ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 21, 2013

சந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)

இங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அங்கு உருவத்தைக் காட்டியுள்ளார். இதைப் புத்தகத்தில் கூடப் போட்டுள்ளார்கள்.

அதைக் காட்டுவதற்குத்தான் எம்மைக் கூப்பிட்டார் குருநாதர். “இங்கே வாடா, ஒரு ரகசியம் என்றார்.

என்ன ரகசியம் சொல்லப் போகிறார் என்று எண்ணி சரி என்றேன். ஏதோதோ புரியாத நிலைகளில் சொல்லிக் கொண்டிருந்தார். மேலும் என்னைத் திட்டிக் கொண்டிருந்தார். எனக்கு ஒன்றும் புரியவே இல்லை. எனவே, நான் சங்கடமாக வெறுப்பாக இருந்தேன்.

ஒரு கொளிஞ்சி செடி இருக்கின்றது. அதை அப்படியே “வேரோடு பிடுங்குடா என்றார் குருநாதர்.

நான் இழுத்து இழுத்துப் பார்க்கிறேன், முடியவில்லை.

“இவ்வளவுதான் உன்னுடைய வலுவா? இன்னும் கொஞ்சம் வலுவாக இழுடா எனறார்.

இழுத்தவுடனே, “டபார் என்று மல்லாக்க நான் கீழே விழுந்தேன். பார்த்தால் அப்படியே வான மண்டலம் தெரிகின்றது.
முதலில் குருநாதர் எம்மிடம் என்னென்ன சொன்னாரோ,
பல பரிபாஷைகளில் சொன்னது அனைத்தையும்
உணர்வால் எமக்கு உணர்த்துகின்றார்.

அங்கே சந்திர மண்டலத்தில், ராக்கெட்டில் சென்று இவர்கள் இறங்குகிறதெல்லாம் இங்கிருந்து தெரிகிறது. (ஆம்ஸ்ட்ராங்க், ஆல்ட்ரின்). இறங்கி அவர்கள் காலடி எப்படி எடுத்து வைக்கிறார்கள் என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.

அடுத்து, அந்த இருவருக்கும் எதிரில் நின்று இதே உருவத்தை (குருநாதர் உருவை) அங்கே அவர்களுக்கும் காட்டுகின்றார்.

ஆக, அங்கேயும் என்னால் செல்ல முடியும், என் உணர்வின் அலைகளைப் பாய்ச்சி, இந்த உணர்வின் அலையால் அங்கே சந்திர மண்டலத்திற்குள் குதிக்க முடியும் என்று ஈஸ்வராய குருதேவர் காட்டுகின்றார்.

அதாவது கோள்களுக்குள் செல்ல முடியும்.
கோள்களின் ஈர்ப்புக்குள் சிக்க முடியும்.
ஆனால், சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்றால்,
அங்கே பொசுங்கிவிடும்.

இந்த உடலுடன் நாம் சப்தரிஷி மண்டலத்திற்குள் சென்றால் பொசுங்கிவிடுவோம், ஆகவே, உடலுடன் அங்கே செல்ல முடியாது என்பதை உணர்த்துகின்றார் குருநாதர்.