது என்ன செய்கிறது…?

நன்றாகப் படிக்கிறேன் என்று நினைத்துப் பரீட்சை எழுதினான். ஆனால் அதிலே தோல்வி அடைந்தால் என்ன நினைக்கின்றீர்கள்…?

இத்தனை பணத்தைச் செலவழித்தேனே… படிக்காமல் போய்விட்டானே...! என்று வேதனைப்படுகின்றீர்கள். இவ்வளவு செலவழித்தேன்… இந்த மாதிரி ஆகிவிட்டதே…! என்று சொல்லி இந்த ஆசையை வைக்கும் பொழுது
1.அந்தக் குழந்தையைப் பாதுகாப்பதற்கு மாறாக
2.இப்படித் தொலைத்து விட்டாயே…! என்ற வேதனையைத் தான் எடுத்து வருத்தப்படுகின்றீர்கள்.

அதற்குப் பதிலாக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து நமக்குள் வலுவாக்கிக் கொண்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை உடல் முழுவதும் படர வேண்டும்
2,என் குழந்தைக்குக் கல்வியில் நல்ல ஞானம் வர வேண்டும்…
3.அதற்குண்டான சக்தி பெறவேண்டும் என்று எண்ணினால் அந்த வேதனை நம்மைப் பாதிக்காது.

அவனுக்குள் இந்த உண்ர்வுகள் பாய்ந்து அவனையும் சிந்திக்கச் செய்யும். எதனால் தோல்வி அடைந்தோம்…? என்று அறிந்து அதை மாற்றிச் சரியான பாதையில் செல்லும்படிச் செய்யும்.

வேதனையையும் துன்பத்தையும் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் எண்ணி வாழ்வதை விடுத்து என்றுமே நாம் அருள் வழியில் சென்றிடல் வேண்டும்.

குருநாதர் எனக்குக் காட்டிய இந்த அருள் வழியைத்தான்…!