யாம் உபதேசிக்கும் இந்த மெய்ஞானத்தின் தன்மையை உணர்வுக்குள்
உணர்வாக எடுத்துத்தான் உணர முடியுமே தவிர எவ்வளவோ உங்களுக்குச் சொன்னாலும், அதை நீங்கள் மனப்பாடம் செய்து அதன் வழிகளிலே
எடுத்து வரவேண்டும் என்றால் அது நடக்காது.
ஆனால், யாம்
உங்களுக்குத் திரும்ப திரும்ப உபதேசித்து மெய் உணர்வின் வித்துகளைப் பதியச் செய்கின்றோம்.
ஒரு நல்ல வித்தை வளர்ப்பதற்கு எப்படி நாம் நீரை ஊற்றுகின்றோமோ, அதைப் போன்று யாம் பதிவாக்கியிருக்கும்
அந்த வித்துகள் வளரவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
உங்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பங்கள்
வருகின்றதோ,
அந்த நேரத்திலே
யாம் உபதேசித்த அருள் ஞான உபதேசங்களை
நினைவுக்குக் கொண்டு வந்து,
தியானத்தை எடுத்து,
ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.
நமது குருநாதர்
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பேரண்டத்தின் உண்மையினுடைய நிலைகளையும், மெய்ஞானிகளின்
ஆற்றல்களையும் அறிந்துணர்ந்தார். அவர் எடுத்துக் கொண்ட அந்த உணர்வின் தன்மையை எமக்குள்
எப்படிப் பதியச் செய்தாரோ, அதைப் போன்று உங்களுக்குள் இதைப் பதியச் செய்யும் பொழுது,
நீங்கள் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அதை வளர்க்கும்
பொழுது உங்களுக்கு மெய் உணர்வின் ஆற்றல் வருகின்றது. அந்த ஆற்றலின் துணை கொண்டு உங்கள்
எண்ணத்தை அகண்ட அண்டத்திற்கும் பாய்ச்சலாம். உங்கள் உடலில் உள்ள அனைத்து அணுக்களிலும் அந்த ஆற்றல்மிக்க சக்திகளைப் பெருக்க
முடியும். இதுதான் பிரம்மா நாம் சிருஷ்டிக்கும் தன்மைகள்.