விஞ்ஞான அறிவு கொண்டு கம்ப்யூட்டரில் ரெக்கார்டு செய்து கொள்கின்றார்கள். தட்டி விட்ட பின் அதனுடைய இயல்புகளைத் தெரிந்து கொள்கின்றனர்.
மனிதர்களாக இருக்கும் நாமும் இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள் என்றால் உற்று நோக்கி… அதைப் பதிவு செய்து கொள்கின்றோம்.
(கம்புயூட்டரில் பதிவானதைத் தட்டுவது போல்) சண்டையிட்டவர்களை மீண்டும் எண்ணியுடன் நமக்குக் கோபம் வருகிறது. அந்த நேரத்தில் நம் நல்ல காரியங்களைக் கெடுக்கின்றது.
கோவிலுக்குச் சென்று வணங்குகின்றோம். எண்ணியபடி நடக்கவில்லை என்றால் அதைப் பதிவு செய்து கொள்கின்றோம். எப்படி…! “என்னத்தைச் சாமி கும்பிட்டோம்…? ஒன்றும் நடக்கவில்லையே…!” என்று அதை எண்ணுகின்றோம்
அந்த ரெகார்டைத் தட்டியவுடன் சோர்வடைந்து… நல்லதையே எடுக்க முடியாது போய் விடுகின்றது
ஏனென்றால் எண்ணிய உணர்வுகளைத் தான் எலும்புகளில் (கம்ப்யூட்டர் போல்) ரெக்கார்ட் செய்து வைத்துக் கொள்கிறது. இப்படி எண்ணிலடங்காத பதிவுகள் நமக்குள் உண்டு.
ஒன்று விஞ்ஞானம் அதை எல்லாம் நிரூபிக்கின்றது…!
அதே போன்று தான் சண்டை போடுவதையும் பதிவாக்குகின்றீர்கள் குடும்பத்தில் வந்த கஷ்டங்களையும் பதிவாக்குகின்றீர்கள் அந்தந்தப் பதிவை எண்ணும் பொழுது அதன் வழியே நடக்கிறது.
அதே சமயத்தில்… அத்தகைய கஷ்டத்திலிருந்து மீள வேண்டும் என்று நிலை வரும் போது… “கஷ்டங்களை மறந்து…” அந்த மகரிஷிகளை அருள் சக்தி பெற வேண்டும் என்று உணர்வை எடுத்தால் அருளைப் பெருக்குகின்றோம்… சிந்திக்கும் ஆற்றலையும் அது கொடுக்கின்றது. “சிரமங்களை மீட்டுத் தருகின்றது நம்முடைய எண்ணம்…”
நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.
உதாரனமாக துணி எடுக்க ஜவுளி கடைக்குச் செல்ல வேண்டும் என்று போகும் போது அந்த நேரத்தில் குழந்தை வந்து அடம்பிடித்தால் என்ன நடக்கிறது…?
ஏன்டா… இப்படி வெளியே போகும்போது அடம்பிடிக்கின்றாய்…? என்று இந்த வெறுப்படைந்தால் போதும். கடைக்குச் சென்று சரியான துணியை நீங்கள் எடுத்துக் கொண்டு வாருங்கள் பார்ப்போம்…!
இந்த சங்கடம் தான் அங்கே வேலை செய்யும்… வெறுப்பு உணர்வு தான் முன்னாடி கண்களில் வரும்.
நல்ல துணியை எடுத்துப் போட்டாலும் “இது வேண்டாம்… இது வேண்டாம்…” என்று சொல்லிக் கொண்டிருப்போம். கடைசியில் வெறுப்பு அதிகமாகி “சடைத்துக் கொண்டு… சரி இதையாவது கொடுங்கள்…” என்று எடுத்து வருவோம்.
வீட்டில் மற்றவர்களோ சந்தோஷமாக இருப்பார்கள். துணியைக் காண்பிப்போம். “என்னங்க… போயும் போயும் இந்தத் துணியைப் போய் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறீர்களே…!” என்பார்கள்.
இல்லைங்க… இதுதான் நல்லது என்போம் நன்றாகப் பாருங்கள் என்பார்கள். பார்த்தாலும் அன்றைக்கு அது தெரியாது.
