ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 25, 2013

துருவ தியானம் என்றால் என்ன? அதனுடைய முக்கியத்துவம் என்ன?

1. அகஸ்தியன் இளம்பிஞ்சு வயதில் வானுலக ஆற்றலை நுகருகின்றான்
அகஸ்தியன் தன் தாய் கருவில் இருக்கும் பொழுதே அவன் சந்தர்ப்பம் விஷத்தை ஒடுக்கிடும் ஆற்றல்களைப் பெற்றான். அவன் பிறந்த பின் வானை நோக்கிப் பார்க்கும் பொழுது
வானில் உருவாகும் நஞ்சினைப் பார்க்கின்றான்.
அந்த நஞ்சினைப் பார்க்கும் திறன்
அவனுக்குள் வருகின்றது.

சூரியனிலிருந்து வரும் அந்த அல்ட்ராவயலெட் என்ற நஞ்சினை அதனுடைய இயக்கத்தின் தொடரில் அவன்  காணுகின்றான். சூரியன் பிரிக்கும் அந்த உணர்வையும், இந்த நஞ்சுகள் பரவி வரப்படும் போதும்  நட்சத்திரத்திலிருந்து பிற மண்டலங்களிலிருந்து வரும் நஞ்சினை சூரியனின் காந்தசக்தி அணுக்களாக பரவச் செய்து அது பிரபஞ்சத்தில் பரவுவதையும் பார்க்கின்றான்.

தன் இளம் வயதில், அவன் அறியாதபடி இதையெல்லாம் அகஸ்தியன் காணுகின்றான். ஆனால் சொல்லால் சொல்ல முடியவில்லை, நுகர்ந்து அறிகின்றான். அறிவின் தன்மை உணர்கின்றான்.

அவனுடைய வளர்ச்சியில் வரவர, இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தின் தொடரை உணர்கின்றான். அவன் ஐந்தாவது வயது வரப்படும் போது அவன் தாய் தந்தையர்கள் மடிந்து விடுகின்றார்கள்.

அவர்கள் தாய் தந்தையர்கள் நஞ்சினை தன் உடலில் அதிகமாக சேர்த்துக் கொண்டதனால், நஞ்சினை அதிகமாகச் சுவாசித்ததால், அவர்கள் உடலிலே வளர்த்த நல்ல அணுக்கள் மடியத் தொடங்கிவிடுகின்றது. ஏனென்றால், நஞ்சின் தன்மை அதிகமான நல்ல அணுக்களுக்குள் இணைக்கப்படும் போது, அந்த உடல் அது மடிந்து விடுகின்றது.

ஆனால் கருவில் வளர்ந்த அகஸ்தியனுக்குள்
நஞ்சின் நிலைகள் இணைந்து,  
நஞ்சினை உணவாக எடுத்து
நஞ்சினை ஜீரணித்து அடக்கிடும் சக்தியாக
அது விளைகின்றது.

பிறந்தபின் அகஸ்தியன் என்றும், அணுவின் ஆற்றலை அறியக்கூடிய சக்தியும், விண் உலகத்தை உணர்வின் அறிவாக தனக்குள் அறிந்திடும் உணர்வுகளும் பெறுகின்றான். அவ்வாறு தன் அறிவின் துணை கொண்டு வான்வீதியில் வானுலக இயக்கத்தைக் காணுகின்றான்
2. ஐந்தாவது வயதில் துருவத்தின் ஆற்றலை அறிகின்றான்

தனது ஐந்தாவது வயதில் வானயியல் தத்துவத்தை அவன் அறிந்து கொள்ளும் சக்தி பெற்று, விண்ணிலிருந்து வரும் சக்திகளை பூமி தன் துருவப் பகுதியின் வழியாகக் கவருவதை உணர்கின்றான்.

ஆனால், தாய் கருவில் இருக்கும் பொழுது பெற்ற நஞ்சை அடக்கும் இந்த உணர்வுகள் அகஸ்தியனுக்குள் விளைந்திருப்பதால்,
துருவப்பகுதியில் வரும்
அந்த நஞ்சு கலந்த அணுக்கள் வருவதை,
இவன் கண்ணால் பார்க்கின்றான்.

பார்த்து இந்த உணர்வின் அலையை அவன் நுகர்ந்தாலும், நஞ்சினை அடக்கிடும் உணர்வுகள் இவனுக்குள் விளைகின்றது. அகஸ்தியன் தன் ஐந்து வயதில் துருவத்தின் ஆற்றலை அறிந்ததால், அவனுக்கு துருவன் என்று காரணப் பெயரையும் வைக்கின்றார்கள்.

