ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 4, 2013

உபதேசத்தைப் படிக்கும்போது நீங்கள் வேறு எண்ணத்தில் இருக்கக்கூடாது

யாம் உபதேசம் செய்து கொண்டிருக்கும் பொழுது, சிலருக்கு வீட்டுக்கு அவசரமாகப் போகவேண்டும், தொழிலுக்குப் போகவேண்டும், மற்றவரைப் பார்க்க வேண்டும், என்று இப்படி எத்தனையோ எண்ணங்கள் இருக்கும்.


1.அப்படி நினைத்துக் கொண்டிருந்தால்
2.யாம் இப்பொழுது சொல்வதை ஏற்பதற்கு இல்லாதபடி
3.இந்த உணர்வுகள் கலந்துவிடும்.

இப்படி இந்த உணர்வுகள் கலந்துவிட்டால், அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணும்பொழுது, அவர்கள் இந்தக் காற்றிலிருந்து அதைப் பிரித்து எடுப்பது கஷ்டம்.

உதாரணமாக, T.V.ல் பதிவு செய்து (FREQUENCY) ஒலி(ஒளி)பரப்பு செய்கிறார்கள். அதிலே ஊடே ஒன்று பதிவாகிவிட்டால் சப்தம் வந்து கொண்டிருக்கும், படமும் சரியாகத் தெரியாது.

நீங்கள் T.V.ஐ ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது இந்த மாதிரி ஆனால் என்னாகும்? மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தது நின்று போய்விட்டால், அதன் மேல் வெறுப்பு வந்துவிடும்.

அப்படி வெறுப்பு வரும் பொழுது இவ்வளவு ரூபாய் போட்டு வாங்கி வைத்திருக்கின்றோம். இந்த மாதிரி ஆகி விட்டதே...! என்று சொல்லிவிட்டுச் சங்கடப்படுவோம்.

இந்த உணர்வின் நிலைகள் ஒன்றுடன் ஒன்று கலக்கப்படும் பொழுது, எந்தெந்த சந்தர்ப்பத்திலே எதை இணைக்கின்றோமோ...!” அந்த உணர்வின் அலைகள்தான் அதை இழுக்கும்.

ஆகையினால், இதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டியது நிறைய. ஆனால், இதையெல்லாம் யாம் உங்களுக்குள் சுலப நிலைகளில் பதிவு செய்கின்றோம். அதை நீங்கள் பதிவாக்க வேண்டும்.

1.அப்படி நீங்கள் பதிவாக்கி இருந்தால்தான்,
2.சந்தர்ப்பத்தில் நீங்கள் தீமையையோ மற்ற நிலைகளைச் சந்திக்கும் பொழுது,
3.தீமையை நீக்கிடும் நினைவலைகள் வரும்.

அதன் துணை கொண்டு, எளிதில் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் சேர்க்க முடியும். தீமைகளிலிருந்து விடுபட முடியும்.

எது நமக்குள் பதிவோ அதுதான் இயக்கும்...! அதற்குத்தான் உங்களுக்கு திரும்பத் திரும்ப உபதேசத்தின் மூலமாக அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம். 

நீங்கள் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.