ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 4, 2014

“உயிரை....” எப்படி மதிக்க வேண்டும்...? என்று மகாபாரதப் போரில் காட்டப்பட்டுள்ளது

1. நமது கூர்மையான எண்ணம் தான் அர்ச்சுனன்
மகாபாரத்தத்தில் கடைசியில், அம்புப் படுக்கையில் பீஷ்மருக்குத் தலை தொங்குகின்றது. உடல் முழுவதற்கும் அம்புகளால் படுத்திருக்கும் பொழுது, வேதனையில் துடிக்கின்றார்.

எனக்குத் தலையணை கொடு என்று கேட்கின்றார். கௌரவர்களோ, உடலில் ரண வேதனை, ஆனால், தலைக்கு மட்டும் பஞ்சின் நிலைகள் கொடுத்தால் இது எப்படியாகும்? என்கின்றனர்.

தலையை நிமிர்த்தினால், அந்த உணர்வின் தன்மை கொண்டு கீழே தொங்கும் பொழுது, அழுத்தம் இந்த அம்புகளில்தான் வேதனை நிலைகளை அதிகமாக்குமே தவிர, உன்னால் தணிக்க முடியாது என்று எவ்வளவு சூட்சுமமான நிலைகளைக் கூறியுள்ளார்கள்.
அர்ச்சுனன், தனது அம்புகளால் குறி வைத்து தலை தொங்காது சமப்படுத்தினார் என்றும் வேதனை நிலைகளை தாங்கும் சக்தி இவருடைய அம்புக்கு உண்டு என்ற நிலையையும் காட்டியுள்ளார்கள்.
சிரசு தொங்காது,
வேதனையைத் தாங்கும் உணர்வினைப் பாய்ச்சி
சிரசினைத் தாங்கி நிறுத்தினார் அர்ச்சுனர்.

என்னால் வேதனை தாங்க முடியவில்லை, தாகம் எடுக்கின்றது என்று கேட்க, எல்லோரும் ஓடி ஓடி நீர் கொண்டு வருகின்றனர். ஆனால் அவனுக்குத் (அர்ச்சுனன்) தெரியும், அந்த நீரின் சக்தி என்கிறார் பீஷ்மர். எந்த நீர் வேண்டுமென்று உங்களுக்குத் தெரியாது, என்று தெளிவாகக் கூறுகின்றனர் காவியத்தில்.

அதாவது, அர்ச்சுனன் என்பது கூர்மையான எண்ணம், பீஷ்மர் என்பது உயிர்.
கூர்மையான எண்ணம் கொண்டு
விண்ணின் ஆற்றலை நுகரப்படும் பொழுது,
அந்த ஆற்றல் உயிர் பாகம் அம்பு போன்று பாய்கின்றது.
உயிர் வழி உள்சென்று உடலுக்குள் விளைந்திருக்கும்
தீயவினைகள், பாவ வினைகள், சாப வினைகள்,
பூர்வ ஜென்ம வினைகள் அனைத்தையும் அகற்றி, அதன் பலனாக
உயிர் விமோசனம் அடைய வேண்டிய வழிகளை,
பிறவா நிலை அடையும் மார்க்கங்களைத்தான்
மகாபாரதத்தில் காட்டியுள்ளார்கள்.

இதை நாம் படித்துணர்ந்தோமா? காவியத்தொகுப்பை அவரவர் உணர்வுக்கொப்பத்தான் செய்திருக்கின்றார்கள்.
2. “உயிரை” (குருவை) எப்படி மதிக்க வேண்டும் என்று மகாபாரதப் போரில் காட்டப்பட்டுள்ளது
நம்மிடம் கெட்டதும் உண்டு. நல்லதும் உண்டு. நம்மிடத்தில் தீமை செய்யும் உணர்வு உண்டு. உயிரில் பலம் கொண்டு அதை இயக்கக் கூடிய சக்தியும் உயிருக்கு உண்டு.

நாம் எதன் வலு கொண்டு இருக்கின்றோமோ தீமை செய்யும் உணர்வுகளுக்கு நாம் எடுக்கும் பொழுது, உயிரான குருவிற்கு நாம் எதைச் செய்கின்றோம்?

தீங்கின் உணர்வு வந்தால், தீமையை நீக்கிடும் அருள் உணர்வை எடுப்பதை விடுத்து இருள் சூழ்ந்த நிலைகள் கொண்டு குருவை படுபாதாளத்திற்கு வீழ்த்துகின்றோம் என்பதை மகாபாரதம் காட்டுகின்றது.

அம்புப் படுக்கையில் பீஷ்மர் (உயிர்), உத்ராயணத்தில்தான் நான் இறக்க வேண்டும் என்கிறார். அதாவது துருவ நிலைகள் கொண்டு, துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் நான் செல்ல வேண்டும் என்கின்றார்..
அதற்குண்டான உபாயமும், அதற்குண்டான சாந்தமும் எனக்கு வேண்டும், என்று பீஷ்மர் கூறுகின்றார். மகாபாரதத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

சற்றுச் சிந்தியுங்கள்
சிந்தனையைச் செலுத்திப் பாருங்கள்.
நான் சொல்வது இந்த குருவல்ல.
“நம் உயிரான குரு”.
அது, நீங்கள் நினைப்பதற்கெல்லாம் சீராக வருகின்றது.
இதைத்தான் மகாபாரதப் போரில், “உயிரை எப்படி மதிக்க வேண்டும்?” என்று காட்டப்பட்டுள்ளது.

மனிதன் மெய் வழி செல்வதற்குண்டான அத்தனை உண்மைகளும் ஞானிகள் உருவாக்கிய காவியப் படைப்புகளிலே உண்டு. நாம் புரிந்துகொள்ள வேண்டும். புருவ மத்தியில் எண்ணி தியானித்துப் பாருங்கள் உங்களால் உணரமுடியும். எமது அருளாசிகள்.