ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 25, 2014

குடும்பத்தில் கணவன் மனைவி இருவரையும் ஒற்றுமையாக வாழச் செய்யும் வழிமுறை

1. அகஸ்தியரும் அவர் மனைவியும் இரு உயிரும் ஒன்றி வாழ்ந்த அருள் வாழ்க்கை
அகஸ்திய மாமகரிஷி தம்முள் உள்ள நஞ்சினை அடக்கிபுவியின் துருவத்தின் வழியாக விண்ணின் ஆற்றலை தம்முள் நுகர்ந்து,  எதை எல்லையாக வைத்து எதனை நுகர்ந்தாரோ,  அதனின் ஆற்றலை தம்முள் பெற்றவர்.

இந்தப் புவியில் வாழ்ந்த காலத்தில்,  ஒவ்வொன்றின் உணர்வையும் நுகர்ந்தறிந்து  அதனை தம்முள் விளையவைத்து,  அதனின் ஆற்றலைத் தம்முள் பெருக்கிக் கொண்டவர்.

அகஸ்தியர் தமக்குள் விளையவைத்து வளர்த்துக் கொண்ட பேராற்றல்கள் அனைத்தையும் ன் மனைவியின்பால் பாய்ச்சினார்.

ன் மனைவியும் மெய்யுணர்வின் தன்மை பெறவேண்டும். 
இருளைப் போக்கி பொருள்காணும் திறன் பெறவேண்டும் என்றும்,  
தம் மனைவி தம்முள் அறியாது சேர்ந்த நஞ்சை அடக்கி, 
தம்முள் சேர்த்த உணர்வுகளை, 
ஒளியின் உணர்வின் தன்மையாக மாற்றவேண்டும் என்றும், 
அகஸ்தியர் தம் அருள் உணர்வுகளை  மனைவிக்கு ஊட்டினார்.

அகஸ்தியரின் மனைவியும்,  தமது கணவர் தமக்கு ஊட்டிய அருள் உணர்வின் தன்மைகளைத் தமக்குள் இணைத்து,  வளர்த்து,  அதன் நிலைகொண்டு பேரானந்தத்தின் உணர்வின் தன்மைகளை அறிந்துகொண்டது.

ஆக, இவைகளை  தன் கணவரால்தான் பெற்றோம் என்று உணர்ந்து,  தாம் பெற்ற பேரானந்தத்தின் உணர்வின் தன்மைகள்  தமது கணவரிடத்தில் மென்மேலும் வளரவேண்டும், அவர் உயர்ந்த ஆற்றல்களைப் பெறவேண்டும் என்று மனைவி எண்ணியது. 

அவருடைய அருள் துணை கொண்டு,  தம்முள் அருள் ஆற்றல்கள் பெருகவேண்டும் என்ற உணர்வை வளர்த்து,  தமது கணவரின் உணர்வுகளுடன் தமது உணர்வுகளை இரண்டற இணைத்து,  இரு உணர்வுகளையும்,  ஒரு உணர்வாக ஒன்றிணைத்து,  துருவத்தின் ஆற்றல்களைத் தம்முள் வளர்த்துக் கொண்டார்கள்.

அகஸ்தியரும் அவரும் மனைவியும்
தங்களுடைய உணர்வுகளை ஒரு உணர்வாக்கி,  
விஷத்தை அடக்கி,  
நல் ஒளியின் உணர்வினை தங்களுக்குள் வளர்த்து
இரு உயிரையும் ஒரு உயிராக்கி, 
துருவத்தின் ஆற்றலை நுகர்ந்து,  
அதைத் தங்களுக்குள் விளையவைத்து,
எதையும் அடக்கிடும் உருவாக்கிடும் நிலையாக
துருவ நட்சத்திரமா உருவானார்கள்.

அவர்கள்,  இன்றும் விண்ணில்  புவியின் துருவப் பகுதியில்  துருவ நட்சத்திரமாக  என்றும் பதினாறாக, அழியா ஒளிச்சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
2. தனித்து சக்தி பெறலாம் என்றால் “முனி” என்ற நிலையைத்தான் அடைய முடியும்
பொதுவாக, ஆண்பால் என்பது ஆதிக்க உணர்வும் பெண்பால் என்பது அரவணைத்து இயக்கும் நிலையும் கொண்டது.

