ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 21, 2013

அரசன் அன்று கேட்பான்... தெய்வம் நின்று கொல்லும்...


1. ஒரு மனிதனின் சாப அலை மிகக் கடுமையானது
ஒரு சாதாரண மனிதனை நாம் துன்புறுத்தப்படும் பொழுது, அவன் வேதனையாகச் சொல்லும் பொழுது அந்தச் சாபம் நம்மைச் சாடும்.

அப்பொழுது அவன் எவ்வளவு வேதனைப்படுகின்றானோ
அந்த வேதனையான எண்ணங்கள் நம்மைச் சாடும் பொழுது,
நம்மையறியாமேலே அது வேலை செய்யும்.

ஒருவருக்குத் துன்பம் ஊட்டவேண்டுமென்று நாம் எண்ணிய உணர்வுகள் நமக்குள் சிறுகச் சிறுக விளைந்து, நமக்குத் துன்பத்தை ஊட்டும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.
2. அரசு அன்று செய்யும்
ஆக, நாம் எண்ணியதை நமக்குள் நிறைவேற்றிக் கொடுப்பவன் அவனே. ஆனால், உணர்வின் செயலாக “அரசு அன்று செய்யும்”
நான் எண்ணும் உணர்வுகள் என் உணர்வாகின்றது.
என் உணர்வின் தன்மை ஆணையிடப்படும் பொழுது,
இந்த உணர்வை உடனடியாக நாம் செய்கின்றோம்.

ஒரு பேதையாக இருந்தாலும், அவர்கள் உணர்வுக்குள் எடுத்துக் கொண்ட வேகமான வாக்குகள் அது சாடிப் பேசும் பொழுது, கடுமையாகத் திட்டிப் பேசினால் தாங்காத நிலைகள் கொண்டு “நீ நாசமாகப் போய்விடுவாய்” என்பார்கள்.

அவனிடம் உதைப்பதற்குச் சக்தியில்லை. அவனின் உதைக்குப் பயந்து அந்த ஆத்திரத்தில்,
“இவன் உருப்படுவானா?
இவன் எப்படியெல்லாம் போகப் போகிறான் பார்” என்று சொல்வான்.

அவனுக்கு இன்னும் ஆத்திரம் வந்து, “உனக்கு இவ்வளவு தூரம் வந்துவிட்டதா” என்று சொல்லி மேலும் அடிப்பான்.

மீண்டும் அந்த வேதனையான உணர்வின் நிலைகள் இந்த ஆத்திரம் வருபவனுடைய உடலில் செருகப்பட்டு இந்த உணர்வு முழுவதும் இவன் உடலிலே சென்று சேர்ந்துவிடும். அவ்வாறு சேர்ந்துவிட்டால், இந்த உணர்வின் தன்மை நச்சுத்தன்மையாக மாறிவிடும்.
இது அரசின் தன்மை.
ஆக உடனுக்குடன் செயல்படுவதுதான் அரசின் தன்மை.
3. தெய்வம் நின்று கொல்லும்
தெய்வத்தின் தன்மை என்பது,
அந்தப் பேதையால் எண்ண முடியவில்லை.
சாபத்தின் சக்தி - தனக்குள் எடுத்துக் கொண்ட
உணர்வின் பயம்தான் அங்கே தெய்வமாகின்றது.

இப்படிச் செய்தானே, அவன் உருப்படுவானா என்று எண்ணும் போது அந்த உணர்வின் தன்மை அந்த உடலுக்குள் சென்று, அது சிறுகச் சிறுக விளைந்து, பல நோய்களாகி செயலற்றதாக்கிவிடும். இன்று எவ்வளவு பெரிய நிலைகளிலிருந்தாலும், சில முடியாத தன்மைகள் வரும் பொழுது பல நோய்கள் இப்படித்தான் வரும்.

ஆக, “தெய்வம் நின்று கொல்லும்”. நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை என் உணர்வுக்குள் அது சென்றபின் தெய்வமாகின்றது, சக்தியாகின்றது. அந்தச் சக்தியினுடைய நிலை சிறுகச் சிறுக அதன் செயலாக்கத்தை நல்லதானாலும் சரி, கெட்டதானாலும் சரி நிச்சயம் காட்டியே விடும்.

அரசு அன்று கேட்கும், நாம் எடுக்கும் உணர்வின் நிலைகள் ஆணை. ஆணையிட்டபடி நாம் உடனடியாகச் செயல்படுகின்றோம். அது அரசாகின்றது. ஆனால், எடுத்துக் கொண்ட சக்தி என் உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது தெய்வமாகின்றது.

அரசன் அவன் ஆட்சியினுடைய நிலைகளில் ஆட்சி புரிந்தான், தீயதையெல்லாம் பழிதீர்த்தான். அவன் எதிரிகளினுடைய நிலைகளை அழித்தான்.

ஆனால், அவனுக்குள் அவன் எடுத்துக் கொண்ட அந்த உணர்வின் தன்மை அந்த அரசை அழித்தது. அவனது சுகபோகத்தை அழித்தது.

