ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 5, 2013

நம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி

முன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான்.

ஆறாவது அறிவின் தன்மையைத் தன் உடலுக்குள் எடுத்து, உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றும் நிலைகளுக்குத்தான், அன்று மனதைத் தங்கமாக்கும் நிலைகளில் செயல்பட்டார் கொங்கணவர்.

போகமாமகரிஷி, எப்படி மனித உடலில் விஷத்தை நீக்கி மனிதனுடைய உணர்வின் தன்மையைத் தான் பெறவேண்டுமென்று பழனியிலே செய்தாரோ, இதைப் போலத்தான் திருப்பதியிலே கொங்கணவ மாமகரிஷி செய்தார்.

பின் வந்த அரசர்கள்தான், இதையும் பல நிலைகளுக்கு மாற்றிவிட்டார்கள். திருப்பதியிலே பொருளாசையைத்தான் காட்டிச் சென்றுவிட்டார்கள். இன்று நாம் என்ன செய்கின்றோம்?

தங்கத்தைக் கொண்டு போய் திருப்பதியிலே அபிஷேகம் செய்துவிட்டு, எனக்குத் தங்கத்தைக் கொடு என்கிறோம். தங்கத்தை உண்டியலிலும் போடுகின்றோம். வியாபாரத்திற்கு வருபவரிடம் திருப்பதிக்குப் போகிறோம் என்று காணிக்கையாக காசு வாங்கிவிட்டு, அங்கே கொண்டு போய் செலவழித்துவிட்டு நஷ்டமாக வருகின்றோம்.

ஆக, லாபம் ஜாஸ்தி வந்துவிட்டால் உனக்குக் கொஞ்சம் பங்கு கொடுக்கின்றேன் என்று கொண்டு சொல்கிறோம். ஆனால்,
இந்த மன சுத்தத்தைப் பங்கு போடுவதற்கோ,
இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் மனமோ
அங்கே வருவதில்லை. காரணம் மனிதன் தன் வாழ்க்கைக்குத்தான் இவையெல்லாம் பயன்படுத்த முடிந்ததே தவிர மெய் ஒளியைக் காணமுடியவில்லை.

கொங்கணவ மாமகரிஷி மனதைத் தங்கமாக்கினார். ஒருவருக்கொருவர் பாசமும் பரிவும் செலுத்தப்படும் பொழுது, அந்தப் பாசத்தினாலே எல்லாமே கூட்டமைப்பாக வருகின்றது. நாம் ஒருவருக்கொருவர் நமக்குள் வரக்கூடிய துன்பத்தின் நிலைகளை நீக்கிவிட்டால், மனம் தங்கமாகின்றது.
நமக்குள் மனம் தங்கமாகும் பொழுது
நாம் நினைத்த காரியங்கள் செயலாகின்றது.

ஆகவே, நாம் அனைவரும் கொங்கணவ மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம். தங்கத்தைப் போன்ற மங்காத மனம் பெறுவோம். எமது அருளாசிகள்.