ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 23, 2014

ஞானகுருவின் பொன்மொழிகள் 2 - (REAL QUOTES 2)

உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களுக்குள் இருக்கும் ஆற்றல்களை மகா ஞானிகளுடைய அருளாற்றலின் துணை கொண்டு வளர்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் விண்ணும் மண்ணும் போற்றும் மகா ஞானிகளுள் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஆதிமூலமாகிய உயிரையும் அதற்கு ஆதாரமாக இருக்கும் உணர்வையும் அறிந்து அதனின் உயர்வுக்காக அதாவது உயிருக்கு நாம் செய்யும் சேவையானது நம் மூலாதாரத்தைப் புனிதப்படுத்தி பெருவீடு பெருநிலை எனும் நிலைக்கு அழைத்துச் செல்லும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நன்மை எது தீமை எது என்பதை அறிந்துணர்ந்து, அதில் நன்மைகளை நாடுவதே “மெய்ப்பொருள் காணும் திறன் ஆகும்.

இதில் உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையை ஒளிநிலை பெறச் செய்வதே மெய்ப்பொருள் ஆகும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அறியாமை என்பது கண்ணாடியில் படிந்த தூசு போன்றது. தூசியினைத் துடைத்தபின், கண்ணாடியில் நம் முகத்தைத் தெளிவாகக் காணமுடியும்.

அது போன்று சந்தர்ப்பத்தால் ஏற்படும் சம்பவங்களில் மனதினைச் செலுத்தி வேதனை சஞ்சலம் போன்ற உணர்வுகளுக்கு அடிமையாகி நமது ஆன்மாவை நலியச் செய்கிறோம். இது அறியாமை.

இந்நிலையை அகற்றவேண்டுமென்றால் ஆத்ம சுத்தி செய்து மகரிஷிகளின் அருள் ஒளியினைப் பெறவேண்டும் என்று ஏங்கும் பொழுது அவர்கள் அருளினைப் பெறுகிறோம்.

மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவதால் நம் அறியாமை அகன்று நமது ஆன்மா புனிதம் பெறுகின்றது. அதனைத் தொடர்ந்து நடைபெறும் செயல்களும் நன்மை தருபவைகளாகவே இருக்கும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கடல் அலைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட சிறு துரும்பு அலைகளால் அங்குமிங்கும் அலைகழிவது போல நாமும் நம் மனித வாழ்க்கையில் சுற்றுப்புறச் சூழ்நிலைகளால் அலைக்கழிக்கப்படுகின்றோம்.

துயர்மிகு இவ்வாழ்க்கையிலிருந்து காத்துக் கொள்வதற்காக மேலான மெய்ஞானத்தைப் பெறவேண்டும் என்று நாம் பாடுபடும் பொழுது மெய்ஞானிகளின் அருளை நாம் பெறமுடியும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எல்லாம் வல்ல மகரிஷிகளின் அருளாற்றலைப் பெறுவதே நமது முயற்சிகளின் எல்லை.

மகரிஷிகளின் அருள் பெறுவோருக்கு வேறெப்பொருளும் ஈடில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தாய் தன் குழந்தையிடம் காட்டும் அன்பும், குரு தன் சிஷ்யனிடம் காட்டும் அக்கறையும் உலகில் மிகமிக உயர்வானது. இதில் குருவானவர் தன் சிஷ்யனுக்கு எதை எப்பொழுது எப்படிக் கொடுப்பது என்பதை நன்கு அறிந்து இருக்கிறார்.

ஆகவே, ஒவ்வொருவரும் தான் உயர்ந்தவைகளைப் பெறவேண்டும் என்று உயர்ந்த நல் எண்ணங்களை எண்ணி ஏங்கும்பொழுது குரு அருளைப் பெறமுடிகின்றது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கல்வி, விஞ்ஞானம் போன்றவைகள் நம் சமூக வாழ்க்கைக்கு மட்டுமே உதவ முடியும். மெய்ஞானம் ஒன்று மட்டுமே நம் ஆன்மாவுக்கு உயர்வு தரும். அந்த மெய்ஞானத்தை குருவின் அருளால்தான் பெறமுடியும்.

இன்னும் அறிய வேண்டும் என்ற ஆவல் எழும் பொழுது அது ஞானத்தின் வளர்ச்சிக்கு உரமாகின்றது. அனைத்தும் தெரியும் என்கிற பொழுது அது ஞானத்திற்கு முற்றுப்புள்ளியாகின்றது.

பின், முன்னால் இருக்கும் உண்மைகள் கூட கண்ணால் காணமுடியாத நிலை உருவாகிவிடும்.