ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 6, 2013

சந்தர்ப்பத்தில் கஷ்டம் வந்தால் அதை எப்படிப் பயன்படுத்தவேண்டும்?

இப்பொழுது உடலில் கஷ்டம், குடும்பத்தில் கஷ்டம், இப்படி எத்தனையோ கஷ்டத்தில் நீங்கள் இன்று இங்கே வருகிறீர்கள். ஆகவே, இப்பொழுது என்ன செய்கிறோம்? உங்கள் கஷ்டம் நீங்கவேண்டும் என்று யாம் சொல்கிறோம். தீமைகளை நீக்கிய அந்த மெய்ஞானிகளின் உணர்வுகளை உபதேசிக்கின்றோம்.

அந்தக் கஷ்டம் நீங்குவதற்காக வேண்டி, நீங்கள் இங்கே தேடி வருவது இப்பொழுது இது ஒரு சந்தர்ப்பம்.
அந்தக் கஷ்டம் இல்லாமலிருந்தால்
உட்கார்ந்து நாம் இந்த உபதேசத்தைக் கேட்கவே மாட்டோம்.

உங்கள் கஷ்டத்தை நீக்குவதற்காக, நீங்கள் இதை எண்ணி ஏங்கி எடுத்துக் கொண்டீர்கள் என்றால் மிக வேகமாக உங்களுடைய கஷ்டம் நீங்குகிறது.
உடலில் வலியோ அல்லது வயிற்று வலியோ இருந்தால் உடனே, ஓம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

எங்கே வலி எடுக்கிறதோ, மகரிஷிகளின் அருள் ஒளியாலே அந்த வலி நீங்க வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள்.
போகிறதா இல்லையா? என்று பார்க்கலாம்.
எனென்றால், இதெல்லாம் வாக்குகள்.
உங்களுக்குள் அதைப் பதியச் செய்கின்றோம்.

ஏனென்றால், யாம் காட்டுக்குள் சென்றோம். குருநாதர் பல கஷ்டங்களைக் கொடுத்தார். எப்படியெல்லாம் கஷ்டம் உண்டாகின்றது? அதை எப்படி நீக்குவது? கஷ்டத்தை நீக்க எந்த மாதிரி சக்தியை எடுக்க வேண்டும்?

அதே மாதிரி எல்லோருடைய சந்தர்ப்பம் எப்படி என்பதையும், இந்த அருள் சக்தி பெறும் சந்தர்ப்பத்தை மற்றவர்களுக்கு எப்படி ஊட்டுவது” என்பதைத்தான்
அனுபவப்பூர்வமாக யாம் உணர்வதற்காக
எமக்குக் கஷ்டத்தைக் கொடுத்து
அதை நீக்கும் முறைகளை குருநாதர் எமக்குக் காண்பித்தார்.
அதைத்தான் உங்களுக்குச் சொல்கின்றோம்.