ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 3, 2013

மகரிஷிகளின் அருள் உணர்வே நமக்கு பாதுகாப்புக் கவசம்

1. குருநாதர் எம்மைப் பக்குவப்படுத்திய நிலை
நமது குருநாதர் செயற்கையிலேயே எமக்கு பல இன்னல்களை ஏற்படுத்தினார். பல நிலைகள், பல தடுமாற்றங்கள். என் குடும்பத்திலே இன்னல்கள். எமது குழந்தைகளுக்கும் பல இன்னல்கள்.

எவ்வளவோ பல ஆற்றல்மிக்க சக்திகளை எமக்குக் கொடுத்து, குழந்தைகள் மேல் பாசமாக வரும் பொழுது யாம் எந்தப் பக்கம் திரும்புகின்றோம் என்பது தான் குருநாதரின் அன்றைய பரிசோதனை.

என் குடும்பத்தில் இன்னல்களைக் கொடுத்து, அந்த உணர்வின் நிலையிலிருந்து யாம் அவர் கொடுத்த சக்தியை எப்படி மாற்றுகின்றோம் என்ற நிலைக்குத்தான் இட்டுச் சென்றார்.

அதைப் போல காட்டுக்குள் செல்லும் பொழுது, பல மிருகங்கள் எம்மைத் தாக்க வருகின்றது. குருநாதர் எமக்குச் சொல்லிக் கொடுத்தது, நீ இன்னதைச் செய்து அதைச் செய்தாய் என்றால் அந்த மிருகத்தைச் செயலற்றதாக ஆக்கலாம் என்றார்.

ஒரு மிருகம் என்னைத் தாக்க வருகிறதென்றால்
அந்த மிருகத்தைக் கொல்வதற்கு
அதைக் காட்டிலும் அதிகமான சக்தி வேண்டும்.
அப்பொழுது, அந்தத் தாக்கும் உணர்வின் சக்தியை யாம் ஈர்த்து எனக்குள் எடுக்கப்படும் பொழுது அது என்னிடம் இருக்கக்கூடிய நல்ல குணத்தையெல்லாம் கொல்கிறது.
2. துன்பத்தை நீக்க துன்பமான உணர்வை எடுக்கக்கூடாது
உதாரணமாக, ஒருவர் சாக்கடை அருகில் இருந்து என்னைத் திட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். நாம் சாக்கடையைக் கண்டால் ஒதுங்கியே போவோம். ஆனால், அவர் அசிங்கமாகப் பேசுகிறார். அப்பொழுது நாம் என்ன சொல்வோம்?

நீ ஏதாவது அசிங்கமாகப் பேசினாய் என்றால், இரு, நான் சேற்றை எடுத்து உன் முகத்தில் அடித்துவிடுவேன் என்று சொல்கின்றோம். ஆக, முதலில் அசிங்கத்தைக் கண்டு ஒதுங்கிய நாம்,
அவர் அசிங்கமான வார்த்தையச் சொன்னவுடன்,
இரு உன்னை சேற்றை எடுத்து அடிக்கிறேன்
என்று சொல்லிக் கொண்டு,
நாம் முதலில் சாக்கடையைத் தொடுகின்றோம்.

அவர் அசிங்கமாகப் பேசுகின்றார். அந்த அசிங்கமான உணர்வு நமக்குள் வருகிறது. ஆனால், அந்த அசிங்கத்தையே எடுத்து நாம் பார்க்கிறோம்.

நாம்தான் முதலில் அதை நுகர்கின்றோம் அந்த உணர்வின் சக்தி நமக்குள் அதைத் தூக்கும் எண்ணம் அங்கே வருகின்றது. முதலில் நாம் ஒதுங்கிச் செல்கிறோம். ஆனால், அதையே நாம் எடுக்கின்றோம்.

ஆக, எந்தெந்த உணர்வுகள் நமக்குள் சேருகின்றதோ அந்த உணர்வுகள் நமக்குள் இயக்கிவிடுகின்றது. இதைப் போல நமக்குள் வருவதை நாம் எப்படி மாற்றுவது?

துன்பங்களை நீக்குவதற்கு
துன்பமான உணர்வை நாம் எடுக்காதபடி,
அந்த மெய்ஞானிகளின் அருள் ஆற்றலை நமக்குள் கூட்டிக் கொள்ள வேண்டும்.
3. மகரிஷிகளின் அருள் உணர்வே நமக்கு பாதுகாப்புக் கவசம்
ஓம் ஈஸ்வரா என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். என்று இந்த உணர்வை  நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

ஆக, இதை எண்ணி எடுக்கும் பொழுது மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நமக்குள் ஒவ்வொரு நிமிடமும் சேர்கின்றது. அவர்கள் எப்படி தீமையை நீக்கினார்களோ அந்த ஆற்றலை நாமும் நமக்குள் வளர்க்கின்றோம்.

தீமைகளை நாம் பற்றுவதில்லை.
தீமையை வென்றிடும் சக்தி நம் ஆன்மாவில் பெருகுகின்றது.
அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள்
பாதுகாப்பு கவசமாக அமைகின்றது.
தீமையான உணர்வுகள் நம் ஈர்ப்புக்குள் வருவதில்லை.

நமக்குத் தீமை செய்ய வேண்டும் என்று எண்ணுவோருக்கு இது எதிர்நிலையாகி, அவர்களையும் சிந்திக்கச் செய்து தீமையாக எண்ணும் நிலைகளை செயலிழக்கச் செய்துவிடும். நம் அனுபவத்தில் பார்க்கலாம்.