ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 27, 2013

நாம் நன்மை செய்தாலும், பதிலுக்கு தீமை செய்பவர்களுக்கு எப்படிச் செய்யவேண்டும்?

ஒவ்வொரு நிலைகளிலும் பிறருக்கு நன்மை செய்தாலும், அந்த நன்மை பெற்றவர்களும், மீண்டும் எமக்குத் தீமை செய்வார்கள்.

அப்பொழுது, அந்தத் தீமையே செய்யப்படும் பொழுது, அந்தத் தீமையை அழித்திட, எனக்குப் பல சக்தி கொடுத்தார். கொடூரச் சக்திகள் கொண்டு நான் எண்ணத்தால் எண்ணினால் போதும். அவர்களுடைய நிலைகள் செயலற்றதாக ஆகிவிடும்.

ஆனால், அதற்கு மாறாக, பிறர் நமக்குத் தீங்கு விளையவைத்தாலும், எம்மை எண்ணும் பொழுது, அவருக்குள் தீமையை விளைவிக்கும், “அந்த எண்ணங்கள்தான் அழிய வேண்டுமே” தவிர,
அவர்களுக்குள் இருக்கக் கூடிய நல்ல எண்ணங்கள் ஓங்கி வளர்ந்து,
நன்மை பயக்கும் சக்தியாக அது மலரவேண்டும் என்றுதான்,
குருநாதர் இந்தச் சக்தியினை எமக்குக் கொடுத்தார்.

ஆகவே, ஆற்றல்மிக்க இச்சக்தியை எமக்குள் கொடுத்திருந்தாலும், ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தனையோ பரிசீலனைகள் இன்றும் வந்து கொண்டுதான் இருக்கின்றது.

இந்த நிலைகளிலும் யாம் கூர்ந்து கவனித்து, அவர்களுடைய உணர்வுகளை எமக்குள் செலுத்தாதபடி, அவர்கள் நலம் பெறவேண்டும், அறியாத நிலைகளிலிருந்து, விடுபட வேண்டும், என்ற நிலைகளைத்தான் குருநாதர் காட்டிய நிலைகளில், யாம் செய்கின்றோம்.

ஆகவே, நீங்கள் எங்கே சென்றாலும், எந்த நிமிடம் ஆனாலும், இதைக் கேட்டுணர்ந்தவர்கள், “எனக்கு இவ்வாறு துன்பம் செய்தார்” என்று அவர்களை எண்ணாதபடி, “எனக்குத் துன்பம் வந்து கொண்டே இருக்கிறது” என்று எண்ணாதபடி, இந்த எண்ணத்தை மாற்றவேண்டும்.

இதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை, குருநாதர் எமக்கு அருளிய வழிப்படி, உங்களுக்கும் தைரியத்துடன், ஏனென்றால் உங்களுக்கும் தைரியம் பெறவே, இதைக் கொடுக்கின்றேன்.