ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 10, 2014

நம் சொல்லே நமக்கு எப்படி எதிரியாகின்றது...?

1. யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே
இருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கும்பொழுது, அந்த உணர்வின் அலைகள் நம்முள் கலந்து, ஊழ்வினையாகின்றது. அந்த உணர்வின் அலைகள் நமக்குள் பெருகி ஆன்மாவாகின்றது.

அவர்களுக்குள், எந்த வெறுப்பின் தன்மை கொண்டு சண்டையிடுகின்றனரோ, அதைப் போன்று சண்டையிடும் உணர்வுகள நமக்குள் நுகர்ந்து, நுகர்ந்து, அதையே பதிவாக்குகின்றோம்.

ஆக, பிறருடைய நிலைகளை எண்ணி இப்படி ஆகிவிட்டதே என்று அந்தச் சோர்வின் தன்மையை நாம் எடுத்துவிட்டால், அந்தச் சோர்வின் உணர்வுகள் நமக்குள் வித்தாகப் பதிவாகி, சோர்வின் தன்மை கொண்ட உணர்வின் சத்து அதிகரித்துவிடும்.

பின்அதனின் உணர்வுகள் நம் ஆன்மாவாகும் பொழுது, நம்மிடத்தில் தெளிவற்ற நிலைகளாக அமைந்து,  நாம் சிந்தித்தாலும், சிந்திக்க இயலாத நிலையை நம்மிடத்தில் உருவாக்கிவிடுகின்றது.

இந்த ஆன்மாவில் எது பெருகியிருக்கின்றதோ, அதனின் உணர்வுகள்
நாம், ஒரு சொல் சொல்வதற்கு முன் வெளிப்பட்டு,
யானை வரும் பின்னே,
மணியோசை வரும் முன்னே
என்பதைப் போன்று  நாம் பேச இருப்பவரின் உணர்வில் மோதுகின்றது

நாம் அவரிடம் உதவி கேட்டு சென்றிருப்போம். அவருடைய உதவியைக் கோரி  நாம் பேசும் பொழுது,
நம் ஆன்மாவில் கலந்து பெருகியுள்ள சோர்வடைந்த உணர்வுகள்,
நம் சொல்லைக் கேட்டுக் கொண்டிருப்போரின் சுவாசத்தில் மோதி,
நமக்கு அவர் உதவி செய்ய விரும்பி இருந்தாலும்,
உதவி  செய்ய விரும்பும்  அவரின் எண்ணத்தை, இது தடுக்கும். 
னால், அவர்கள் தவறு செய்யவில்லை.
2. நம் சொல்லே நமக்கு எப்படி எதிரியாகின்றது?
அதாவது உதவி செய்ய விரும்புவரிடத்தில் நமது கஷ்டங்களையும், வேதனைகளையும் எடுத்துச் சொல்லும் பொழுது, இந்த உணர்வின் தன்மை அவரிடத்தில் விளைகின்றது.

நாம் எத்தகைய கஷ்டங்களை அனுபவித்தோமோ, அதனின் உணர்வுகளை அவர் நுகர்கின்றார். பின், அவர் தலையை ஆட்டிவிட்டு அப்புறம் பார்ப்போம்என்பார்.

இங்கே நம்முடைய சொல்லே, நமக்கு எதிரியாகின்றது. அவர்களல்ல, அவர் உதவி செய்ய விரும்பினாலும், அவர்களுடைய உணர்வுகள் இத்தகைய நிலைகளில் விளையும்.

அதே சமயம், நமது தொழில்கள் தடைப்படும்பொழுது வேதனை என்ற நிலை வரும். வேதனை என்பதே நஞ்சு.  இந்த நஞ்சின் தன்மை வந்துவிட்டால் இந்த உணர்வின் தன்மை நமக்குள் அதிகமாக வளர்ந்து, கை கால் குடைச்சல், சோர்வு போன்ற நிலைகள் சூழ்ந்துவிடுகின்றது.

பின், நாம் தொழில் செய்ய முடியாத நிலைகளும், நாம் அதன் வழியில் யாருடன் பேச்சின் தொடர்பு வைத்துக் கொண்டாலும், அவைகளைக் கேட்டுணர்வோரின் நிலைகளையும் சோர்வடையச் செய்து, அவர் நம்மைப் பார்க்கும் பொழுது,  இவர் எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் என்று நம்மைப் பற்றிய ஒரு எண்ணத்தை அவரிடத்தில் உருவாக்கும்.

இவர் எதையும் செய்ய மாட்டார்என்ற, உணர்வே அவரிடத்தில் ஓங்கி நிற்கும். இந்த இடத்தில், நம் ஆன்மாவே நமக்கு எதிரியாக வினை புரிகின்றது.
3. நம் காரியங்கள் வெற்றியடைய நாம் என்ன செய்யவேண்டும்?
ஆகவே இதைப் போன்று நம் ஆன்மாவில் படரும் தீமையான உணர்வுகளை நீக்குவதற்குத் தான், ஒவ்வொரு நொடியும் நாம் ஆத்ம சுத்தி செய் வேண்டும்.

விண்ணில் இருந்து வந்து கொண்டிருக்கும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை,  நம் புருவ மத்தியில் இயக்கிக் கொண்டிருக்கும், உயிர் வழி நுகர்ந்து,  நம் உடலில் உள்ள  அனைத்து அணுக்களுக்கும் உணவாகக் கொடுத்து,  உள் முகமாக  இணைக்கப் பழகிக் கொள்ள வேண்டும். 

இதன் வழி நாம் தொடர்ந்து செய்யும்பொழுது, அந்த துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் மிக்க சக்தி நமது ஆன்மாவில் பாதுகாப்புக் கவசமாக, பெரும் அருள் வட்டமாகி விடுகின்றது.

அது நம்முள் எத்தகைய தீமைகளையும், நம் அருகில் வராதபடி தள்ளிவிடுகின்றது.  ஆகவே, நம்மிடமிருந்து வெளிப்படும் சொல் செயல் மற்றவர்களை மகிழச் செய்யும். நம் காரியங்கள் அனைத்தும் சித்தியாகும்.

அதே சமயத்தில், நம் ஆன்மா பரிசுத்தமாகி நாம் மகிழ்ந்து வாழ முடியும். இந்தப் பிறவிக்குப்பின் நம் உயிராத்மா, அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து, நாம் அனைவரும் பிறவி இல்லா நிலை என்ற அழியா ஒளிச் சரீரம் பெற முடியும். எமது அருளாசிகள்.