ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 9, 2013

தியானம் செய்வது மிகவும் எளிதானது - ஞானகுரு

தியானம் என்றால் என்னமோ என்று நினைக்கிறோம். சதா நாம் “மகா காளி, மகா காளி” என்று அந்த மந்திரத்தைச் சொல்லி, போற்றி போற்றி என்று சொல்லிக் கொண்டிருந்தால் கோபமோ, ஆத்திரமோ வரும், அது ஜெபம்.

ஜெபம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். மந்திரத்தைச் சொன்னால் அந்த உணர்வுகள் சீக்கிரம் வந்துவிடும். ஒருவர் நம்மைத் திட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். என்னைத் திட்டிவிட்டார் என்ற உணர்வை எடுத்துவுடன் சோர்வாகும். அதுவும் தியானம்தான்.

அவர் திட்டிவிட்டுச் சென்றுவிட்டாலும், அவர்கள் திட்டியதை மனதில் ஏற்று என்னைத் திட்டினார்களே, என்னைத் திட்டினார்களே என்று மனதில் எண்ணிக் கொண்டிருந்தால் அதுவும் தியானம்தான்.

ஆக, இப்படிக் கேவலமாகப் பேசிவிட்டார்களே என்று எண்ணும் பொழுது சோர்வினுடைய நிலைகள் வரும். அவர்களை எண்ணும் பொழுதெல்லாம் ஆத்திரம் வரும்.

அந்த எண்ணத்தினுடைய நிலைகள் வரும் பொழுது, வியாபாரத்தில் ஒருவர் வந்து சரக்கு கேட்கும் பொழுது, இங்கே வெறுப்பு வந்துவிடும். இதுவும் தியானம்தான். அப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்? நல்லதையே விலக்கிக் கொண்டுவருகின்றோம்.

இதைப் போன்ற தீமையான நிலைகள் வருவதை, இந்த அசுத்தத்தை நீக்கக் கூடிய மெய்ஞானிகளின் அருள் ஒளியை நாம் பெறவேண்டுமென்று தியானிக்க வேண்டும்.

ஆக, எதைத் தியானமாக்க வேண்டும்?

ஆழமான நிலைகொண்டு,
வெகுதூரத்தில் இருக்கக்கூடிய
அந்த மெய்ஞானிகளின் உணர்வை இழுத்து
நமக்குள் சேர்க்கச் செய்ய வேண்டும்.

இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

யாம் உபதேசத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் நோக்கம், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படியெல்லாம் எண்ணி  இந்த மெய்ஞானிகளின் உணர்வைப் பதிவு செய்து கொள்கின்றீர்களோ
இதை நினைவுபடுத்தும் பொழுது,
அந்த ஆற்றல்மிக்க நிலைகள் செயல்படுகின்றது.
அது சுலபமாக வந்துவிடுகின்றது.

அதாவது, ஒருவன் நம்மைத் திட்டினான் என்றால், திட்டியவன் உணர்வை நமக்குள் பதிவு செய்து கொள்கின்றோம். அவன் சென்றபின், என்னை இப்படித் திட்டினான் என்று அவனையே எண்ணி எண்ணி, அதையே சுவாசிக்கின்றோம். அவன் எண்ணியபடி அனைத்துமே நமக்குக் கெடுதலாக மாறுகின்றது.

அதைப் போன்றுதான், நமது குருநாதர் காட்டிய நிலைகளில் மெய்ஞானிகளின் உணர்வவை நீங்கள் பதிவு செய்துகொள்ளுங்கள். தீமைகள் வரும் பொழுதெல்லாம் அந்த மெய்ஞானிகளை எண்ணி, அருள் உணர்வுகளை இழுத்துச் சுவாசியுங்கள்.

அந்த மெய்ஞானிகள் எப்படி தீமைகளை வென்று ஒளியின் தன்மை பெற்றார்களோ, அவர்களின் உணர்வுகள் நம்மையும் அந்த நிலையை அடையச் செய்யும்.
இதில் ஒன்றும் சிரமமே இல்லை.
மிகவும் எளிதில் பெறமுடியும் எமது அருளாசிகள்.