அவனுக்குள் எடுத்துக்கொண்ட பிறரது வேதனையான உணர்வுகள் பிரம்மமானது. பிரம்மத்தின் நிலைகள் கொண்டு அவனுக்குள் சிருஷ்டித்துவிடுகின்றது

அரசு அன்று கொல்லும் தெய்வம் நினறு கொல்லும் என்று மெய்ஞானிகள் இதைத்தான் சுருக்கமாகச் சொன்னார்கள்.

நாம் எடுக்கும் உணர்வுகள் அனைத்தும் கடவுள்.
நாம் எண்ணும் எண்ணமே இறைவன்.
எந்த உணர்வின் சக்தியை நமக்குள் சேர்க்கின்றோமோ அது தெய்வம். நாம் பேசும் உணர்வின் தன்மைகள் நமக்குள் சுவாசித்தது தெய்வமாகச் செயல்படுகின்றது.
4. பிறரைத் துன்புறுத்தினால் முன் பகுதி ஒன்றும் தெரியாது, பின் பகுதி தாங்க முடியாத வேதனையாகும்
சாதாரணமாகப் பேசிவிடலாம், திட்டிவிடலாம். பிறருக்குத் தெரியாமல் பொருள் எடுத்துச் செல்லலாம். அவர்கள் பார்க்கவே வேண்டாம். சம்பாதித்தவனுடைய பொருளை மற்றவர் எடுத்துச் சென்று சுகமாக இருக்கலாம்.

ஆனால், அந்தப் பொருளுக்கு உரியவன், “எவனோ எடுத்துச் சென்றுவிட்டான், பாவி” என்று வேதனைப்பட்டு எண்ணுகின்ற பொழுது,
அந்தப் பொருளை கை பட்டு திருடியவன் எடுக்கும் பொழுது,
இவன் வேதனையின் உணர்வுகள் அங்கே சேருகின்றது.

ஆக, எந்த வேகத்தில் பொருளை இழந்தவன் இங்கே வேதனைப்பட்டு சாபமிடுகின்றானோ, அந்த உணர்வுகள் அங்கே சென்று பொருளை அபகரித்தவன் முதல் பகுதி நன்றாக இருப்பான்.

பின் பகுதி அவன் உடலிலே தீய வினைகளைச் சேர்த்து அனைத்திலுமே நசுங்கும் தன்மைதான் வரும். கடைசியிலே வேதனையைத் தாங்க முடியாத நிலைகள் ஆகிவிடும்.

இதுதான் அரசன் அன்று கேட்கும், தெய்வம் நின்று கொல்லும். என்பது. நாம் எடுத்துக் கொண்ட சாபத்தின் நிலைகள் உடலிலே சிறுகச் சிறுகச் சேர்ந்து, பின் விளைவு அதனுடைய செயல்களை அனுபவித்தே ஆக வேண்டும்.

ஏனென்றால், நாம் எதை எண்ணுகின்றோமோ,
அதை நம் உயிர் உடனே சமைத்து
அதற்குத் தகுந்த மாதிரி செயல்படுத்துகின்றது.

நாம் திருட வேண்டுமென்றால் அந்த உணர்வைச் சுவாசிக்கும் பொழுது அது திருட்டுத்தனத்திற்கு வழி காட்டுகின்றது. ஒருவனை உதைக்க வேண்டுமென்றால், அந்த உணர்வின் தன்மை எனக்குள் இயக்கி, அவனை உதைப்பதற்குண்டான வழியையும் காட்டுகின்றது.

ஆக, எந்த எண்ணத்தை எண்ணுகின்றோமோ அதை நம் கண்ணுக்குள் செலுத்துகின்றோமோ மற்றவர்களிடத்தில் சிக்காதபடி எனக்குள் மாற்று நிலைகள் கொண்டு வருவதற்கு, என் கண் உதவுகின்றது.

எல்லா வகையிலும் அது உதவினாலும் கூட, இந்த உடலின் உணர்வுக்குள் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தனமைகள் அனைத்தும் இந்த உடலுக்குள்
சுவாசிக்கச் செய்து,
உமிழ்நீராகச் சேர்ந்து
அந்த அணுவின் சக்தியாக எனக்குள் சேர்ந்துவிடுகின்றது.
அவ்வாறு சேர்ந்தபின், உடலில் எல்லாமே அணுவாக மாறிவிடுகின்றது.

அவர்கள் எந்தெந்த வழிகளில் துன்பப்பட்டார்களோ, அந்தத் துன்பமான உணர்வுகள் அனைத்துமே, நாம் செய்யக்கூடிய தவறின் உணர்வுகள்  நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களில் சிறுகச் சிறுக முலாம் பூசி எல்லா வியாதியும் வந்துவிடுகின்றது.

நான் முன் பகுதி மகிழ்ச்சியான நிலைகளைச் செய்தேன், ஒருவன் துன்பப்படுபதைக் கண்டு மகிழ்ந்தேன். பின் நாளில் அந்தத் துன்பம் எனக்குள் வந்துவிடுகின்றது. அதாவது, அவர்கள் என்னென்ன வேதனைப்படுகிறார்களோ அந்த வேதனை உணர்வுகள் எல்லாம் நம் உடலில் நிச்சயம் வேலை செய்யும். யாரும் தப்பமுடியாது.

இதையெல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டு,
தெளிந்து,
தெரிந்து,
தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்கே
இதை யாம் உபதேசிக்கின்றோம்.