ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 7, 2013

இன்றைய ஹோமத்தின் நிலையும், ஞானிகள் மக்களை மகிழ வைத்து விண் சென்ற நெறியும்

1. ஆயுள் ஹோமம் செய்தவரும் செய்யச் சொன்னவரும் யார் உயிரோடு இருக்கின்றார்கள்?
அன்று அரசர்கள் யாகங்களையும் வேள்விகளையும் செய்தார்கள். இன்றுள்ளவர்களும் அங்கே போய்வந்தால் சரியாகப் போய்விடும், இன்னும் கொஞ்சம் சொத்து வரும் என்றுதான் போகிறார்களே தவிர, வேறு எதற்கும் போவதில்லை.

நன்றாகக் கவனிக்க வேண்டும். இன்றைய மனித நிலையில் பல ஆயிரம் ரூபாய் கொடுத்து அர்ச்சனை செய்து, இந்த ஹோமம், அந்த ஹோமம் என்று எந்த ஹோமத்தைச் செய்தாலும் ஒன்றும் ஆகாது. ஆயுள் ஹோமம் செய்பவர்கள் எல்லோரும் நம்மிடம் தப்பிப்பதற்குத்தான் இருப்பார்கள்.

ஆயுள் ஹோமம் செய்தவர்கள் யார், (எத்தனை பேர்) உயிரோடு இருக்கிறார்கள்?
ஆக, ஆயிரம் பொய் சொல்லி மக்களிடம் பணத்தை வாங்கி,
உடலினுடைய சுகத்திற்காகத்தான் இருக்கிறார்கள்.

இன்று திருப்பபதிக்குச் சென்று காசையும் கொடுத்துவிட்டு காசின் ஏக்கத்தைக் கொண்டு வரப்படும்பொழுது, பல பேருக்குக் காசும் கிடைத்துவிட்டாலும் நோயாக இருக்கின்றார்கள். காசு இருக்கின்றது. அதே சமயத்தில் மனவேதனை இருக்கின்றது.

கடைசியில் அந்தக் காசையே காப்பாற்ற முடியாமல் திண்டாடுகின்றோம். காசு வந்தாலும்கூட சாப்பிட முடியாமல் திண்டாடுகின்றோம்.
ஆக, எதுவுமே இந்த மனித உடலுக்கு ஒத்து வருவதில்லை.
ஆனால், ஆசை இருக்கின்றது.
இந்த உணர்வின் தன்மை நஞ்சாக மாற்றும் பொழுது என்ன செய்ய முடிகின்றது?

இன்று கோவிலுக்குப் போனால், சொத்து வரவேண்டும், நோயிலிருந்து விலகவேண்டும். வரவு செலவு கணக்கில், கடைசியிலே உனக்கு இவ்வளவு தருகிறேன் என்றுதான் சொல்லிக் கொண்டுவருகின்றோம்.

என் மனது பரிசுத்தமாகி, இந்த நல்ல எண்ணம் கொண்டு கோவிலுக்கு வரும் எல்லோருடைய மனமும் நல்லதாக வேண்டும், என்று யாரும் சொல்வதில்லை.
2. மக்களின் துன்பத்தை நீக்கி, அவர்களைப் புனிதம் பெறச் செய்தார் கொங்கணவ மாமகரிஷி
கொங்கணவர் அன்று பிருகுவாக அரசனாக இருந்து மாற்றிய நிலைகள் கொண்டு, ஒவ்வொரு மனிதனிடத்திலும் யாசகத்திற்காக வேண்டி வரும் பொழுது அவர்கள் புனிதமாக வேண்டும் என்று பிரார்த்தித்துச் சென்றார்.

நாம் எப்படிக் கோவிலுக்குச் சென்று வரம் கேட்கின்றோமோ அதைப் போன்று வீடுதோறும் சென்று, தனக்குப் பசி எடுக்கும் பொழுதெல்லாம் இறைவனிடம் கேட்பது போன்று அந்த உடல் பசிக்குண்டான நிலைகளை நீக்கினாலும்,
அந்த உள்ளப் பசிக்கும்
அவரது உள்ளத்தாலே ஏற்படக்கூடிய நிலைகளுக்கும்
ஒவ்வொரு வீடாகச் சென்று யாசித்தார்.

பிருகு அவ்வாறு யாசிக்கும் பொழுது அவர்கள் நலம் பெறவேண்டுமென்று எண்ணிச் செல்வார். அவர் வந்துவிட்டுச் சென்றபின், அவர்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாகின்றது.

அதே சமயத்தில், அவர்கள் பட்ட துன்பங்கள் நீங்கி அங்கே நல்லதாகும் பொழுது, “அன்று பிருகு வந்து சென்றார், அதிலிருந்து என் குடும்பம் ஷேமமாக இருக்கின்றது” என்று மகிழ்ந்த உணர்வை அவர்கள் வெளிப்படுத்துகின்றார்கள்.

நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று அவர் ஒருவர் பிரார்த்திக்கின்றாரோ, இந்த உணர்வின் தன்மை கொண்டு நீங்கள் நலமாகும் பொழுதுதான் அந்த நிலை வரும். அதனாலேதான் கொங்கணவ மாமகரிஷியின் நிலைகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

நம்மையறியாது துன்பத்தைக் கொடுக்கும் அந்த விஷத்தன்மையை மாற்றுவதற்கு, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்து நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அசுத்தத்தை நீக்க வேண்டும்.
3. ஒவ்வொரு ஞானியும் மக்களின் மகிழ்வான உணர்வைச் சுவாசித்துத்தான் விண் சென்றார்கள்
அப்படி நீக்கியபின், நம் பேச்சின் நிலைகள் கொண்டு மற்றவர்கள் நலமாக வேண்டும் என்ற நிலையில்
“நீங்கள் நன்றாக இருப்பீர்கள்” என்று சொல்லும் பொழுது,
“அவரைப் பார்த்துவிட்டு வந்தேன்,
எனக்கு நன்றாக இருக்கின்றது” என்ற வாக்கினை
நாம் அவர்களிடமிருந்து பெறுகின்றோம்.
ஆக, மனிதனுக்கு மனிதன் இந்த மகிழ்வான உணர்வின் தன்மையை நாம் பெறுகின்றோம். இதுதான் ஒவ்வொரு ஞானியும் செய்த நிலைகள்.

உங்கள் உடலுக்குள் எதை எடுத்துச் சுவாசிக்கின்றீர்களோ, அந்த உணர்வின் மூச்சலைகள் உங்கள் துன்பத்தைப் போக்கும். எந்த உணர்வின் தன்மையை நீங்கள் எடுக்கின்றீர்களோ, இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் ஈசனாக நின்று இயக்கும் உயிரான நிலைகளுக்கு அபிஷேகம். நீங்கள் கோவிலுக்குச் சென்று ஆராதனைகள் செய்வதல்ல.

ஆகவே, காற்றிலிருக்கக்கூடிய நல்ல உணர்வை நீங்கள் சுவாசிக்கும் பொழுது, உங்கள் உயிரிலே மோதித்தான் அந்த உணர்வின் அலைகள் உங்களுக்குள் இயங்குகின்றது. அப்பொழுது,
உங்கள் உயிரான ஈசன் மகிழ்கின்றான்.
அந்த மகிழ்ச்சியின் தன்மை வரும் பொழுது உடலும் மகிழ்கின்றது.

அந்த மகிழ்வான உணர்ச்சிகள் மற்றவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. அந்த மகிழ்ச்சியின் தன்மையேதான் மற்ற எல்லா நிலைகளுக்கும் செயல்படும். எமது அருளாசிகள்.