இதில் தனித்து இயங்கும் நிலையானால், முனியாகத்தான் ஆக  முடியும்  என்ற உண்மையின் தன்மைகளை உணர்த்தியவர்கள் மெய்ஞானிகள்.

மெய்ஞானிகள் உணர்த்திய அருள்வழி கொண்டு, ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் இரு உணர்வும் ஒரு உணர்வாக ஒன்றுபட்டு, ஒருவர் மற்றவரை எண்ணி, அவர் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், உயர்ந்த ஆற்றல்களைப் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

இப்படிக் கணவனும் மனைவியும் ஒன்றிணைக்கும் பொழுது, வலுவாகின்றது.  துருவ மகரிஷிகளின் அருளுணர்வுகளை எளிதில் ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கின்றது.

ஆகவே, உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கும் நிலையாக கணவனும்,  மனைவியும் தங்களுடைய உணர்வுகளை ஒன்றிணைத்து, துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளை  எண்ணி ஏங்கி தியானித்து, அதனின் உணர்வுகளை தங்களுடைய இல்லம் முழுவதும் படரச் செய்ய வேண்டும்.

அப்படிப் படரச் செய்யும் பொழுது அந்த இல்லத்தில் வசிப்பவர்களிடத்திலும், அந்த இல்லத்திற்கு வருகை புரிபவர்களிடத்திலும், அங்கே பதிந்துள்ள மகரிஷிகளின் அருள் உணர்வுகள் இணைகின்றது.

அவ்வாறு இணைந்து அவர்களிடத்திலும்  தீமைகளைப் போக்கும் நிலையாக  மலரைப் போன்று  நறுமணமும்,  மகிழ்ச்சியும் பெறும் நிலையாக விளைகின்றது.
3. கணவன், மனைவி இருவரும் சேர்ந்து தியானிக்க வேண்டும்
ஆகவே,  கணவன் மனைவி இருவரும் அதிகாலை 4.00 மணியிலிருந்து 6.00  மணிக்குள் துருவ தியானத்தில் ஒன்றாக அமர்ந்து,  துருவ மகரிஷியின் அருள் உணர்வுகளை எண்ணி ஏங்கி தியானித்து,  அதைச் சுவாசித்து தங்களுக்குள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அந்த ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு வாழ்கையில்,
சந்தர்ப்பங்களில் வந்து சேரும் தீமைகளை நீக்கி,
பொருள் காணும் திறன் பெற்று  நஞ்சை அடக்கி, 
ஒளியின் உணர்வுகளாக வளர்க்கும் நிலை பெறுதல் வேண்டும்.

அதைப் போன்று, நீங்கள் பார்ப்பவர்களும்உங்களைப் பார்க்கின்றவர்களும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து,  தெளிந்த சிந்தனையுடன், மலரைப் போன்ற மணத்துடன்,  மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தியும் பெறுதல் வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

கரண்ட்டில், பாசிடிவ் நெகடிவ்  என்ற இரு இணைப்பையும் கொடுக்கப்படும் பொழுது விளக்கு ஒளி பெறுகின்றது.

அதே போன்று கணவன்,  மனைவி இருவரும் தங்களுடைய உணர்வுகளை ஒருங்கிணைத்து புவியில் படரும்  துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளை  தங்களிடத்தில் இணைத்துப் பெருக்கி, தங்களிடத்தில் நஞ்சான தீமைகளுக்கு இடமில்லாது செய்து,  அருள் உணர்வின் அணுக்களைப் பெருக்க வேண்டும். 

கணவன் மனைவியும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து பிறவியில்லா நிலையான அழியா ஒளிசரீர வாழ்வைப் பெறும் நிலையாக, 
இரு உயிரையும் ஒரு உயிராக்கி,
பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து,
நாளும்  அருள் ஆற்றலை தங்களிடத்தில் வளர்த்துக் கொள்ளும் அனைவருக்கும்.  எமது அருளாசிகள்.