ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 17, 2013

யாம் என்ன செய்கின்றோம்? நீங்கள் செய்யவேண்டியது என்ன?

1. உபதேசம் கேட்பவர்கள் பெரும்பகுதி என்ன எண்ணுகிறார்கள்?
யாம் உபதேசிப்பது அனைத்தையும் கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். கடைசியிலே “சாமி, என் கஷ்டம் என்னைவிட்டுப் போகவே மாட்டேன் என்கிறது” என்று அதை தியானிப்பவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

நான் சாமியை எண்ணிக் கொண்டே கொண்டே இருக்கின்றேன். எனக்கு, சாமி செய்தே கொடுக்க மாட்டேன் என்கிறார் என்பார்கள். ஆனால், யாம் உபதேசித்ததின் நிலைகளை எடுத்து, செய்து பார்க்க வரமாட்டார்கள்.

சாமி சொன்னதைச் செயல்படுத்துவதை விட்டுவிட்டு
சாமி செய்து கொடுக்க மாட்டேன் என்கிறார்
என்று சொல்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

ரேடியோ, T.V. ஒளிபரப்பைக் கேட்க வேண்டுமென்றால், இங்கே ரேடியோ, T.V. தயார் நிலையில் இருக்க வேண்டும். இல்லையென்றால் வேலை செய்யாது. அந்த அலைகளைக் கேட்க முடியாது.

எத்தனையோ ஸ்டேசன் இருக்கிறது. மனிதனான நாம் சோர்வான ஸ்டேசனைக் கேட்டுக் கொண்டேயிருந்தால், இன்பமான ஸ்டேசனை எங்கே கேட்கப் போகிறோம்?
மகிழ்ச்சியைத் தரும் ஸ்டேசனை
திருப்பி வைத்தால்தானே கேட்க முடியும்.
திருப்பி வைப்பதற்கே மனது வரமாட்டேன் என்கிறது.
2. யாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? நீங்கள் செய்யவேண்டியது என்ன?
யாம் சாப்பாடுதான் போட முடியும்,
அதை எடுத்து நீங்கள் சாப்பிட்டால்தானே
உங்களுக்கு நல்லதாகும்.

யாம் சாப்பிட்டால் எமக்குத் தான் பசி அடங்கும். உங்கள் பசி அடங்கவேண்டும் என்றால், நீங்கள் அவசியம் அந்த அருள் உணர்வுகளை எடுத்தே ஆக வேண்டும்.  

பல உபதேசங்களின் வாயிலாக அந்த மெய்ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்திருக்கின்றோம். ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தையும் கையிலே கொடுத்திருக்கிறோம்.

ஒருவர் எண்ணும் பொழுது, உள்ளத்தால் கிளர்ச்சியின் தன்மைகள் மாறி அவர்களது நோய்களையும் மற்ற நிலைகளையும் போக்குவதற்கு யாம் ஒவ்வொரு நிமிடமும் எத்தனையோ வேலைகளைச் செய்கிறோம். இரவு மற்றும் அதிகாலையில் 04.30 மணிக்கெல்லாம் அதே வேலையாக இருக்கின்றோம்.

ஒவ்வொரு நிமிடமும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும், அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இது கெட்டதை நீக்குகிறது.

ஆக, அந்த அருள் உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்குள் சேர்கின்றது. அப்பொழுது நீங்கள் எங்கு சென்றாலும் வலுகொண்டதாகச் செயல்படுத்த முடியும். எமது அருளாசிகள்.