ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 7, 2019

சப்தரிஷிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


இன்று உடலுடன் ஜீவன் பெற்று வாழும் நிலையில் நம் உடலின் எடையை ஒரு பாரமாக... அதாவது சுமக்க முடியாமல் இருப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுவதில்லை.

நாம் எடுக்கும் சுவாச அலையில் நம் உயிரணு என்ற இயந்திரத்தின் ஓட்டத்தினால் நம் உடலிலுள்ள பல கோடி உயிரணுக்களும் அந்தச் சுவாசத்தின் அலையை இந்தப் பூமியின் ஈர்ப்பில் காற்றாகக் கலந்து தான் வாழுகின்றோம்.

ஆனால் இப்பொழுதுள்ள நம் உடலின் எடையே ஜீவனற்ற உடலாக ஆன பின்பு அதன் கனம் கூடி விடுகிறது.

இந்தப் பூயின் ஈர்ப்பு சக்தி குணத்துடன் ஜீவனற்ற பிம்பங்கள் உள்ள நிலையைப் போல்... ஜீவன் பிரிந்த உடல்களும்... அந்த ஈர்ப்பின் அதிகப்படியான இழுவையுடன்... “சுவாச அலையை எடுக்காத உடல் ஆனவுடன்...” கனம் பொருந்திய ஈர்ப்புடன் அந்த உடல் ஐக்கியப்பட்டு விடுகிறது.

இந்தச் சுவாச அலையின் சக்தியினால் தான் ஜீவன் கொண்ட ஜீவன்களின் நிலைக்கும் ஜீவன்ற்ற பிம்பங்களின் நிலைக்கும் கனத்தில் (எடையில்) வேறுபாடு ஏற்படுகின்றது.

இருந்தாலும் ஜீவன் பிரிந்த உடல்கள் அந்த உடலிலுள்ள மற்ற ஜீவ அணுக்களின் ஈர்ப்பின் அமில குணத்தால் அந்த உடல் உயிர் பிரிந்த பிறகு அதன் உடல் பெருகுகிறதே...! அதன் நிலை எப்படி...?

நாம் சில வகை உணவுப் பொருட்களை ஒன்றுடன் ஒன்று கலந்து அதில் நீரை ஊற்றி வைத்தால் அதிலிருந்து சில அமிலங்கள் வளர்ந்து புளிப்பு நிலை ஏற்படுகிறது அல்லவா...!

அது போல் இந்த ஜீவனற்ற உடலும் அந்தப் புளிப்பு நிலையான அமிலங்கள் ஏற்பட்ட பிறகு அதன் நீர் சக்தி வடிந்து இந்த உடல் பிம்பம் நாற்றத் தன்மை இழந்து இந்தப் பூமியுடன் அந்த உடலும் கலக்கின்றது.

அதன் பிறகுதான்... உடலிலுள்ள அந்த உடலுக்குச் சொந்தமான ஜீவ அணுவுடன் அந்த ஜீவ ஆத்மாவும் முதலிலேயே உடலை விட்டுப் பிரிந்த உயிருடனும் இந்தச் சப்த அலையுடனும் இவ்வாத்மாவும் கலந்து இவ்வாத்ம ஜீவன் அதற்குகந்த செயல் வட்டத்திற்குள் செல்கிறது.

1.உடலுடன் உள்ள பொழுது ஒரு நிலையும்...
2.உடலை விட்டு ஜீவன் பிரிந்த பிறகு ஒரு நிலையும்
3.அவ்வுடல் பிம்பமே மாறி அவ்வாத்மா ஜீவனுடன் சேர்ந்த பிறகு ஒரு நிலையும்
4.இப்படி மூன்று நிலைகளில் மனிதனின் நிலைகள் உள்ளன.

ஆனால் சப்தரிஷிகளும் சித்தர்களும் இந்த உடல் என்ற பிம்பத்தையே பிரித்துக் கூட்டும் செயலுடையதாக்குகின்றார்கள். அவர்கள் எடுத்த எண்ணத்தின் சுவாச ஜெபத்தால் இக்காற்றில் உள்ள அமில குணங்களையே பிரித்துக் கூட்டி வழிப்படுத்திச் செயல்படும் முறையைச் செயல்படுத்துபவரே நம் சப்தரிஷிகள்.

காற்றாகவும் நீராகவும் ஒளியாகவும் ஐக்கியப்பட்டுள்ள நம் சப்தரிஷிகளின் செயலினால் தான் இன்று இந்தப் பூமியின் ஆன்மாக்கள் பிறந்து வாழச் செயலாக்கி வருகின்றார்கள்.

நம் பூமி மட்டும் தான் சுழன்று ஓடுகிறதா...? மற்ற மண்டலங்கள் இல்லயா...? என்ற வினா எழும்பலாம். ஜீவன் கொண்ட ஜீவாதாரமுடன் வாழும் பூமி நம் பூமி.

அதற்குகந்த அமில சக்தியைக் கூட்டி வழிப்படுத்தியவர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பெற்ற தவத்தின் வலிமை நிலையில்
1.இந்தப் பூமியின் அமிலங்கள் கூடப் பெற்று... அந்தக் கூட்டின் வளர்ப்பில் மனித பிம்பங்கள் வளரச் செய்து
2.அந்த மனித பிம்பங்களுக்கு அறிவாற்றலின் வழியைப் பல வழிகளில் வளரச் செய்து
3.மனிதர்களின் ஞானத்தின் வளர்ச்சிக் கூட்டின் வலு சக்தியைத் தன் வலுவுக்கு அதிகப்படி எடுத்து
4.மேன்மேலும் இந்தக் காற்று மண்டலத்திலுள்ள இப்பேரண்டம் பெரு நிலை என்ற
5.பரந்த நிலையைக் கூட்டிப் பிம்பம் செய்கிறார்கள் நம் சப்தரிஷிகள்.

மண் மண்ணாக உள்ள பொழுது அதன் பிம்பத்தைக் காண முடிகிறதா...? மண்ணை எடுத்துக் குயவன் பானையும் சட்டியும் பல பொருள்களாக்கிக் காட்டினால்தான் அம்மண்ணின் பிம்பத்தை நாம் காணுகின்றோம்.

1.ஆதி சக்தியின் அருள் தான் குயவனும் மண்ணும்.
2.அந்தக் குயவன் மண்ணைத் தோண்டி எடுத்துத்தான் செய்து பொருளாகக் காட்டுகின்றான்.

அதைப் போன்று...
1.பூமியைப் பொருளாக்கி மனித சக்தி படைத்துத் தன் சக்திக்குகந்த பொருளான ஞானப் பொருட்களை
2.சப்தரிஷிகள் ஞானியாகவும் சித்தனாகவும் பொருள்படுத்தி எடுத்துக் கொள்கின்றான்.

சப்தரிஷியின் பொருளான நம் பூமியின் தொழிற்சாலையில்... அந்தத் தொழிலுக்குகந்த மூலப் பொருளின் தரம் குறைந்ததனால்
1.மேலும் தரமான பொருளைப் போட்டு கல்கியைக் காண
2.சப்தரிஷிகளின் செயல்கள் இன்று நடந்து வருகின்றன.