ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 2, 2014

குருவின் அருள் எப்படிப்பட்டது?

செடிக்கு நீர் போன்றது குருவின் அருள்
ஒரு செடிக்கு நீர் ஊற்றுவதினால் அந்தச் செடி நீரின் துணை கொண்டு காற்றிலுள்ள தன் சத்தைக் கவர்ந்து தன்னை வளர்த்துக் கொள்கின்றது.

நமது உயிரான்மாவும் ஒரு செடி போன்றதே.
செடிக்கு நீர் போன்று குருவின் அருள்.

எனவே, குருவின் துணை கொண்டு காற்றில் பரவிப் படர்ந்துள்ள மகரிஷிகளின் அருள் உணர்வை நாம் கவர்ந்து, நம்மில் நாம் மெய்யுணர்வை வளர்ப்போம்.
அறியாது வரும் நஞ்சிலிருந்து மீட்டிடும் குருவின் அருள்
ஐந்தறிவு கொண்ட உயிரினங்கள் தான் உண்ணும் உணவிலுள்ள விஷத்தை உடலாக மாற்றி, நல்ல தன்மைகளைத் தன் கழிவாக மாற்றிவிடுகின்றன.

ஆறறிவு கொண்ட மனிதர்களோ நல்ல தன்மைகளைத் தமது உடலாக மாற்றி, விஷத் தன்மைகளைத் தமது கழிவாக மாற்றிவிடுகின்றனர்.

மனிதர் ஆறாவது அறிவின் துணைகொண்டு நஞ்சினை ஒடுக்கி நல்ல தன்மைகளைச் சேர்க்கும் தன்மை பெற்றிருந்தாலும்
தம்மையறியாது சேரும் நஞ்சிலிருந்தும்
தம்மைக் காத்திடும் நிலை பெறவேண்டும்.
அதற்கு குருவின் அருள் துணை வேண்டும்.
குழப்பமான நேரங்களில் குருவின் அருளை ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்
குழப்பங்களும் கவலைகளும் தம்மைச் சூழ்கின்றபொழுது அதனின் வேதனையில் ஆழ்ந்துவிடுகின்றனர்.

அந்த சமயத்தில் குருவையும் குரு தமக்குக் கொடுத்த அருள் வாக்கையும் எண்ணுவதற்குப் பலர் மறந்துவிடுகின்றனர்.

ஆனால், இது போன்ற சந்தர்ப்பங்களில் குருவையும் குரு தமக்குக் கொடுத்த அருள்வாக்கையும் எண்ணி ஏங்கும்பொழுது
நம்மைச் சூழ்ந்த குழப்பங்களும் கவலைகளும்
குருவின் அருளால் அகன்று
மகிழ்ச்சி உண்டாவதைக் காணலாம்.
குருவின் அருளால் விண்ணின் ஆற்றலைப் பெறுவோம்
குருவின் அருள் துணை கொண்டு
தன்னில் தன்னையறிந்து
விண்ணின் ஆற்றலைத் தன்னுள் பெற்று
பிறவாநிலை எனும் பெருநிலை பெறுவோம்.