ஆனால் மறுநாள் காலையில் பார்த்தால்… சனியன்…! போகும்போது குழந்தை குறுக்கே வந்து அடம்பிடித்தான். எத்தனையோ தொல்லை கொடுத்தான் என்று மீண்டும் “சனியன்…” என்று தான் நாம் சொல்வோம்.
இந்த உணர்வுகள் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்த வெறுப்பு வரும். இந்த உணர்வோடு அன்றைக்கு மற்ற காரியங்கள்… ஒரு சமையலையே செய்தாலும் (துணி எடுத்ததை எண்ணி) சனியன் என்று எண்ணிக் கொண்டு காயை அறுத்துக் கொண்டிருந்தால் போதும். அந்த உணர்வு என்ன செய்யும்…?
கையில் எடுத்து இப்படிப் பிடித்து அப்படி அறுப்பதற்குப் பதில் அது சிறிதளவு சாய்ந்தால் போதும் கையிலே அறுபட்டு விடும். என்ன கிரகமோ…? என்று சொல்வோம். இதைப் பார்க்கலாம்.
ஆக… கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். மனித வாழ்க்கையில் இயக்கப்படும் உணர்வின் இயக்கங்கள் தான்.
ஏனென்றால் இந்த உடலில் எத்தனை நாள் வாழுகின்றோம்…? இன்றைய செயல் நாளைய சரீரம்.
ஆகவே இது போன்ற தீமைகளை நீக்க அருள் ஞானிகள் உணர்வுகளை… உங்களுக்குள் பெறச் செய்வதற்கு தான் இந்த உபதேச வாயிலாக தொடர்ந்து “ரெக்கார்ட் செய்கின்றேன்…”
எந்த அளவிற்கு நீங்கள் இதைக் கூர்ந்து பதிவு செய்கிறீர்களோ அந்த அளவுக்கு… அது திரும்ப எண்ணும் பொழுது “உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்”
குருநாதர் காட்டிய வழியில் மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்றேன். அதை உங்களில் பதிவாக்குகின்றேன் நீங்கள் இந்தப் பதிவை எடுத்துக் கொள்ளலாம்.
பையனோ குடும்பமோ தொழிலோ சரியில்லை என்றால் அதை ரெக்கார்ட் செய்கின்றீர்கள். எப்போது பார்த்தாலும் இப்படியே நடக்கின்றது என்றும் பதிவு செய்து கொள்கிறீர்கள்.
உதாரணமாக… மனைவி மீது கொஞ்சம் வெறுப்பு இருந்தால் அதைப் பதிவு செய்து விட்டால் போதும். “தண்ணீர் கொண்டு வா…” என்போம்.
அவர்கள் வேலையில் கவனமாக இருக்கும் போது சரியாகக் காதில் விழுகாது. “எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான்…! நான் சொன்னால் என் மனைவி கேட்பதே இல்லை…! என்று கோபமாகத்தான் அடுத்துப் பேச வரும்.
அதே போன்றுதான் மனைவியும் கணவனை பார்த்து… “ஏதாவது ஒன்று என்றாலும் பொறுமை இல்லாதபடி உடனே இவருக்குக் கோபம் வந்து விடுகிறது. என்னை குற்றவாளியாகவே இவர் பார்க்கின்றார். இந்த உணர்வு தான் குடும்பத்தில் வளர்கின்றது.
இது எல்லாம் சந்தர்ப்பங்கள் தான்…!
அதை மாற்றி அமைப்பதற்குத் தான் அந்த ஞானிகள் உணர்வினைப் பெறச் செய்வதற்கு உபதேசமாக ரெக்கார்ட் செய்கிறோம்.
இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி. நீங்கள் அதை இச்சைப்பட்டு வளர்த்துக் கொண்டால் அது கிரியையாகி அந்த ஞானமாக நல்வழியில் உங்களை வழி நடத்தும்.
ஆகவே அந்தத் தெய்வீக பண்புகளை வளர்த்துப் பழக வேண்டும். அருள் ஞானிகள் உணர்வை வளர்த்தால் நாம் தெய்வமாகின்றோம். நாம் எல்லாம் தெய்வமாக ஆவதற்குத் தான் ஞானிகள் இத்தகைய தத்துவங்களை கொடுத்தார்கள்