துருவத்தை நுகர்ந்தறிந்து, வானயியல் தத்துவத்தை சொல்லால் வெளிப்படுத்துகின்றான். அவனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வின் எண்ணங்களை சூரியனின் காந்தசக்தி கவர்ந்து, நமது பூமியில் அலைகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றது.

அலைகளாக மாற்றிய அந்த சக்திகள் இன்றும் உண்டு. அதனைப் பெறும் தகுதியாக, நமது குருநாதர் அவர் பெற்ற சக்தியை எமக்குள் அது பதிவு செய்து,
அதை உணரும்படியும்
அதை நுகரும்படியும்,
அதை எமக்குள் வளர்க்கும்படியும் செய்தார்.

அவ்வாறு அவர் காட்டிய உணர்வின் அந்த அருள்ஞான வித்தை எமக்குள் பதிவாக்கப்படும் போது, குரு காட்டிய அருள்நெறி கொண்டு அதன் உணர்வை யாம் நுகரமுடிந்தது

அன்று துருவனால் வெளிப்பட்டதும், துருவனின் தாய் தந்தையர்கள் தனக்குள் பெற்ற அந்த உணர்வின் அலைகளும், இந்த பூமியில் படர்ந்து பரவி உள்ளதை குருகாட்டிய அந்த உணர்வின் வித்தால் அதை நுகர்ந்தறிந்து, இப்போது உங்களுக்குள்ளும் யாம் உபதேசிக்கின்றோம்.

யாம் உபதேசிக்கும் அந்த உணர்வின் ஆற்றல்கள் வெளி வருவதை சூரியனின் காந்தசக்தி கவர்வதும், அதை நீங்கள் நுகரும்போது அதன் அறிவாக, அந்த அணுவின் தன்மை உங்கள் உடலில் உருவாகின்றது.
3. துருவனின் உணர்வை உணவாக உட்கொள்ளும் அணுவாக உங்களுக்குள் உருவாக்கச் செய்கின்றோம்
அப்படி உங்களுக்குள் உருவாகும் அந்த அணு எதிலிருந்து உருவானதோ, (துருவன் நஞ்சினை வென்ற) அந்த உணர்வை உணவாக உட்கொள்ளும் அணுவின் தன்மை அடைகின்றது. அந்த நிலை அடையச் செய்வதற்குத்தான் துருவ நேரத்தில் இந்த உபதேசம்.

அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்தறிந்து, இந்த மண்ணுலகில் வந்த நஞ்சினை வென்று, நம் பூமியின் துருவப்பகுதியில் நிலைகொண்டு இன்றும் விண்ணுலக ஆற்றலை தனக்குள் மாற்றி, கணவனும் மனைவியும் இணைந்து, துருவ மகரிஷியாகி நஞ்சினை ஒளியாக மாற்றிடும் சரீரத்தைப் பெற்றார்கள்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு நஞ்சினை ஒளியாக மாற்றிடும் திறனை தனக்குள் உருவாக்கினார்கள். அதாவது, ஆறாவது நிலைகள் கொண்டு ஏழாவது நிலைகள் அடைந்ததை சப்தரிஷி என்றும், ரிஷித்தன்மை அடைந்ததை துருவமகரிஷி என்றும், துருவத்தை நுகர்ந்து அறிந்ததனால் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

கணவன் மனைவி இருவரும் இன்று நம் பூமிக்கு வரும் அனைத்தையும் மாற்றி, அதை ஒளியின் சுடராக அவர்கள் உருவாக்கிக் கொண்டே உள்ளார்கள்.
தன் இனப் பெருக்கத்தை ஒளிச்சுடராக மாற்றிய அந்த உணர்வலைகள் இன்று நமது பூமியில் பேரருள் பேரொளியாகப் பரவிக்கொண்டுள்ளது.

அவ்வாறு துருவப்பகுதியிலிருந்து வரும் அத்தகைய ஆற்றலைப் பருகுவதற்குத்தான் இந்த துருவ தியான உபதேசம்.

ஆக, அவர்கள் எப்படி நஞ்சினை வென்று இந்த உடலிலேயே ஒளியாக மாற்றும் உணர்வுகள் பெற்றார்களோ அதை நாம் நுகர்ந்தோம் என்றால், இந்த வாழ்க்கையில் நம்மையறியாது எத்தனையோ விஷத்தன்மைகளை நாம் நுகர நேர்ந்து, விஷ அணுக்கள் நமக்குள் உருவாகி இந்த மனிதனின் உடலை கரையச்செய்யும் அல்லது மாற்றி அமைக்கும் நிலைகளிலிருந்து நாம் தப்ப முடியும்.

வராகன் தீமைகளை வென்றிடும் உணர்வு பெற்று எப்படி மனிதனாக உருவாக்கியதோ, இதைப்போல மனிதனானபின் தீமையை வென்றிடும் அந்த உணர்வின் எண்ணம் கொண்டு, நாம் அந்த தீமையை வென்றிட்ட அந்த துருவ மகரிஷியின் ஆற்றலை நாம் பெற்றுவிட்டால், இந்த உடலை விட்டு நாம் செல்லும் போது அதன் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடையலாம்.

ஆறாவது அறிவின் துணைகொண்டு துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதை, சந்தர்ப்பத்தால் நுகர்ந்தவர்கள் அனவரும் ஏழாவது நிலை அடைந்து, இன்று சப்தரிஷி மண்டலமாக சுழன்று கொண்டு உள்ளார்கள்.

அதனின்று வெளிப்படும் உணர்வினை, இன்று சூரியன் காந்த சக்தி கவர்ந்து துருவப்பகுதியின் வழியாக நம் பூமிக்குள் பரவிக் கொண்டிருக்கின்றது, பரவச்செய்து கொண்டிருக்கின்றது.
4. செவி வழி உணர்ச்சியை ஊட்டி, கண் வழி கவரச் செய்கின்றோம்
அதைப் பருகும் நிலையாகத்தான் நமது குருநாதர் ஈஸ்வராய குருதேவர் எந்த தருணத்தில் எமக்குள் உபதேசித்து அந்த உணர்வைக் கவரும்படி செய்தாரோ, அதைப்போல் இந்த தருணம் துருவ தியான நேரத்தில் உங்களுக்குள் அதைப் பதியச் செய்கின்றோம்.

துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வந்து கொண்டிருக்கும் உணர்வை சூரியன் காந்தசக்தி கவர்ந்த அலைகளாக மாற்றி, துருவத்தின் வழியாக நம் பூமிக்கு வரும் இந்த நேரத்தில் அந்த அருள்ஞானிகளின் உணர்வுகளை நீங்கள் அனைவரும் பெற உங்களுக்குள் இப்பொழுது அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்கின்றோம். அதாவது,
செவிவழி இந்த உணர்வின் தன்மை உணர்ச்சிகளை ஊட்டி,
நினைவின் ஆற்றல் கொண்டு
கண்களின் வழி அதை ஈர்க்கச் செய்வதற்குத்தான்
இந்த துருவ நேரத்தில் உபதேசிக்கின்றோம்.
5. துருவத்தின் வழியாக துருவ மகரிஷியின் உணர்வை அனைரும் நுகர்வதற்கே துருவ தியானம்
ஆக, அந்த துருவப்பகுதியில் துருவ நட்சத்திரத்துடன் உங்கள் எண்ணங்களைச் செலுத்தச் செய்வதும், அந்த உணர்வுகளைத் தூண்டச்செய்வதும் அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகளை உங்கள் கண்களில் நினைவாக்கப்படும்போது, கண்களின் கருவிழி அந்த நினைவின் ஆற்றலை (அந்த துருவத்தின் ஆற்றலை) உங்கள் உடலுக்குள் ஊனுக்குள் பதிவாக்குகின்றது. உங்கள் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன்கள் அதைக் கவரச் செய்கின்றது.

சூரியனின் காந்தசக்தி கவர்ந்து,
நம் பூமிக்கு துருவத்தின் வழியாக வரும்
அந்த துருவ மகரிஷியின் உணர்வுகளை நீங்கள் நுகர்வதற்கும்,
நுகர்ந்து உங்களை சுவாசிக்கச் செய்வதற்கும்,
உயிரின் துணை கொண்டு
அந்த நஞ்சினை வென்றிடும் உணர்வின் அணுக்களாக
உங்களுக்குள் உருவாக்கச் செய்வதற்காகவும்தான்
இந்த துருவ தியானத்தை அமைத்துள்ளோம்.

ஆக, இந்த துருவ தியானத்தை நமது குருநாதர் எவ்வாறு இத்தருணத்தில் எமக்குள் உருவாக்கச் செய்தாரோ அதே போன்று உங்களுக்குள்ளும் உருவாக்கச் செய்வதற்குத்தான் இந்த துருவ தியானத்தை வைத்தது.